மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

0
299

மாநில அரசின் நிதித் தேவையில் பெருமளவு மதுவிற்பனை மூலம் கிடைப்பதாக தமிழ்நாடு அரசு நம்புகிறது. மதுபான ஆண்டு விற்பனை 45 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடியாக உயரும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

வருவாயை துண்டாடாமல், மதுக்கடை இல்லாத மதுவிற்பனையை சாத்தியமாக்க முடியும்.
மதுவிற்பனை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததுத்தான் வருகிறது. மது விற்பனை புள்ளிவிவரப்படி, மேலும் பல லட்சம் பேரது வாழ்க்கையை இருளில் தள்ளியிருக்கிறது, தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி, சாலை விபத்துகளில் தொடர்ந்து தமிழ்நாடுதான் முதலிடம். மதுவால் கணவனை இழந்த இளம்பெண்கள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர். மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மருந்தாக, எப்போவதாவது விருந்தில் இடம்பெற வேண்டிய மது, உணவின் அங்கமாக மாறிவிட்டதையே இது காட்டுகிறது.

Also Read : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!

டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய்க்கு பங்கம் ஏற்படாத வகையில், மதுக்கடைகளை, மதுக்கூடங்களை மூட முடியும். மக்கள் நலன், சமுதாய நலன் என்ற கோணத்தில் நுணுகிப் பார்க்கும்போது இது சாத்தியமே. மது இல்லா தமிழகம் இப்போதைக்கு சாத்தியம் இல்லாவிட்டாலும், மதுக்கடை இல்லா தமிழகம் சாத்தியப்படுத்த முடியும். விற்பனையை முறைப்படுத்துவதே, இந்த முயற்சிக்கான மூலதனம். இதன் மூலம் வருவாய்க் கசிவை தடுக்க முடிவதுடன், முறைகேடுகளை ஒட்டுமொத்தமாகக் களைய முடியும்.

மதுக்கடைகளை மொத்தமாக மூடிவிட்டு, வீடுகளுக்கே சென்று(டோர் டெலிவரி) மது விநியோகம் செய்வதுதான் திட்டம். இதனால் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம். முதலில் மதுவிற்பனைக்காக அரசு செலவிடும் விற்பனைச்செலவு மிகக் கணிசமாகக் குறையும். கடை வாடகை, மதுக்குப்பிகளை ஆங்காங்கே கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்துச் செலவு, ஏற்று – இறக்குக் கூலி என நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிகளில் பணத்தை மிச்சப்படுத்தப்படுத்த முடியும்.

Also Read : #OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

மதுவிற்பனை கடைகளை மூடும்போது, அந்தக் கடைகளுக்கு முன்தொகையாகக் கொடுக்கப்பட்ட வைப்புதொகை பல கோடிகள் அரசுக்கு திரும்பக் கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட தொகையில் மட்டுமே மது விற்பனையாகும்.

முறைப்படுத்தப்பட்ட மது விற்பனை என்ற அடிப்படையில், மது விநியோகத்துக்காக, புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தை அரசு நியமிக்க வேண்டும். (ஒரு மதுபாட்டிலுக்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில்) தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்து, அதை மாவட்ட வாரியாக அந்த நிறுவனத்திடம் சேர்க்கும் வரையில்தான் அரசின் பொறுப்பு.

தனியார் நிறுவனமானது, அரசு வழிகாட்டுதலுடன் மது விற்பனைக்கான ஆன் லைன் செயலியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மது வாங்க விரும்புவோர் ஆதார் எண்ணை பதிவிட்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வயதை உறுதி செய்யும் அடையாள சான்றுடன் வாடிக்கையாளராக பதிவு செய்துகொள்ள வேண்டும். (21 வயதுக்குக் கீழானவர்களை நிராகரிக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட வேண்டும்). செயலியை பயன்படுத்தத் தெரியாத அல்லது முடியாதவர்களுக்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்ய வேண்டும்.

மது வேண்டுவோர், ஆதார் எண்ணை தெரிவித்து, தேவையான மதுவகைகளை வாங்கிக் கொள்ளலாம். சட்டம் அனுமதித்துள்ள அளவுக்கு மிகாமல் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் மதுவை விநியோகிக்கலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மதுபானம் டோர் டெலிவரி செய்யப்பட வேண்டும்(சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வது போன்று). மதுபாட்டிலுக்கான தொகை பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மட்டுமே இருக்க வேண்டும். இதன்மூலம் மதுக் குடிப்பகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு முறைகேடாக மது விநியோகம் செய்வது தவிர்க்கப்படும்.

Also Read : அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive

தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்து மாவட்ட கிட்டங்கிகளுக்கு மது பாட்டில்களை கொண்டு சேர்ப்பது வரையிலான அனைத்து பணிகளுக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். எஞ்சியிருப்பவர்களை தகுதிக்கு ஏற்றார்போல டாஸ்மாக் நிறுவனத்தின் வேறு பணிகளிலோ அல்லது வேறு துறைகளிலோ நியமிக்கலாம். டாஸ்மாக் நிறுவனத்துக்குச் சொந்தமாக மாவட்டங்களில் உள்ள கிட்டங்கிகளை விநியோக நிறுவனம் பயன்படுத்த அனுமதி தந்து அதற்கான வாடகையை பெறலாம்.

டோர் டெலிவரி செய்ய ஒப்பந்தமாகும் தனியார் நிறுவனம் மூலம், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த நிறுவனம் விநியோகிக்கும் மது பாட்டில்களை பேக்கிங் செய்வதன் மூலம் பலர் பணி வாய்ப்பு பெறுவர். மேலும், கொள்முதல், பகிர்ந்தளிப்பு, இருப்பு வைப்பு, போக்குவரத்தின்போது ஏற்படும் சாதாரண மற்றும் அசாதாரண இழப்பு போன்றவை தடுக்கப்படும். பதுக்கல்கள் தடுக்கப்பட்டு, அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே மது விநியோகம் நடக்கும். மேலும் குறைந்த விலையில் மது விநியோகத்தையும் இது சாத்தியப்படுத்தும்.

Also Read : தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

நேரடியாக பணம் கையாளப்படுவது பெரும்பாலும் தவிர்க்கப்படும். இதனால் பண முறைகேடு, திருட்டு போன்றவை தடுக்கப்படும். மதுபோதையால் ஏற்படும் வாகன விபத்துகள், இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவதை பெரும்பாலும் தடுத்துவிடலாம். குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மேன்மைப்படும். திருமணம், பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களின் போது மதுப்பயன்பாடு முறைப்படுத்தப்பட்டுவிடும். வீட்டிற்கு வரவழைத்துத்தான் மது அருந்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுவதால், தினமும் மது அருந்துவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இது அரசுக்கும், மது அருந்துவோருக்கும் நன்மை பயக்கும். மதுவில்லா மாநிலமாக தமிழகம் மாற மதுக்கடை இல்லா தமிழகம் முதல் படியாக அமையும்.

மக்கள் அதிக அளவில் மது அருந்துவதையும், மதுவுக்கு அடிமையாகிக் கிடப்பதையும் சீரான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துவது அரசின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியிருக்கிறது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பதைத் தடைசெய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மதுவிற்பனையை, செயலி துணையுடன், டோர் டெலிவரியாக செய்வதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியும்.

கட்டுரையாளர் : இரா. மணிகண்டன், சமூக செயல்பாட்டாளர். தலைவர் – ஜுனியர் சேம்பர்ஸ், சென்னை சிட்டி. தொடர்புக்கு :- itmani1987@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry