டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!

0
128

டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தியது. 1,338 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி இந்த மாத துவக்கத்தில் இருந்து கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான தேர்வர்கள் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்று கூறப்படுகிறது.

Also Read : #OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது!

மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது!

வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்!

2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது!

நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Also Read : அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive

காரைக்குடியில் 700 பேர் தேர்ச்சி பெற்றது பற்றி விசாரணை நடத்தப்படும் என TNPSC நிர்வாகம் அறிவித்திருக்கிறது. சர்ச்சைக்குள்ளான அந்த பயிற்சி நிறுவனம் காரைக்குடி, திருச்சி சாலையில் ஸ்ரீராம் நகர் என்ற இடத்தில், ‘பிரமிட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பயிற்சி பெற மாணவர்கள் இந்த நிறுவனத்தில் சேருவார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் காரைக்குடியில் தேர்வெழுத வேண்டிய காரணம் என்ன என்பதே பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், குரூப்-4 தேர்வு முடிவிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. குரூப் – 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியானது. குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த TAF பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் வரை தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2,000 பேர் தேர்வானது உண்மைதான் என்று TAF பயிற்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார் என்றும் முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என்றும் அந்த பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மதிப்பெண் எடுத்தவர்கள், ஒட்டுமொத்த தரவரிசையில் கீழ்நிலையில் இருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் உயர்நிலையில் இருப்பதாகவும் தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர்.

Recommended Video

வைரமுத்து கருத்து முட்டாள்தனமானது! பெண்களை தரக்குறைவாக ஒப்பிடுவதா? Nachiyal Suganthi Interview

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், ”குரூப் – 4 தேர்வில்  எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. குரூப் -4  மதிப்பெண் கணக்கீட்டு  பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள்  மூலம் நேரடியாக சரிபார்ப்பு  நடக்கிறது.  எந்தவித தவறுகளும்  நடந்துவிடக்கூடாது  என்பதற்காகத்தான்  அதிக  காலம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் 35க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் பெரும் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 90 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யபப்பட்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry