#OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

0
55

4 Minutes Read : கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக இணைய சூதாட்ட விளையாட்டுத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதைக் காட்டிலும், அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

பின்னர் 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இதற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்டோபர் 19ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து நவம்பர் 27ம் தேதி திருப்பியனுப்பினார்.

Also Read : 2019ல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை மறைக்கலாமா? விரக்தியின் வெளிப்பாட்டால் நிலை தடுமாறும் ராகுல் காந்தி!

மார்ச் 1ம் தேதி தனது பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால்தான் ஆளுநர் ரவி, மசோதாவுக்கு கையெழுத்திட மறுக்கிறாரா? என்று விமர்சித்த அடுத்த வாரத்திலேயே, மசோதாவை ஆளுநர் அரசுக்குத் திருப்பி அனுப்பினார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறது. காலம் தாழ்த்தியோ அல்லது உடனடியாகவோ ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும், அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

தமிழக அரசு என்ன செய்யலாம்?

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மக்களவையில் கூறினார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவின்படி மாநில அரசின் நிர்வாக வரம்புக்குள் வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்காவிட்டால், 162வது பிரிவை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசே ஆணை பிறப்பிக்க வேண்டும்.

Also Read: அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive

ஆளுநரின் பிடிவாதம்

ஆன்லைன் ரம்மியால் 40-க்கும் அதிகமானோர் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், ஏற்கனவே அனுப்பிய சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் அழுத்தமான விமர்சனத்தை எதிர்கொண்டார். ஆளுநர் காலந்தாழ்த்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல், வேலியே பயிரை மேய்வது போன்றது என குற்றஞ்சாட்டப்பட்டது. ஆளுநர் போன்ற நியமனப் பதவிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கும் உள்ள வித்தியாசத்தை இதன் மூலம் நாம் உணரலாம்.

நீதிமன்றத்தை நாடும் கூட்டமைப்பு

இந்தக் கட்டத்தில்தான், பொதுப்புத்தியோடு இதை அணுகாமால், சட்டக் கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஆளுநர் ஒப்புதல் அளித்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகள் தடை, சட்டமாக்கப்பட்டால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும். இதற்கு முன்னோட்டமாகவே, ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடை, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், சட்டவிரோத சந்தை நடத்துபவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின்(E-Gaming Federation) தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டமில்லை!

ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்குகளில், உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும், தீர்ப்பெழுதும்போது, வாய்ப்பின் அடிப்படையிலான விளையாட்டு, திறமையின் அடிப்படையிலான விளையாட்டு என வகையை முன்வைக்கிறது. வாய்ப்பின் அடிப்படையிலான விளையாட்டு என்பது சூதாட்டம். திறமையின் அடிப்படையிலான விளையாட்டு என்பது சட்டப்பூர்வமானது. இதைச் சட்டவிரோதம் என்றோ, சூதாட்டம் என்றோ நீதிமன்றங்கள் சொல்லவில்லை.

அரசமைப்புச் சட்டப்படி, சூதாட்டம் என்பது மாநிலப்பட்டியலில் வருவதால், அதை மாநில அரசே தடை செய்யலாம். தமிழக அரசின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பணம் வைத்து சூதாடுவது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நபர் தனது திறமையைக்கொண்டு சம்பாதிப்பது, அரசமைப்பின் 19 (1) (g) பிரிவின்கீழ் அடிப்படை உரிமையாக, சுதந்திரமாக அரசமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.

Recommended Video

லோன் ஆப்பில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சைபர் சட்ட நிபுணர்! Advocate Karthikeyan

அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசும் சட்டம் இயற்ற இயலாது. ஆன்லைன் ரம்மியானது திறமையின் அடிப்படையிலான விளையாட்டு என்பதின் கீழ் வருவதால், இதைச் சூதாட்டம் என்று தமிழக அரசு தடை செய்யும்பட்சத்தில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும். அப்போது, 19 (1) (g) பிரிவும், சட்டப்படி ஆன்லைன் ரம்மி சூதாட்டமல்ல என்றும் வாதங்கள் வைக்கப்படும்ய அதன் அடிப்படையில் சட்டத்துக்கு தடை விதிக்கப்படவே வாய்ப்புள்ளது.

அப்போது, எதன் அடிப்படையில் ஆன் லைன் சூதாட்ட செயலி இயங்குகிறது, அல்காரிதம் என்ன? மென்பொருள் விவரம், ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தப்படும் விவரம் ஆகியவற்றை ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட வேண்டும். சைபர் சட்ட நிபுணர், ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர், இணைய நிபுணர், உளவியல் ஆலோசர், மனநல மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து அவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய முடியும்?

தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய பிறகு அதை நடைமுறைபபடுத்துவது அவ்வளவு எளிதல்ல. மாநில அரசானது தனது சட்டத்தைப் பயன்படுத்தி, சூதாட்டச் செயலிகளை பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குமாறு, கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியாது. ஏனெனில் தமிழ்நாடு அரசின் சட்டம் தமிழ்நாட்டில்தான் செல்லும். தமிழகத்துக்கு புவியியல் எல்லை உண்டு, ஆனால் சைபர் வெளிக்கு எந்த எல்லையும் கிடையாது. யார், எங்கிருந்து விளையாடுகிறார் என்பதை எப்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். VPN (Virtual Private Networks) முறை மூலம் விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது சாத்தியமே அல்ல.

இதுவரையிலான நீதிமன்ற தீர்ப்புகளை கூராய்ந்து பார்க்கும்போது, மனிதரும் – மனிதரும் விளையாடும்போதுதான் ரம்மி சட்டவிரோதமில்லை, சூதாட்டமில்லை என்கிறது. 1968ல் ரம்மி சட்டவிரோதமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 1996ல் மற்றொரு தீர்ப்பில், கணிசமான அளவிலான திறமையைப் பொறுத்து வெற்றி பெறும் போட்டிகள் சூதாட்டம் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மத்திய அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது

ஆனால், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை, செயலி மூலம், மனிதரும் – ரோபோவும் விளையாடுவதுதான். செயலி என்பது முன்னதாகவே திட்டமிடப்பட்ட ஒன்று. மனிதனின் திறனையும், ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் திறனையும் ஒப்பிட முடியாது.

எனவே, மாநிலங்கள் சட்டமியற்றிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு மத்திய அரசு ஒதுங்கப் பார்ப்பது சரியல்ல. ஏனென்றால், நிரந்தரத் தீர்வுக்கு மத்திய அரசின் தலையீடு அவசியமாகிறது. அரசமைப்புச் சட்டத்தை திருத்தி, சூதாட்டத்தை பொதுப்பட்டியலுக்கோ அல்லது மத்திய அரசுப் பட்டியலுக்கோ கொண்டுவந்து, ஆன்லைன் ரம்மியை திறன் சார்ந்த விளையாட்டு என்ற பிரிவில் இருந்து சூதாட்டம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்ல, நாடு முழுமைக்கான தீர்வை பெறமுடியும். பல நூறு உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

Also Read : தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

இதன் முதல்கட்டமாக, ஆன்லைன் விளையாட்டுகளை கையாளும், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கண்டிப்புடன் பரிந்துரையை செய்ய வேண்டும். மத்திய அரசு தலையிட்டு ஆன் லைன் சூதாட்டங்களுக்கு பணம் செலுத்தும் யூபிஐ மற்றும் பிற டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளை முடக்க வேண்டும்.

இதன் மூலம், கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை பார்த்துவிட்டு நாமும் பணம் சம்பாதித்துவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் ஆன்லைன் ரம்மி வலையில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வோரை தடுக்க முடியும். பணத்தை இழந்து குடும்பத்தை நடுத்தெருவில் விடுவோரை காப்பாற்ற இயலும்.

ஆன்லைன் ரம்மி பல நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். ஆனால் அதற்கு பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியாவிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு எதுவும் செய்யாத பட்சத்தில், நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து, அதன் மூலம் தீர்வு பெறுவதுதான் நம்முன் இருக்கும் ஒரே தீர்வு.

– கி. கோபிநாத், ஊடகவியலாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry