எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஒருபோதும் வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியைச் செய்வேன். மன்னிப்பு கேட்பதற்கு நான் சவார்க்கர் இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.
Also Read : எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்! வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!
மன்னிப்புக் கேட்பதற்கு நான் சாவர்கர் இல்லை எனக் கூறும் ராகுல் காந்தி, 2019 மே மாதம் 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதை வசதியாக மறைக்க முற்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் மகாத்மா காந்தியை கொன்றதாக கூறிவிட்டு, இதுதொடர்பான வழக்கில் 2016ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) தான் ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி பல்டி அடித்தார்.
இதேபோல், 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் பேசும்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாக பேசினார். ராகுல் காந்திக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ராகுல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அஃபிடவிட்டில், ‘உச்ச நீதிமன்றத்தை தவறாக மேற்கோள் காட்டியதற்கு நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்கிறேன். அப்படி நான் கூறிய கருத்து எதேச்சையாக நடந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமரை விமர்சித்துவிட்டு உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரிய ராகுல்காந்தி, தற்போது OBC பிரிவின் கீழ் வரும் மோடி சமுதாயத்தை விமர்சித்தற்காகவே சிறை தண்டனைப் பெற்று எம்.பி. பதவியை இழந்திருக்கிறார். தேர்தல் ஆணையமும் வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்துவிட்டது. இப்போது, மன்னிப்பு கேட்பதற்கு நான் சவார்க்கர் இல்லை என்று பேசி விவகாரத்தை மடைமாற்றம் செய்ய ராகுல் முயற்சித்துள்ளார்.
Also Read: அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive
நூற்றாண்டு பழமையான தேசியக் கட்சியின் முகமாக அறியப்படக்கூடிய இடத்தில் இருக்கும் ராகுல் காந்தி, விரக்தியின் வெளிப்பாட்டில் பிரதமர் மோடி மீது தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகிறார். சாதியை இழிவுபடுத்தியதாக நாடு முழுவதும் தினந்தோறும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கூட திமுக பிரமுகர் ஆர்.எஸ். பாரதியை எதிர்த்து நாடார் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு எதிராக மோடி சமுதாயத்தைச் சேர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சட்டப் போராட்டம் நடத்தினார். சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்தது. இதனால் ராகுல் எம்.பி. பதவியை இழந்திருக்கிறார். மோடி சமுதாயத்தினர் திருடர்கள் என்று காங்கிரஸ் போன்ற பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் முன்னணி தலைவர் பேசுவது எப்படிச் சரியாகும்?
Recommended Video
லோன் ஆப்பில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சைபர் சட்ட நிபுணர்! Advocate Karthikeyan
அதானி குறித்து ராகுலின் கருத்துகள் மெச்சத்தக்கவை. தொடர்ந்து இதுபோன்ற கருத்தியல் ரீதியான விமர்சனத்தை முன்வைக்கத் தெரியாமல் அல்லது முடியாமல்தான் ராகுல்காந்தி தடம் பிறழ்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சிக்க, விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு ஒருபுறம், சத்தமில்லாமல் மானியம் நிறுத்தப்பட்டது மறுபுறம், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தேர்தல் ஜனநாயகத்தை படுகொலை செய்வது இப்படி எவ்வளவோ விவகாரங்கள் இருந்தும், அதையெல்லாம் விட்டுவிட்டு, தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல.
வழக்கம்போல, பாஜகவை, பிரதமர் மோடியை விரும்பாத கட்சிகள், ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்துள்ளன. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. இதன் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி முகம் சுளிக்கும் வகையில், வக்கிரமாக விமர்சனம் செய்ததை மறந்துவிட்டு இந்த விவகாரத்தை பார்க்கலாம். ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என ராகுல்காந்தி பேசியதை ஸ்டாலின் அங்கீகரிக்கிறாரா? சமூக ஊடகங்களில் திமுக அரசை விமர்சித்து பதிவு இடுபவர்களை தேடித் தேடித் கைது செய்வதும் பயத்தினால்தானா? சனநாயகம், கருத்துத் சுதந்திரம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதி திமுவுக்கு இருக்கிறதா? என்பதற்கு யார் விளக்கம் தரப்போகிறார்கள்.
இதனிடையே, ராகுலுக்கு நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைத்தாலும், இறுதி முடிவு என்பது நாடாளுமன்ற மக்களவை செயலகத்தின் கையில் தான் உள்ளது. ராகுல் காந்தி தனது தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும். அங்கு அவருடைய தண்டனையை நிறுத்தி வைப்பதுடன், தீர்ப்புக்கும் தடை விதித்தால் பதவி பறிப்பு நிறுத்தி வைக்கப்படும் என அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தகுதி நீக்கம் செய்ததை நாடாளுமன்ற செயலகம் நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும். ஏற்கனவே லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பி.பி. முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கவரட்டி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை அடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கேரள உயர் நீதிமன்றம் அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், செசன்ஸ் நீதிமன்ற தீர்ப்புக்கும் தடை விதித்துள்ளது. ஆனால், தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே ராகுலுக்கு நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைத்தாலும், இறுதி முடிவு நாடாளுமன்ற மக்களவை செயலகத்தின் கையில் தான் உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry