எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்! வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!

0
180

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார். மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவுப்படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக சர்ச்சை எழுந்தது.

Also Read : ஆசிரியர் சமுதாயத்திற்கு இந்த நிலைமையா? நெஞ்சம் பதறுகிறது! அமைச்சர் மவுனம் சாதிப்பது ஏன்? என தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்!

இது தொடர்பாக மோடி சமுதாயத்தைச் சேர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா அறிவித்திருந்தார்.

அதன்படி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அனைத்துத் தரப்பினரும் ஆஜரான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்திருந்தார்.

Also Read : தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ”குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோயுள்ளது. சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நிரந்தரமாக பறிபோகுமா அல்லது தப்புமா என்பது தெரியவரும்.

Recommended Video

வைரமுத்து கருத்து முட்டாள்தனமானது! பெண்களை தரக்குறைவாக ஒப்பிடுவதா? Nachiyal Suganthi Interview

இது தொடர்பாக பாஜகவினர் கூறும்போது, “வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில், 2013 ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதன்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்களை தீர்ப்பு வெளியான நாளில் இருந்தே பதவி நீக்கம் செய்யலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆசம் கான் உள்ளிட்டோர் தீர்ப்பு வெளியான நாளே பதவி நீக்கம் செய்யப்பட்டனர்” என்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு பிறகு 6 ஆண்டுகள் ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry