ஆசிரியர் சமுதாயத்திற்கு இந்த நிலைமையா? நெஞ்சம் பதறுகிறது! அமைச்சர் மவுனம் சாதிப்பது ஏன்? என தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்!

0
578

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில், அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை மாணவன் ஒருவனின் பெற்றோர் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதூர் ஒன்றியம், கீழ நம்பிபுரம், அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை உத்தரவுப்படி எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடியுள்ளனர்.

வா. அண்ணாமலை

சீழநம்பிபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம்-செல்வி தம்பதியின் மகன் பிரதீஷ் இதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பாரத், சிறுவன் பிரதீஷுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் வீட்டுப்பாடத்தை வீட்டில் உள்ளவர்கள் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிரியர் பாரத், சிறுவனை அடிக்காமல், வாயால் கண்டித்துள்ளார்.

Also Read: கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா? அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சந்திப்பின்போது மாணவன் பிரகதீஷீன் தந்தை சிவலிங்கம், தாயார் செல்வி, தாத்தா முனியசாமி ஆகியோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பாரத்திடம் எனது மகனை ஏன் அடித்தாய்..? அடிப்பதற்கு அதிகாரம் வழங்கியது யார்? என்று கேட்டுள்ளனர்.

அப்போது நான் உங்கள் மகனை அடிக்கவில்லை, அவன் எழுந்து வருகின்ற பொழுது தவறி கீழே விழுந்து விட்டான் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கன்னத்திலும், காதிலும் அறைந்ததுடன், பள்ளிவளாகத்தில் ஓட ஓட விரட்டி அடித்து காயப்படுத்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சியை செல்போனில் பதிவு செய்த பள்ளியின் தலைமை ஆசிரியர் குருவம்மாளை, அவரிடமே படித்த மாணவன் பிரகதீஷின் தாயார் செல்வி, செல்போனில் படம் பிடிக்கிறாயா..? என்று கேட்டு தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி அடித்துள்ளார். மேலும் பள்ளியில் இருந்த நாற்காலிகளை சேதப்படுத்தி அவர்கள் மிரட்டல் விடுத்து சென்றனர்.

பட்டியலின பொதுமக்கள் வாழுகின்ற அந்த ஊர் முழுவதும், ஆசிரியர்களுக்கு முழு பாதுகாப்பினை அளித்து வருகிறார்கள். தாக்குதல் பற்றி தகவல் அறிந்த அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended Video

அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத பட்ஜெட்~எண்ணும் எழுத்தும் திட்டத்தால் அரசு பள்ளிகள் நிலை கேள்விக்குறி!

தலைமை ஆசிரியை குருவம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு, முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட மாரிசெல்வி என்பவருக்கு கைக்குழந்தை இருக்கின்ற காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைதானவர்கள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ஜாமீனில் வந்து விடுவார்கள், அதன் பிறகு உங்களையெல்லாம் என்ன செய்கிறோம் பாருங்கள் என்று மாரிசெல்வி மிரட்டி வருகிறார். இவர்கள் எல்லாம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.

முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டக் கல்வி அலுவலரும் நேற்றுதான் (22.03.2023) பொதுமக்களிடம் விசாரணை செய்துள்ளார்கள். விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.

முதலமைச்சர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்-1ம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு எதிராக தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் பெருகிவரும் வேளையில், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தினை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். உரிய நேரத்தில் சரியான நடவடிக்கையினை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

Also Read : தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

தமிழ்நாட்டில் ஒரு மருத்துவர் மீதோ அல்லது வழக்கறிஞர் மீதோ அல்லது ஓட்டுனர் மீதோ இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகி இருக்கும்? போர்க்குணம் மிக்க ஆசிரியர் அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்களே தவிர, நேரடி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை இந்த அரசு உணர வேண்டாமா? மறைந்த முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் போற்றி வளர்த்த ஆசிரியர் சமுதாயத்தினை பாதுகாக்க முன் வாருங்கள்.

அந்த ஆசிரியர்கள் விரட்டி விரட்டி தாக்கப்படுகின்ற போது, ஐயோ காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்..!என்று அலறிய குரலை கேட்டு, ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நெஞ்சம் பதறுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தினை தாங்கிக் கொள்ள முடியாமல் பதறிக் கொண்டிருக்கிறோம். கருணாநிதியின் பிள்ளை ஆட்சி செய்து கொண்டிருக்கிறபோது ஆசிரியர் சமுதாயத்திற்கு இந்த நிலைமையா?

ஊடகங்களில் ஆசிரியர்களைப் பற்றி செய்தி வந்தாலே விசாரணை இல்லாமல் தண்டனை நடவடிக்கை எடுக்கும் உயர் அதிகாரிகளே..! நீங்கள் மௌனம் சாதிப்பது ஏன்..? தான் ஆடாவிட்டாலும் தன் சரீரம் ஆடும் என்பார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை பொறுப்பினை வகித்துவரும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்-1 அவர்களும் மௌனம் சாதிப்பது ஏன்..? குரு நிந்தனை செய்வோர் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, காலம் பதில் சொல்லட்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry