கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா? அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

0
1163

சமீபத்தில் வெளியான கல்வி தரப்பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது. 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான தேர்வு பொதுத் தேர்வு போல் நடத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா.அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து வினாத்தாள்கள் சீலிட்டு வருவதும், அதை முதல் நாள் தலைமை ஆசிரியர்கள் வாங்கி மந்தனத் தன்மையுடன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதும், தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் 10 நிமிடத்திற்கு முன்பு தான் வினாத்தாள் சீல் உடைக்கப்பட வேண்டும் என்பதும், அதன் பிறகு தான் கற்போர் தேர்வு எழுத வேண்டும் என்றெல்லாம் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

Recommended Video

மத்திய அரசின் நுழைவுத்தேர்வை எதிர்த்துவிட்டு தமிழக அரசே நடத்தலாமா? AIFETO ANNAMALAI சரமாரி கேள்வி!

இந்தத் திட்டத்தில் கற்போர் யார்? என்பதை முதலில் நாம் பார்க்க வேண்டும். அவர்களைத் தேர்வு செய்வதற்கு தலைமை ஆசிரியர்கள் பட்ட துயரங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். 15 வயதிற்கு மேற்பட்ட அறவே எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு நடைபெறும் தேர்வுமுறை இத்தனை கெடுபிடிகளுடன் நடைபெறுவது ஏற்புடையதாகுமா?

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுத வரவில்லை. நாற்பதாயிரம் மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்று செய்தி வந்து கொண்டுள்ளது. இவர்கள் எல்லாம் கொரோனா காலத்தில் கொரோனா களத்தில் All Pass திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? கல்வித்துறை இப்பிரச்சனையினை எப்படி சரி செய்யப் போகிறது? பொதுத்தேர்வு எழுத மூன்று நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ‘பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்’ எனத் தெரிவித்துள்ளார்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டாடும் வகையில் ‘கற்றலைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் விளம்பரப்படுத்துவதற்கும், கலைநிகழ்ச்சிகள் வழியாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் வெற்றிகரமான திட்டம், மிகச் சிறப்பான திட்டம், இந்தியாவிலேயே இல்லாத திட்டம் என்று அரசு கூறிவரும் வேளையில் இதனை விளம்பரப்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் இத்தனை விளம்பரங்கள் தேவையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

Recommended Video

#OnlineRummy | ஆளுநரை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதன் பின்னணி | Advocate Karthikeyan Interview

இத்தனை செலவு செய்து எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தை நடத்துவதற்குப் பதில், ஆசிரியர் நியமனத்தில் கவனத்தை செலுத்தலாம். தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது நிரந்தரத் தீர்வாகாது. 20.6.2022க்குப் பிறகு ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இன்னும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

கலைத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. வரவேற்று பாராட்டினை தெரிவித்துக் கொண்டோம். அதேபோல பள்ளி சிறார் திரைப்பட திருவிழா, வினாடி வினா போட்டிகள், வானவில் மன்ற போட்டிகள், கலை இலக்கிய மன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் இந்தப் போட்டிகள் எல்லாமே தேர்வு சமயத்தில் தான் நடைபெற வேண்டுமா?. அப்படி என்றால் பிள்ளைகள் எப்படி பள்ளியில் படிப்பார்கள்? அன்றாடம் புள்ளிவிவரப் பணிகளைச் செய்வதும், பள்ளி அளவில் போட்டிகளை வைப்பதும், அதனை எமிஸில் பதிவேற்றம் செய்வதும், அவர்களை ஒன்றிய, மாவட்ட அளவில் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதும் என, போட்டிகளுக்குத் தயார் செய்யக்கூடிய வேலைகளை மட்டுமே ஆசிரியர்களைச் செய்ய சொன்னால், அவர்களால் கற்பித்தல் பணியினை எப்படி சிறப்பாக செய்ய முடியும்?

Also Read : கேரளாவில் தொழிற்சங்கம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியம்! தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிக்கும் மலையாளிகள்!

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், கற்றல் கொண்டாட்டம், இவற்றுக்கு செய்யப்படும் செலவுகளை ஆசிரியர் நியமனத்திற்கு செய்தால், தரமான கல்வியை வழங்குவதற்கான முதல் படியாக அமையும். ஐம்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற சமூகப் பிரச்சனைக்கு ஆசிரியர் – மாணவர் உறவில் விரிசல் உண்டாக்கிவிட்டீர்கள். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள இடைவெளி காரணமாகவே இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

மண்டல ஆய்வினை நிறுத்தி வைத்துவிட்டு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து நிலை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் எல்லோரும் அமர்ந்து இவையெல்லாம் சரிதானா? என்று சுய பரிசோதனை செய்து கொண்டாலே இதற்கெல்லாம் தீர்வினை நோக்கி செல்லலாம். கல்வித்துறையினை விளம்பரத் துறையாகவும், புள்ளிவிவரத்துறையாகவும் மாற்றி வருவதை தவிர்த்துக் கொண்டு, கற்றல் கற்பித்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபட செய்யுங்கள்”. அறிக்கையில் வா. அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry