தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

0
143

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேட்டிமைத்தனமான ஆலோசனைகளின் வெளிப்பாடான வெற்று விளம்பரங்களால் பள்ளிக் கல்வித்துறை தரத்தை இழந்து வருகிறதோ என்கிற சந்தேகம் கல்வியாளர்கள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. 8,51,303 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழ்த் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை.
15ஆம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தேர்விலும் 49,500 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 22-ந் தேதி நடைபெற்ற இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட முக்கிய பாடத் தேர்வுகளில் 47000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தனித் தேர்வர்கள் தவிர்த்த இந்த எண்ணிக்கையை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

எளிமையான மொழித்தேர்வுகளையே 50 ஆயிரம் மாணவர்கள் தவிர்க்கிறார்கள் என்றால், மற்ற கடினமான பாடத் தேர்வை எத்தனை மாணவர்கள் எழுதாமல் தவிர்ப்பார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இது தமிழக அரசு பெருமைபட்டுக்கொள்ளும் உயர் கல்விக்கான மொத்தப் பதிவு விகிதத்தை(ஜிஇஆர் – கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ) நேரடியாக பாதிக்கும்.

Also Read: கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா? அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

இப்போது 11, 12ஆம் வகுப்பு தேர்வெழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், கோவைட்-19 தொற்று காலத்தில் நேரடியாக தேர்ச்சி பெற்றவர்கள். தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99% தேர்வெழுதும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேர் வருகையைத் தவிர்த்திருக்கிறார்கள். இது தேர்வு நாளன்று தொடங்கிய பிரச்னை அல்ல. இதற்கான மூலக் காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்யாமல், பள்ளிக் கல்வித்துறை 2 ஆண்டுகளாக மெத்தனமாக இருந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5% மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் இருப்பது வழக்கம்தான். ஆனால், தமிழ்ப் பாடத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்றவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்த் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

ஆங்கிலத் தேர்வை எழுதாமல் 49,500 மாணவர்கள் தவிர்த்த நிலையில்தான், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாதிரிப் பள்ளிகளுக்காக அரசு தொடங்கியுள்ள அமைப்பின் உறுப்பினர் செயலாளரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் ஆகியோருடன் துறைக்கான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை இயக்குநர்கள் ஆலோசனையின்போது தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

Recommended Video

அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத பட்ஜெட்~எண்ணும் எழுத்தும் திட்டத்தால் அரசு பள்ளிகள் நிலை கேள்விக்குறி!

இவர்கள் இல்லாத ஆலோசனை முழுமைபெறாது என்பதை உணர்த்தும் விதமாக, “தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாணவர்கள் பள்ளிகளுக்கு குறைந்த நாட்களே வந்திருந்தாலும், அவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

பின்னர் சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அமைச்சர், “இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள், இனியும் அனுமதிக்கப்படுவார்கள்.” என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிப்பது ஒவ்வொரு ஆண்டும் நடக்காது. 75% வருகைப் பதிவேடு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்” என்கிறார்.

அடுத்த கட்டமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அந்த மாணவர்கள் பள்ளிகளில் இருந்து டிசி பெற்றுக் கொள்ளாததால், மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறுகிறார். டி.சி. இல்லாமல் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இயலுமா? இவ்வாறு பேசும் நிலைக்கு அமைச்சரை ஆளாக்கியது யார்?

Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!

கணினிமயம் ஆவதற்கு முன்பாக, பொதுத் தேர்வெழுத போதுமான வருகை நாட்கள் உள்ள மாணவர்களின் பட்டியலை (நாமினல் ரோல்) தலைமை ஆசிரியர் தயாரித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்புவார். அவர் அதை தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடுவதற்கு முன்பாக, அந்தப் பட்டியலை மூன்று முறை தேர்வுத்துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்புவார். இதன் மூலம் திருத்தம், சேர்த்தல், நீக்கல் போன்றவை தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்படும். பின்னர் பள்ளியில் இருந்து இறுதிப்பட்டியலைப் பெற்று தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். இதன் மூலம் 75% வருகையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கிடைக்கும் நிலை இருந்தது.

கணினிமயமான பின்பு, பள்ளிகளில் இணைய வழியாக பொதுத்தேர்வு எழுதும் தகுதியான மாணவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும். அதைச் சரிபார்க்க, தேர்வுத்துறை இயக்ககம் ஒன்றிரண்டு முறை வாய்ப்பு வழங்கும். அதன் பின்னர்தான் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

இப்போது ‘எமிஸ்’ செயலி இல்லாமல், பள்ளிக் கல்வித்துறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த செயலி மூலம்தான் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. ‘எமிஸ்’ மூலம்தான் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. அமைச்சரின் கருத்தின் அடிப்படையில், எமிஸ் செயலி மூலம் மாணவர்கள் எத்தனை நாட்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள் என்பது கருத்தில் கொள்ளப்படுவது இல்லையோ? என நினைக்கத் தோன்றுகிறது.

‘எமிஸ்’ செயலி மூலம் தினமும் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படுவது உண்மையானால், பள்ளிக்கே வராத அல்லது இடையில் நின்ற, போதிய வருகைப் பதிவு இல்லாத 50 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு எப்படி வழங்கப்பட்டது? ஓராண்டுக்கு முன்பாகவே பள்ளியில் இருந்து நின்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலில் இடம்பெற்றது எப்படி?

Recommended Video

#OnlineRummy | ஆளுநரை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதன் பின்னணி | Advocate Karthikeyan Interview

வருகைப் பதிவு நடைமுறையில் தவறு ஏற்பட்டுள்ளதா?, வருகைக் குறைவான மாணவர்களை நீக்குவதில் தவறு ஏற்பட்டதா? அல்லது தேர்வெழுத வராத 50 ஆயிரம் மாணவர்களும் வருகை தந்ததாக ‘எமிஸ்’ செயலியில் பதிவு செய்யப்பட்டதா? வருகை குறைவான மாணவர்களை பொதுத்தேர்வு பட்டியலில்(நாமினல் ரோல்) இருந்து நீக்கும் அதிகாரம் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லையா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

தேர்வுக்கு வராத மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து, இந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்குவது அவசியம். மாணவர்களின் சமூக, பொருளாதார நிலையை ஆராய்ந்து ஜுன் மாதம் நடைபெறும் சிறப்புத் தேர்வில் இந்த மாணவர்கள் பங்கேற்பதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டியது அவசியம்தான். அதேநேரம், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, தேர்வெழுத வைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.

அப்படியானால், ஒரு கல்வி ஆண்டுக்கான அதாவது சற்றேறக்குறைய 210 நாட்களுக்கான பாடத்திட்டத்தை 2 மாதத்தில் நடத்தி முடிப்பது சாத்தியமா? தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட சில பாடங்களை ஆசிரியர்கள் நடத்தினால் கூட, மெல்லக் கற்கும் வரையறைக்குள் வரும் மாணவர்களுக்கு, இந்த குறுகிய காலத்தில் பாடங்களை உள்வாங்கும் திறன் இருக்குமா? பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கிறோம் என்ற பெயரில் மிக கணத்த சுமையை வைத்துள்ளார்களே, அதுவும் காரணமாக இருக்கலாமே? வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை(புளூ பிரின்ட்) இல்லாத நிலையில், குறுகியகாலத்தில் ஆசிரியர்கள் எதனடிப்படையில் பாடம் நடத்துவார்கள்? இதைத்தாண்டி, பயம் அல்லது ஆர்வமின்மையும் மாணவர்கள் தேர்வை தவிர்க்க காரணமாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது, ஜுன் மாத சிறப்புத் தேர்வில் இந்த மாணவர்களை பங்கேற்க வைப்போம் என்பது பெயரளவுக்கான அறிவிப்பா?

Recommended Video

டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக முறைகேடு | TN Transport Scam 

திணறடிக்கும் தரவுகளை உள்ளீடு செய்யும் வேலைகளால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகள், ஒவ்வொரு மாணவர்கள் மீதான பிரத்யேக கவனம், பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த அக்கறை போன்றவை பாதிக்கப்படுகிறது. பணிச்சுமையும் பாடச்சுமையும் தரும் அழுத்தம் மற்றும் நேரமின்மையால் மாணவர்களிடம் மனம் விட்டு பேசக்கூட ஆசிரியர்களுக்கு நேரமிருப்பது இல்லை.

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஆசிரியர்களை அசிங்கப்படுத்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாக ஆர்வம் காட்டுகின்றனர். மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் கண்டிப்பதற்கும், நல்வழிப்படுத்துவதற்குமான அதிகாரங்கள் ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்ட சூழலில், பள்ளிக்கு வராத மாணவர்களின் வீட்டுக்குப்போய் ஆசிரியர்கள் பேசி, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது பள்ளிக் கல்வித்துறைக்கே வெளிச்சம். பள்ளிக் கல்வித்துறை ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரது பிடியில் சிக்கி உள்ளதாகவும், இவர்களை மீறி அமைச்சரே எதுவும் செய்ய முடியவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதே நிலை நீடித்தால் கல்வித்துறை இன்னும் மோசமான நிலையை சென்றடையும்.

கட்டுரையாளர் : கி. கோபிநாத், ஊடகவியலாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry