இந்த ராசிக்காரங்க டிசம்பர் வரைக்கும் தலைதூக்குறது ரொம்ப கஷ்டம்! இவங்களுக்கு மறு திருமணம் கைகூட வாய்ப்பு!

0
79
Weekly Horoscope: Check Astrological prediction from August 28th to 3rd September 2023. | GETTY IMAGE

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 28ல் இருந்து செப்டம்பர் 9 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : கோபமும், பிடிவாத குணமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் 6-ல் இருப்பதால் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற அரசு வேலை போட்டி தேர்வுகளில் சாதிப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்கு, தாய் வழி சொத்தில் பங்கு கேட்டு தாய்மாமனுக்கு எதிராக போட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வாகனங்களில் பயணிக்கும் போதும், வாகனங்களை இயக்கும் போதும் சற்று கவனமாக இருங்கள். தெற்கு திசையில் உள்ள ஊர்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடது கையில் வலி, காயம் ஏற்படும். மேஷ ராசிக்காரர்கள் முடிந்தவரை கடன் வாங்காமல் இருங்கள். கையில் பணம் இருந்தால் ஆடம்பர செலவு செய்யுங்கள். கடன் வாங்கி சமாளித்து விடலாம் என்று நினைத்தால் கடன் தொல்லையால் கஷ்டப்படும் நிலை ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டு. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

ரிஷபம் : குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, தந்தை மீது அளவுகடந்த அன்பு வெளிப்படும். மாமனார், மாமியாரை அனுசரித்து செல்வது மூலம் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சொத்துக்கள் கைக்கு வரும். ரிஷப ராசியை சேர்ந்த பெண்கள், சிறுவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பாதங்களில் வலி உண்டாகி நடப்பதில் சிரமம் ஏற்படும். கனரக வாகனங்கள், ஆயுதங்களை கையாளும் போது எச்சரிக்கையாக இருங்கள். உடல் உபாதைகளில் இருந்து தற்காத்து கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் இஷ்ட தெய்வத்திற்கு பசும்பாலில் அபிஷேகம் செய்வதும், பச்சரிசி மாவினால் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்வதும் சிறப்பு. 28ந்தேதி பிற்பகல் வரை
சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். முக்கிய வேலைகளை 29ந்தேதிக்குப் பிறகு செய்யலாம்.

Also Read : பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1

மிதுனம் : எப்போதும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்பும் மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 3ல் வக்கிரம் பெற்று இருந்தாலும் தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் இருப்பது சிறப்பு என்பதால், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்ற அதிகாரிகள், அரசியல் கட்சிகளை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு சாதகமான வாரம். தனியார் நிறுவனங்களில் சிஇஓ, மேனேஜர் போன்ற தலைமை பொறுப்பு வசிப்பவர்களுக்கு அதிகாரம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைவலி, மார்பில் வலி ஏற்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இன்டீரியர் டிசைன் தொடர்பான வேலை, தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 29, 30 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்என்பதால் சற்று கவனமாக இருங்கள்.

கடகம் : கடமை உணர்வு அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிநாதன் சந்திரன் வளர்பிறை நிலையில் பெளர்ணமியை நோக்கி செல்வதால் வாரம் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். அவ்வப்போது அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகள், தடை, தாமதங்களை எதிர்கொள்வீர்கள். இருப்பினும் ராசிநாதன் பலமாக உள்ளதால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். அறுபது வயதை நெருங்குபவர்கள் தொடை மற்றும் கால் வலியால் அவதிப்படுவார்கள். தன ஸ்தான அதிபதியான சூரியன் ஆட்சி பெற்று உள்ளதால் அரசு அதிகாரிகள், தொடக்க பள்ளி ஆசிரியர்கள் அனுகூலமான வாரம். அலங்கார விளக்கு விற்பனை, தயாரிப்பில் உள்ளவர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருங்கள். 30ந்தேதி பிற்பகல் தொடங்கி 1ம்தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

Also Read : திருமணத்திற்கு எத்தனைப் பொருத்தம் தேவை? பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிப்பது சரியா? Part – 2

சிம்மம் : பிறருக்கு உதவும் இயல்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று புதனுடன் இணைந்து இருப்பது சிறப்பு. மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கெளரவமான வாழ்க்கை வாழ விரும்புவீர்கள். அரசு மற்றும் அரசியல்வாதிகளின் அறிமுகம், நட்பு கிடைக்கும். இருப்பினும் ராசியையும், சிம்மம், சிம்ம அதிபதியான சூரியனை சனிபகவான் பார்ப்பதால் உயர் பதவியில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய நேரம். கழுத்து வலியால் அவதிப்படுவீர்கள். கோச்சாரத்தில் சனிபகவான் 7ல் இருந்து கண்ட சனியாக செயல்படுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று உணர்ந்து உடல் நலனில் அக்கறையாக இருங்கள். வீடு, வாகனங்கள் வழியில் செலவுகள் ஏற்படும். 1ந்தேதி பிற்பகல் தொடங்கி 3ந்தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கு திசைய நோக்கி பயணிக்கும் போது சற்று கவனமாக இருங்கள்.

கன்னி : இனிமையாக பேசக்கூடிய கன்னி ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 12ல் மறைந்து இருந்தாலும் தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் ஆட்சி பெற்ற சூரியன் உடன் இணைந்து இருப்பது சிறப்பு. வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். கிழக்கு திசையில் உள்ள சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில், வியாபாரம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ராசியில் செவ்வாய் இருப்பதால் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். இளம்பருவத்தில் உள்ள கன்னி ராசிக்காரர்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் அனுசரித்து செல்லுங்கள். 31, 1 ஆகிய தேதிகளில்கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் சந்திராஷ்டமம்இல்லை.

Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

துலாம் : சொத்து சேர்க்க விரும்பும் துலாம் ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் 10ல் இருப்பதால் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். பழைய வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்பவர்கள், மரச்சாமான்கள் தயாரிப்பு, விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கலப்பு திருமணம், வெளிநாட்டு கலாச்சாரம் கொண்டவர்களை திருமணம் செய்யும் வாய்ப்பு அமையும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்து மறு திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் சற்று தாமதமானாலும் ஐவிஎஃப் மூலம் குழந்தைக்கு முயன்றவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். வாழ்க்கை துணையின் வழியில் சொத்து வந்து சேரும். அழகு நிலையம் வைத்திருப்பவர்கள், சினிமா துறையில் உள்ள மேக்கப்மேன்களுக்கு முன்னேற்றமான வாரம் இது. 2 , 3 ஆகிய தேதிகளில் தொழில், வியாபாரத்திற்காக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

விருச்சிகம் : பிறரிடம் மனம் விட்டு பேசாத விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய், தனக்கு பிடிக்காத புதனின் கன்னி வீட்டில் இருப்பது சிறப்பில்லை என்றாலும், வெற்றி மற்றும் லாப ஸ்தானமான 11ல் இருப்பதால் அனைத்து விதத்திலும் சாதகமான வாரமாக அமையும். தொழில், வியாபாரம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று வர நேரிடும். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனைவியின் தம்பி, தங்கைக்காக விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். அரசு ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவுவார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு பணி ஆணை கிடைக்கும். சிலருக்கு நிலம், வீடு தொடர்பான விஷயங்களில் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும் 31, 1 ஆகிய தேதிகளில் உடல்நிலையில் சற்று கவனமாக இருங்கள்.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

தனுசு : நம்பி வந்தவர்களை காப்பாற்றும் மனப்பான்மை கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புதிதாக திருமணமானவர்கள், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும். ஆடம்பர செலவு எது, அத்தியாவசிய செலவு எது என்று பிரித்து பார்த்து செலவு செய்வது நல்லது. தேவையில்லாத விஷயங்களுக்கு கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரம், சொந்த தொழிலை விருத்தி செய்வது, முதலீடுகளை அதிகப்படுத்தும் முடிவுகளை ஒத்திப்போடுவது நல்லது. 31, 1 ஆகிய தேதிகளில் மனக்குழப்பம் அதிகரிக்கும். 2, 3 ஆகிய தேதிகளில் நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

மகரம் : மற்றவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் குணம் கொண்ட மகர ராசிக்காரர்களே, 8ம் அதிபதி சூரியனும் ஆறாம் அதிபதி புதனும் இணைந்து 8ல் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள், சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பு. தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மகர ராசிக்காரர்கள் வேலை ஆட்களை கடிந்து கொள்ள வேண்டாம். சம்பளம், வியாபாரம், தொழில் வகையில் வர வேண்டிய தொகை அனைத்தும் எதிர்பார்த்த நேரத்தில் வராமல் தாமதமாக கைக்கு வந்து சேரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும், 31, 1 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருங்கள். சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

Also Read : நாட்டின் முதல் Artificial Intelligence பள்ளி கேரளாவில் தொடக்கம்! ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா?

கும்பம் : காரியத்தில் வல்லவரான கும்ப ராசிக்காரர்களே, ராசிநாதனும், விரைய ஸ்தான அதிபதியுமான சனிபகவான் ராசியில் ஜென்ம சனி அமைப்பில் உள்ளதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். வரவை விட செலவுகள் பலமடங்கு அதிகரித்து குடும்ப பொருளாதாரத்தையும், உங்கள் கையிருப்பையும் பதம் பார்க்கும். வேலை, தொழில், வியாபாரத்தில் பிரச்னைகள் தேடி வரும் என்பதால் அனைத்தையும் சமாளிக்க தயாராக இருங்கள். 40 வயதிற்குள் இருப்பவர்கள் ஜென்ம சனி பாதிப்புகளை உணரும் நேரம் இது. சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை நீங்கள் ஒன்று நினைத்தால் நடப்பதோ வேறு மாதிரியாக இருக்கும். புதிதாக எந்த முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள் பேச்சை கேட்டு புதிய வேலை, தொழில், பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும், டிசம்பர் மாதம் வரை சந்திராஷ்டமம் இருப்பதாக நினைத்து செயல்படுவது நல்லது.

மீனம் : பயணங்களில் விருப்பம் கொண்ட மீன ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் இடத்தை பார்ப்பதால் வேலை, தொழில், வியாபாரம் நிமித்தமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள். பணங்களால் ஆதாயம், வருமானம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் உண்டு. வாழ்க்கை துணை, சகோதரர்கள் வழியில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடலில் வெப்ப கட்டிகள் உண்டாகி நெல்லை தரும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 31, 1 ஆகிய தேதிகளில் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry