ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

0
86
GETTY IMAGE

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு.

ஒருவருக்கு எல்லாம் சரியாக நடந்தால் “அவனுக்கு என்னப்பா அதிர்ஷ்டக்காரன்னு” சொல்வாங்க. அதிர்ஷ்டத்தை தேடிதான் ஒவ்வொருவரும் அலைந்து கொண்டிருக்கிறோம். ஒருகட்டத்தில் வெறுத்துப் போகும்போது, “அதிர்ஷ்டம் அது இஷ்டத்துக்கு வரும், போகும்னு” டயலாக் பேசுபவர்களை பார்த்திருப்போம். அப்படி அதிர்ஷ்டத்திற்காக ஏங்குபவர்களுக்கு வரபிரசாதமாக அமைந்ததுதான் இந்த ராசிக்கல்.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

நவமணிகள் ஒவ்வொன்றும் நவகிரகங்களின் அம்சமாக இருக்கின்றன. நவமணிகளை அணிவதன் மூலம் நவகிரகத்தின் நல்ல தன்மைகள், கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி சமநிலைப்படுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.

நவமணிகளின் நன்மைகளை அறிந்தே நமது முன்னோர்கள் புதிதாக வீடு கட்ட துவங்கும் முன் நவமணிகளை வீட்டின் தலை வாசலில் புதைக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். கோயில் கருவறைகள், கோயில் கோபுர அஸ்திவாரங்களிலும் நவமணிகள் புதைக்கப்பட்டு இருக்கும். இப்படி பல சிறப்பு வாய்ந்த நவமணிகளை மோதிரத்தில் பதித்து கைகளில் அணியும் போது நற்பலன்களை எளிமையாக பெறலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவமணிகளை மோதிரமாக அணிவதையே தற்போது ராசிக்கல் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான கற்களை ஜோதிட சாஸ்திரம் வழங்கியிருக்கிறது.

ஒவ்வொரு கிரகத்திற்குரிய கற்கள்:-

சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – மரகத பச்சை
குரு – கனக புஷ்பராகம்
சுக்கிரன் – வைரம்
சனி – நீலம்
ராகு – கோமேதகம்
கேது – வைடூரியம்

இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் உண்டான நவரத்தின கற்களை மோதிரம், செயின் போன்றவற்றில் பதித்து அணிந்து கொள்வதால் அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தின் பொக்கிஷமாக கருதப்படும் நவரத்தின கற்களை தவறான வழிகாட்டுதல், தவறான புரிதலால் அண்மைக் காலமாக நாம் தவறாக பயன்படுத்தி தடம் மாறி வருகிறோம். இதனால், கெடுபலன்களை அடைபவர்கள் ஜோதிட சாஸ்திரத்தையும், நவரத்தின கற்கள் மீது பழிசொல்கின்றனர். தடம்மாறி செல்கிறோம் என்று இங்கு குறிப்பிடுவது வேறொன்றும் இல்லை.

நகைக்கடைகளில் ஒவ்வொரு ராசியினரும் அணிய வேண்டிய ராசிக்கல் என்று போர்டு வைத்திருப்பார்கள். அதில், “மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் பவளம், ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம்” என்று 12 ராசிக்காரர்களும் அணிய வேண்டி ராசிக்கற்களை பட்டியலிட்டிருப்பார்கள். உண்மையில் இப்படி பார்த்து ராசிக்கல் மோதிரம் அணிவது அபத்தம். கொஞ்சம் கடினமாக சொல்வதென்றால் முட்டாள்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

ராசிக் கல்லை மோதிரமாக அணிவதற்கு முன்பு, சொந்த ஜாதகத்தை ஆராய்ந்து, ஜாதக ரீதியாக பார்த்து அணிய வேண்டும். அதுவே நமக்கு நன்மையைக் கொடுக்கும். ஒவ்வொருவருடைய லக்னம் என்ன? ராசி என்ன? என்ன தசா புத்தி நடக்கிறது?, எந்தெந்த கிரகம் பலமாக இருக்கிறது?, எந்த கிரகத்தை ஆக்டிவேட் செய்தால் நமக்கு நல்லது?, என்னென்ன காரியங்களுக்காக நாம் அணிகிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது 100 சதவீதம் கைகொடுக்கும்.

உதாரணமாக, கன்னி லக்னம், விருச்சிக ராசியில் பிறந்தவர் ராசிக்கல் மோதிரம் அணிய விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ராசிக்கல் வாங்க நகைக்கடைக்கு சென்றால் அங்கிருப்பவர்கள், விருச்சிக ராசியா, பவளக்கல் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ள என்று சொல்வார்கள். அவர்கள் ராசியை வைத்துப் பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்படியே கன்னி லக்னம் விருச்சிக ராசியில் பிறந்தவர் பவள மோதிரத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வராது, பிரச்னைகள்தான் தேடி வரும்.

ஏனென்றால், பவளம் செவ்வாய்க்கு உரிய நவரத்தினம். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 8-க்கு உடையவர். ஜாதகத்தில் 3, 8 ஆகிய இரண்டு ஆதிபத்தியமும் கெடுதல்களை கொடுக்கும் இடம். கன்னி லக்னக்காரர் பவளம் அணியும் போது, அலைச்சல்கள் அதிகரிக்கும், உயரத்தில் இருந்து கீழே விழுவது, அவச்சொல், அவமானங்கள், உயிர் கண்டங்களை சந்திக்க நேரிடும். ஏனென்றால் கன்னி லக்னத்திற்கு அதிபதியான புதனுக்கு, செவ்வாய் பகை கிரகம். இயற்கையாகவே ஆகாத கிரகத்தின் ஆற்றல் மிகுந்த நவரத்தினத்தை உடன் வைத்திருந்தால் என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்.

Also Read : குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!

மற்றொரு உதாரணம் : மேஷ லக்னம் மிதுன ராசியில் பிறந்தவர் மிதுன ராசி என்பதால் மரகத பச்சை கல் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்கிறார் என்றால், அவருக்கு நண்பர்களே குழிபறிப்பது, ஒப்பந்தங்களால் பிரச்னை, பத்திரங்களில் வில்லங்கம், கடன், நோய், எதிரிகளின் தொல்லை அதிகரிப்பது போன்ற கெடுபலன்கள் அதிகமாக இருக்கும்.

எளிமையான புரிதலுக்காக : உங்களுக்கு ஆகாத ஒருவர், 24 மணி நேரமும் உங்களுக்கு கெடுதல் நினைப்பவரை அருகில் வைத்திருந்தால் எப்படி இருக்கும். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கு தொல்லைகள், பிரச்னைகளை கொடுப்பார். அதுபோலத்தான் இதுவும். அதனால் ராசி கல் அணியும்போது அடுத்தவர்கள் சொல்வதை நம்புவதை தவிர்த்து, சொந்த ஜாதகத்தை ஆராய்ந்து, நன்மையைக் கொடுக்கும் கிரகத்தின் நவரத்தினத்தை அணிந்து கொள்வது சிறப்பு.

ராசிக்கல் மோதிரம் அணியும் முறைகள்:

பெருவிரலில் (கட்டைவிரல்) மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஆள்காட்டி விரலில், குருவின் கனக புஷ்பராகம் மற்றும் செவ்வாயின் பவளம் அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் அணிவது நன்மையைக் கொடுக்கும். மோதிர விரலில் மாணிக்கம், வைரத்தை அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் மரகதப் பச்சை அணிவது சிறப்பு.

கட்டுரையாளர் :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. தொடர்புக்கு : astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry