குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!

0
1566

3.30 Minutes Read: இன்றைய தலைமுறைக்கு குடம்புளி பற்றி அதிகம் பரிச்சயம் இருக்காது. நமக்குத் தெரிந்ததெல்லாம் புதுப்புளிதான். கொடம்புளி, மலபார் புளி, பழம்புளி, மீன்புளி, பானைப்புளி போன்ற பல பெயர்களில் குடம்புளி அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

சமையலில் தற்போது நாம் பயன்படுத்தும் புளி, நமது நாட்டில் பயிரிடப்பட்டது கிடையாது. மிளகாய், நிலக்கடலை போன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். காலப்போக்கில் நம் நாட்டில் பயிரிடப்பட்டு, நமது நாட்டு பொருளாகிவிட்டது. புதிய புளி வந்ததும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொடம்புளி அல்லது கோடம்புளி, பழம்புளியாகிவிட்டது. குணபாட நூற்கள் கூறுவது போல் பழம்புளி என்றால் பழமை ஆகிவிட்ட அல்லது நாட்பட்ட சாதாரண புளி என்பது தவறு. தற்போது நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் புளியைப் பற்றி சித்த மருத்துவம் பின்வருமாறு கூறுகிறது.

புத்தியும் மந்தமாகும் பொருமியே உடலுமூதும்;
பத்தியம் தவறும் சந்தி பாதமாம் சுரங்கன் வீறுந்
சந்தியும் பித்துத் தீரும் தனுவெல்லாம் வாத மேறும்;
மத்தியன் தாதுபுட்டி வருந்திரை நரை புளிக்கே

அதாவது, அறிவு அழியும், உடல் ஊதும், உடலில் வளிக்குற்றம் மிகும், சுக்கிலம் வற்றும், நரை திரை உண்டாகும். வாந்தி மற்றும் அழல் நோய்களுக்கு நன்மை பயக்கும். மருந்துண்ணும் போது தவறாக இதைக் கொண்டால் சுரம், வளி, அழல் ஐய நோய்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொருள்.

பழம்புளியின் தன்மைகள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுவது என்ன?

தீதில் பழம்புளியைச் சேர்க்கத் திரிதோடம்;

வாதமொடு சூலை கபம் மாறுங்காண்ஓதுசுரஞ்

சர்த்தியென்ற தோடமிவை சாந்தமாங் கண்ணோய் போம்;

பித்தமென்ற பேரொழியும் பேக

தீமையில்லாத பழம்புளியைச் சேர்த்தால் வளி, அழல், ஐய என்ற முக்குற்ற நோய்களும் மாறும். வளி, வலி மற்றும் நெஞ்சில் சளி மாறும். காய்ச்சல், வாந்தி சாந்தமாகும். அழல் நோய்களை விரட்டும் என்பது இதன் பொருள். அதாவது வாத, கப நோய்கள், வாந்தி, கண்நோய் போன்றவை நீங்கும்.கருஞ்சிவப்பு நிறமுள்ள குடம்புளி, குளிர்ச்சித் தன்மை கொண்டதுமக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் பி, சி போன்ற அத்தியாவசியச் சத்துகள் இதில் அதிகம் இருக்கின்றன

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி அற்புதமான தேர்வாகும். இதிலிருக்கும் `ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம்ரத்த கொழுப்பைக் குறைப்பதாகவும், எடையைக் கட்டுக்குள் வைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலிருக்கும் `கார்சினால்எனும் வேதிப்பொருள், குடம்புளியின் மருத்துவத் தன்மையை மேம்படுத்துகிறது. புற்றுசெல்களை நிலைகுலையச் செய்யும் வீரியம் கார்சினாலுக்கு இருப்பதாகவும், புற்றுக்கட்டிகளின் அளவைக் குறைப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

வயிற்றுப்புண்ணை உண்டாக்கும் `ஹெலிகோபாக்டர்பைலோரைஎனும் பாக்டீரியாவை அழித்து வயிறு, குடல்பகுதிகளின் பாதுகாவலரான குடம்புளி செயல்படுகிறது.பல்வேறு காரணிகளால் நியூரான்களுக்கு (மூளையின் நரம்பு செல்கள்) உண்டாகும் பாதிப்புகளைத் தடுத்து, அவற்றை விவேகமாகச் செயல்படவைக்கும் வல்லமை குடம்புளிக்கு இருக்கிறது. சமையலில் தவறாமல் குடம்புளியை சேர்ப்பதன் மூலம் அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையை நமது செல்கள் ஈர்த்துக்கொள்ளும். இதன்மூலம் இதய நோய் முதல் புற்றுநோய் வரை தடுக்கப்படும்.

குடம்புளியைப் பயன்படுத்துவதால் நரை, திரை, மூப்பு நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் என்கிறது மருத்துவக் குறிப்பு. குடம்புளியைப் பயன்படுத்தினால் பித்தம் குறையும், செரிமானத்தைத் தூண்டும், மலத்தை இளக்கும், மூட்டு வலியைக் குணமாக்கும்.

உடல் எடைய குறைய விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிடவும். பிறகு அதை இறக்கி குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வரவும். அதிக அளவு வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ள வேண்டும்.

குடம்புளி எடுத்துகொள்வதன் மூலம் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணம், அமிலத்தன்மை, இரைப்பை போன்ற பிரச்சனகள் கட்டுப்படுத்தப்படுகிறது. அஜீரணக்கோளாறு கொண்டிருப்பவர்கள் குடம்புளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும். எரிச்சலூட்டும் குடல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் தினமும் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அறிகுறிகள் கட்டுப்படும். குடம்புளி கலந்த தண்ணீர் தேவையற்ற பசியை அடக்க செய்கிறது. செரிமானத் தொந்தரவுகளுக்கு குடம்புளி ஊறிய நீரில் மிளகும் சீரகமும் சேர்த்துப் பருகலாம். குடம்புளியுடன் கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் கலந்து செரிமானத்தைத் தூண்டும் மருந்தாகச் சாப்பிடலாம். அசைவ உணவுகளைச் சமைக்கும்போது, இதன் பொடியைத் தேவையான அளவு பயன்படுத்தினால், வயிறு மந்தம் ஏற்படாது.

Also Read: கோதுமை ரவா பிசிபேளாபாத்! நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது!

குடம்புளியை வாங்கும்போது, பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இதை பானையில் சேமித்துவைப்பது நல்லது. ஓராண்டு வரை பழம்புளியின் வீரியம் நிலைத்திருக்கும் என்பதால், குளிர் சாதனப் பெட்டியின் ஆதரவு இதற்குத் தேவையில்லை. ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தால், அதன் வாசனையை குடம்புளி இழந்துவிடும். நீரில் குடம்புளியை ஊறவைக்கும்போது, நீரானது வெளிர்சிவப்பு / கறுப்பு நிறத்துக்கு அதிகளவில் மாறினால் அந்தக் குடம்புளி தரமானது.

குடம்புளியை உலரவைத்து மாதுளை, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களின்மீது தூவிச் சாப்பிட் டால் புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். குடம்புளியைச் சமையலில் சேர்த்துவந்தால், முதுமையில் ஏற்படும் மூட்டுவலி பிரச்னைகளைத் தள்ளிப்போட முடியும்.

பாத வெடிப்புகளால் அவதிப்படுபவர்கள், குடம்புளியுடன் வெண்ணெய் சேர்த்துக் குழப்பி, வெடிப்புள்ள பகுதிகளில் பூசிவந்தால், பளிங்குப் பாதத்தை விரைவில் பார்க்கலாம். சருமச் சுருக்கங்களைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால், கற்றாழையுடன் சேர்த்து முகத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை தடவி வந்தால் முகப்பொலிவு கிடைக்கும். தேக எரிச்சல், புண், அரிப்பு போன்ற சரும நோய்களுக்கு குடம்புளி வெளிப்பிரயோகமாக பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அழகுசாதனப் பொருள்களில் இதன் சத்துகள் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read: இது தெரியாம மருந்து, மாத்திரை சாப்பிடாதீங்க! அதிர வைக்கும் ஸ்டீராய்டு உண்மைகள்! எச்சரிக்கை ரிப்போர்ட்!

குடம்புளிதேங்காய்ப் பால் :- சிறிதளவு குடம்புளியை எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து, இரண்டு டம்ளர் நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையே தேங்காய்த் துண்டுகள் மற்றும் வெள்ளைப்பூண்டை ஒன்றிரண்டாக இடித்து அதில் நீர் ஊற்றி அரைத்து, அதிலிருந்து பால் வெளிவரும் அளவுக்கு நன்றாகப் பிழிய வேண்டும். இப்படி இரண்டு மூன்று முறை செய்தால், முழு அளவில் பால் வெளியேறும். பிறகு ஊறல் நீரிலிருந்து குடம்புளியை வடிகட்டிவிட வேண்டும். கிடைத்த தேங்காய்ப் பாலை, அந்த நீரில் சேர்த்து நன்றாகக் கலந்தால், கருஞ்சிவப்பு நிறத்தில் மருத்துவக் குணமிக்க பானம் கிடைக்கும். இதைப் பரிமாறும்போது, கொத்தமல்லி அல்லது புதினா இலைகளைத் தூவிக் கொடுக்கலாம். பிரசித்திபெற்ற இந்த பானம், வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த சிறந்த மருந்தாகும். உணவின் கடைசியில் நாம் மோர் பருகுவதைப் போல, இந்த `குடம்புளிதேங்காய்ப் பால்பானத்தைப் பருகியும், செரிமான உறுப்புகளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

உருளை வதக்கல்: உருளைக்கிழங்கைத் துண்டுகளாக நறுக்கி நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் சீரகம், நான்கு பூண்டுப் பற்கள், கொஞ்சம் குடம்புளி, பனைவெல்லம் என எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்த நறுமண மூட்டிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சில நிமிடங்களில் அதிலிருந்து மணம் வெளியாகும்போது, உருளைக்கிழங்குத் துண்டுகளை அதில் போட்டுப் பிரட்டினால் சுவையான ரெசிப்பி தயார். உருளைக்கிழங்குக்குப் பதிலாக காளான், காலிஃபிளவரையும் பயன்படுத்தலாம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, இந்த மலபார் டாமரிண்ட் எனப்படும் குடம்புளியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, லிவர் பாதிக்கப்படலாம். தோல் அரிப்பு, தோல் சிதைவு, தலைவலி, செரிமானப் பிரச்னை போன்றவை ஏற்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பழம்பொருட்கள், சிறுதானியங்கள், பாரம்பரியை உணவு வகைகள் மீதான மோகம் மக்களிடையே திரும்புகிறது. இதனால் அதன் விலையும் அதிகமாக உள்ளது. அதேபோன்று குடம்புளியும் சென்னையில் கிலோ ரூ.250 வரையிலும் விற்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*