1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது, இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும் நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். 22 பகுதிகளில், 12 ஷெட்யூல்கள், 97 திருத்தங்களுடன், 448 ஷரத்துகளை கொண்ட உலகின் நீளமான அரசியல் சாசன ஆவணம்தான் இந்திய அரசியல் சாசனம்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வரைவுக் குழு தலைவராக டாக்டர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்த குழு, இந்திய அரசியல் சட்டம், 1935 ஐ ஆய்வு செய்தது. 141 நாட்களுக்குப்பிறகு, நவம்பர் 4ம் தேதி அரசியல் சாசன நிர்ணய சபை முன் அரசியல் சாசன முன்வடிவு சமர்பிக்கப்பட்டது. இந்தியா ஒரு குடியரசாக விளங்க, நாடாளுமன்ற ஆட்சி முறை இருக்கும், கூட்டாட்சி, அடிப்படை உரிமைகள், மற்றும் சுயேட்சையான நீதித்துறை ஆகிய ஐந்து அடிப்படை அம்சங்கள் பின்பற்றப்பட்டன.
அரசியல் சாசன நிர்ணய சபை கூட்டம், இரண்டு ஆண்டு காலம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்துகளும் கோரப்பட்டன. விவாதங்கள், திருத்தங்களுக்குப்பின், 1950 ஜனவரி 24ம் தேதி, இந்திய அரசியல் சாசன இறுதி வடிவின் மீது, 308 உறுப்பினர்கள் அதன், இந்தி மற்றும் ஆங்கில வடிவில் கையெழுத்திட்டனர். அரசியல் சாசன சபையானது 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்களில் இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தியது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க மொத்தம் ரூ.64 லட்சம் செலவானது.
அரசியல் சாசனத்தை உருவாக்கிய நிர்ணய சபையில் இருந்த 299 உறுப்பினர்களில், 15 உறுப்பினர்கள்தான் பெண்கள். அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் எப்படி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் தனிப்பங்கு வகித்தனரோ அதே அளவுக்கு அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஹன்சா மேத்தா, பூர்ணிமா பானர்ஜி, துர்காபாய் தேஷ்முக், தாக்ஷாயிணி வேலாயுதன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்ட வீரர்களாக, வழக்கறிஞர்களாக, சமூக சீர்திருத்தவாதிகளாக, போராளிகளாக, அரசியல்வாதிகளாக எல்லோருக்குமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இவர்கள் வழிவகுத்தனர்.
அரசியல் சாசன நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த ஒரே பட்டியலினத்துப் பெண்மணி தாக்ஷாயணி வேலாயுதன். 1912-ல், எர்ணாகுளம் முலவுகாட்டில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட புலையர் இனத்தைச் சேர்ந்தவர். அன்றைய காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தங்கள் மார்பகங்களை மறைத்து மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்ட கொடுமை நிலவியது. அதை உடைத்து, தாக்ஷாயணி தான் முதல் முறையாக மேலாடை அணிந்து பள்ளி சென்றவர்.
இந்த இனத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலேயே படித்து அறிவியல் பட்டதாரியான முதல் பட்டியலினத்துப் பெண்ணும் தாக்ஷாயிணிதான். எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்புக்காக சேர்ந்த போது, அந்தப் படிப்பில் சேர்ந்த ஒரே பெண் தாக்ஷாயணி மட்டுமே. பிறகு, மெட்ராஸில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். 1940-ல் வார்தா ஆசிரமத்தில், ராமன் வேலாயுதனை மணந்து கொண்டார். 1945-ல் கொச்சி சட்டப்பேரவை கவுன்சிலின் உறுப்பினராகி, 1946-ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினரானார். கேரள சட்டப்பேரவையின் முதல் பட்டியலின பெண் உறுப்பினரான இவரை கவுரவிக்கும் வகையில், கேரள அரசு தாக்ஷாயணி வேலாயுதன் விருதை நிறுவியுள்ளது.
ஹன்சா ஜிவ்ராஜ் மேதா, அம்ரித் கவுர், அம்மு சுவாமிநாதன், பேகம் ஐசஸ் ரசூல், துர்காபாய் தேஷ்முக், கம்லா சவுத்ரி, லீலா ராய், மாலதி சவுத்ரி, பூர்ணிமா பானர்ஜி, ரேணுகா ராய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபாளினி, விஜயலட்சுமி பண்டிட், அன்னி மாஸ்கரனே ஆகியோர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்ற பிற பெண்கள் ஆவர்.
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் – டிசம்பர் 6, 1946
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் – டிசம்பர் 9, 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் – தில்லி
அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழுவானது ஆகஸ்ட் 29,1947 இல் அமைக்கப்பட்டது. இதில், கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமாச்சாரி அய்யர், கே.எம்.முன்ஷி, சயத் முகமது சாதுல்லா, மாதவ ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோவிந்த பல்லப பந்த், தேவி பிரசாத் கேத்தான், பிஎல் மிட்டர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். வரைவுக்குழு இல்லாமல், அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் மேலும் 14 குழுக்கள் இருந்தன. இதில் எந்தக் குழுவிலும் மகாத்மா காந்தி இடம்பெறவில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*