செயல் மூலம் வளர்ந்த பின்தான் பேச வேண்டும்! தமிழினத் தலைவர் பிரபாகரனின் வரலாறு, பொன்மொழிகள் பற்றிய மீள் பார்வை!

0
276

4 minutes Read: ஒரு தவறு நடந்தால், பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள் எனச் சொன்ன தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம் இன்று. விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஈழத்தமிழ் மக்கள் இன்றும் கருதுகிறார்கள்.

ஈழத்தீவு, தமிழர்களின் பூர்விக நிலம். வட இந்தியாவிலிருந்து குடியேறிய மன்னன் விஜயன். அவனுக்கு கைகொடுத்து உதவியவள் குவேனி எனும் தமிழ்மகள். இதைச் சொல்வது சிங்களவர்களின் புனித நூலான மஹாவம்சம். எனில், அங்கு சிங்களவர்கள் எனும் இனம் குடியேறுவதற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்தார்கள். சிங்களவர்களின் புனித நூலே அதை பறைசாற்றுகிறது.

கால ஓட்டத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக நலனுக்காக ஒன்றாகச் சேர்த்த நாட்டில், சுதந்திரத்துக்குப் பிறகு அதிகாரங்கள் அனைத்தும் சிங்களவர்களின் கைக்குப் போனது. பெரும்பான்மைச் சிங்களவர்கள், தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்க ஆரம்பித்தார்கள். கல்வி உரிமையை, வழிபாட்டு உரிமையை, நில உரிமையைப் பறித்து, தமிழர்களை உரிமையற்றவர்களாக மாற்றினார்கள்.

ஈழத்தமிழர்களின் உரிமை வேண்டி, தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட முப்பதாண்டுகால அறப்போராட்டம், உரிமைப் போராட்டம் தோற்ற பின்னர்தான், ஈழத்தமிழர்கள் ஆயுதமேந்திய நிலை ஏற்பட்டது. எடுத்ததும் ஆயுதமேந்தினார்களா ஈழத் தமிழ் மக்கள்? யார் இந்த பிரபாகரன்? அவர்தான் முதன்முதலில் ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்தாரா?

1954, நவம்பர் 26-ல், வல்வெட்டித்துறையில் சிவபக்தரும் காந்தியவாதியுமான வேலுப்பிள்ளைபார்வதி அம்மாள் தம்பதியருக்கு 4-வது மகனாகப் பிறந்தவர்தான் பிரபாகரன். மாவீரன் பிரபாகரனின் பிறந்த தினமான இன்று, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும், பிரபாகரனின் நேர்மையையும் வீரத்தையும் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பிழைக்கப்போன இடத்தில் தமிழர்கள் நாடு கேட்பது நியாயமா? என்று ஈழப்போராட்டத்தை முன்வைத்து சிலர் கேள்வி எழுப்புவதுண்டு. இதற்கு பதிலளித்த பிரபாகரன், தமிழ் மன்னர்கள் படை நடத்திச் சென்று வென்றெடுத்த எந்த நாட்டையும் தாங்கள் ஆள நினைக்கவில்லை. அந்தந்த நில மன்னர்களிடமே கையளித்தார்கள். அது, தமிழர் மாண்பு. அப்பெரும் மாண்பு பொருந்திய தமிழினத்தில், பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்பானா தமிழன்?, இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்றார்.

கொடூர ஆயுதங்களோடு தாக்கும் எதிரிகளை நிராயுதபாணியாக எதிர்கொள்வதை அவர் மனம் ஏற்கவில்லை. பிரபாகரன் மட்டுமல்ல, ஈழத்தில் அப்போது பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் மனங்களும் அதே கொந்தளிப்பில்தான் இருந்தன. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் ஆயுதங்களை ஏந்தத் தயாரானார்கள். அப்படித்தான் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கியது. பல்வேறு சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்தவர்கள், ஓரியக்கமாக இணைந்தார்கள். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்றானது.

நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.” என்று சொல்வார் பிரபாகரன். எந்த பெரிய அச்சுறுத்தலைக் கண்டும் சிறிதும் அச்சமுறாத, எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகு வைக்காத, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத் தமிழ்மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரானார்.

தமிழர்களிடத்தில் ஒரு குணம் இருக்கிறது. யாராவது ஒருவர் பின்னால் மொத்தமாக அணி திரண்டு வந்து காப்பாற்றுவார் என நம்புவது. ஆனால் அது அப்படி அல்ல, மக்கள் போராட்டமே வெல்லும். நான் என் இன விடுதலைக்காகப் போராடும் ஒரு சாதாரண விடுதலைப் போராளி மட்டுமேஎன்று தன்னை அறிவித்துக்கொண்டவர் பிரபாகரன்.

சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழ விரும்புகிறோம். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்’’. ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.” என்று சொல்வார் பிரபாகரன்.

சிங்கள ராணுவம் தமிழர்களைக் கண்மூடித்தனமாக அழிப்பதுபோல நாங்கள் சிங்கள மக்களை அழிக்க வேண்டுமென முடிவெடுத்தால், தினம் ஆயிரம்பேரைக் கொல்லமுடியும். எங்களுடைய ஒரு தாக்குதல்கூட அப்பாவி சிங்களமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதல்ல. நாங்கள் எதிர்த்து நிற்பது எங்கள் மண்ணில் அதிகாரம் செலுத்தும் சிங்கள ராணுவத்தையே தவிர, அப்பாவி சிங்கள மக்களை அல்லஎன்று கூறியவர் பிரபாகரன்.

இலங்கை ராணுவத்தினர், பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதுமான 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால், ஒரு படத்தில்கூட மதுபானக் குவளையுடன் பிரபாகரனைக் காண முடியவில்லை. பலரும் கற்கவேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தனஎன்று சிங்கள ராணுவ ஜெனரல் கமால் குணரத்னாவால் பாராட்டப் பெற்றவர் பிரபாகரன். அவர் மட்டுமல்ல, இன்றளவும் பிரபாகரனைப் போற்றும் சிங்கள ராணுவத் தலைவர்கள், புத்த மதத் தலைவர்கள் பலர் உண்டு.

பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முப்படைகள் மட்டுமல்லாது, தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமிழீழ வைப்பகம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம், சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி என நிர்வாக ரீதியாகப் பல பிரிவுகளையும், ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானகாந்தரூபன் அறிவுச்சோலை‘, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானசெஞ்சோலை இல்லம்‘, உடல் வலுவிழந்தோருக்குவெற்றிமனை காப்பகம்முதியவர்களைப் பாதுக்காக்க, ‘அன்பு முதியோர் பேணலகம்‘, ‘சந்தோஷம் உளவள மையம்‘ (மனநோயாளிகளுக்கானது), ‘நவம் அறிவுக்கூடம்‘ (பார்வை இழந்த போராளிகளுக்கானது) போன்ற இல்லங்களையும் பிரபாகரன் நடத்திவந்தார்.

அதுமட்டுமா, தனி வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் என தனி ராஜாங்கத்தையே நடத்தியவர். தவிர, சமூக சீர்திருத்தங்களிலும் பெண் விடுதலை சார்ந்த விஷயங்களிலும் தனிக்கவனம் செலுத்தியவர். பேசுவதோடு மட்டுமல்லாமல், வரதட்சணை போன்ற விஷயங்களை ஒழித்து, நடைமுறையிலும் பெண்களுக்கான முன்னுரிமையை நிலைநாட்டியவர் அவர். படைகளிலும் முக்கியப் பொறுப்புகளில் பெண்களை அமர்த்தியவர் பிரபாகரன்.

தமிழீழம், ஒரு சோஷலிஸ அரசாக அமையப்பெறும். இதில், மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும். இந்த சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன், அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். இந்தியாவோடு நேச உறவுகொண்டு, அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்என்று சொன்னவர் பிரபாகரன்.

புலிகள் வலிமையாக இருந்த காலத்தில் எந்த நாட்டின் அச்சுறுத்தலும் இல்லை. குறிப்பாக, சீனாவின் ஆதிக்கம் இப்போது அங்கே கொடிகட்டிப் பறக்கிறது. இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அரவணைத்தார். விடுதலைப் புலிகளின் குழு ஒன்று 1984-ல் எம்.ஜி.ஆரை முதல்முறையாகச் சந்தித்தது. அன்டன் பாலசிங்கம்தான் குழுவின் தலைவர். அந்த முதல் சந்திப்பிலேயே 2 கோடி ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். ‘அப்போது புலம்பெயர் தமிழ் உறவுகளிடமிருந்து கிடைத்துவந்த சிறிய அளவிலான நிதி உதவிதான் இயக்கத்தின் ஒரே நிதி ஆதாரம். அப்படியொரு நிலையில் இரண்டுகோடி என்பது மிகப் பெரிய தொகை.

ஆனால் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கும், விடுதலைப் புலிகளுக்குமான உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இருந்ததில்லை. 1973-ம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களுக்கு உங்களின் தார்மீக ஆதரவு உண்டா என செய்தியாளர்கள் கேட்டபோது, ஆதரவு இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்ததாக, பழ நெடுமாறன் பதிவு செய்துள்ளார்.

பல அரசியல் ஏற்றத்தாழ்வுகள், போராட்டங்கள், போர், தனி அரசாங்கம் என கம்பீரமாக படை நடத்தி தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18-ல் வீரமரணம் அடைந்தார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*