அச்சுறுத்தும் நோரோ வைரஸ்! நீர் நிலைகளில் கழிவுநீர் கலந்தால் டேஞ்சர்! நோரோவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்?

0
830

2.30 Minutes Read: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில்நோரோவைரஸ்(Norovirus) கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது

நோரோ வைரஸின் முழுப்பெயர் நார்வாக் வைரஸ். இதற்குப் பெயரேவிண்டர் வாமிட்டிங் பக்என்றுதான் கூறுவார்கள். இந்த வைரஸ் 1968ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் மழைக் காலங்களில்தான் பரவும். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதே இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கியக் காரணம்.

மற்ற சாதாரண வைரஸ்கள் போன்றதுதான் இந்த நோரோ வைரஸும். இந்தநோரோவைரஸ் பெரும்பாலும் கழிவு நீர் மூலமாகத்தான் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. மாசுபட்ட தண்ணீர், பாதுகாக்கப்படாத உணவு, சுத்தம் குறைந்த உணவு உணவுப் பொருட்கள் மூலமாகவும்நோரோவைரஸ் பரவும். நோரோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரது மலத்தின் மூலமும், வாந்தியின் மூலமும் நோரோ வைரஸ்கள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தரமற்ற சானிடைசர்களுக்கு இந்த வைரஸ் கட்டுப்படாமல் தப்பிவிடும்.

அதிலும், சமீபத்திய கனமழையைத் தொடர்ந்து குண்டும் குழியுமாகிப்போன இடங்களில் தேங்கியிருக்கும் அசுத்தங்களில் நோரோ வைரஸ் வளமாகக் குடித்தனம் நடத்தும். விடுதிகள், மக்கள் தங்கும் இடங்கள், உணவுக்கூடங்கள் மற்றும் நெருக்கமான வசிப்பிடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு எளிதாகத் தொற்றிவிடும்இந்த வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் கையாளும் உணவைச் சாப்பிடுவது அல்லது அவர் தொட்ட இடங்களைப் பிறர் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் பரவலாம். பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுக்கும்போது, அதன் நுண்ணிய துகள்கள் அருகில் உள்ளவர் மீது படுவது வைரஸ் பரவக் காரணமாகலாம். சிறு துளி விழுந்தாலும் அது உணவிலும் தண்ணீரிலும் கலந்துவிடலாம்.

வெள்ளம் ஏற்படும் காலங்களில் அசுத்தமான தண்ணீரிலிருந்து இந்தக் கிருமிகள் குளத்து நீருடனும் ஆற்று நீருடனும் கலந்துவிடும். அந்த அசுத்த நீரைச் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்போது அப்பகுதிவாழ் மக்கள் பலருக்கும் ஒரே நேரத்தில் இந்தத் தொற்று பரவக்கூடும். ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், பல்லிகள் போன்றவையும் இந்த வைரஸ் பரவக் காரணமாகலாம்.

நோரோ வைரஸ் ஒருவரது வயிற்றுக்குள் சென்ற 12 மணி நேரத்திற்குப் பிறகு அவருக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். முதலில் வயிறு மந்தம் ஏற்படும். உணவு சாப்பிடப் பிடிக்காது. வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். சிலருக்குக் காய்ச்சல், கால், கைகளில் வலி ஏற்படும். நோரோ வைரஸ் தாக்குவதால் ஏற்படும் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் உடலில் உள்ள நீர்ச்சத்து மெல்ல மெல்ல வெளியேறிவிடும். இதுதான் முக்கியப் பிரச்சினை. மூன்று நாட்களில் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகி விடுவார்கள்.

ஆனால், அவர்களின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு வாரத்திற்காவது நோரோ வைரஸ் வெளியேறிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால் பிறருக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். இந்த வைரஸால் நீர்ச்சத்து வெளியேறிய பிறகு மீண்டும் நீர்ச்சத்தை எடுக்க உடல் சிரமத்திற்கு உள்ளாகும்போது கிட்னி போன்ற உறுப்புகளில் பிரச்சினை ஏற்படலாம். இதனால் அதன் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். மற்றபடி இந்த வைரஸால் உயிருக்கு நேரடியான பாதிப்பு கிடையாது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர், வயதானவர்கள், கிட்னி, இதய பாதிப்பு உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதிக்கிறது. சாதாரண மலப் பரிசோதனையில் நோரோ வைரஸ் தெரியாது. ‘RT-PCR’ பரிசோதனையில்தான் இதைக் கண்டறிய முடியும்.

உங்களால் உணவை எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், வலுக்கட்டயமாக நீர்ச்சத்தை உடலுக்குள் செலுத்த முயற்சி செய்ய வேண்டும். காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சிறிய இடைவெளியில் குடிப்பது நல்லது. நமது உடலிருந்து சிறுநீர் அதிக அளவில் வெளியேறும்படி தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து, நான்கு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்நீர் ஆகாரம் என்பது தண்ணீர் மட்டும் மல்ல கஞ்சி, இளநீர், மோராகவும் குடிக்கலாம்.

இத்துடன் மருந்துவர்கள் பரிந்துரைக்கும் ஓஆர்எஸ்ஸை அருந்துவதன் மூலம், நமது உடலிருந்து வெளியேறிய நல்ல உப்பு ஈடுசெய்யப்படும். இதன் மூலம் நமக்கு சக்தி கிடைக்கும். சோர்வு நீங்கும். நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் நீர்ச்சத்தைதான் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிலர் என்ன கொடுத்தாலும் வாந்தியாக அதனை வெளியேற்றிவிடுவார்கள். அவர்கள் மருத்துவர்கள் அளிக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது நலம். தொற்றாளரை வீட்டில் தனிமைப்படுத்தியோ, மருத்துவமனையில் அனுமதித்தோதான் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதற்கென சிறப்பு சிகிச்சை எதுவுமில்லை.

தினமும் சாப்பிடுவதற்கு முன்னரும், பின்னரும் சோப்பினால் கைகளைக் கழுவிக் கொண்டாலே போதும். நோரோ வைரஸிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அடுத்து கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளைச் சரிசெய்வதே நோரோ வைரஸுக்குப் போடப்படும் சரியான கைவிலங்குகள். அதற்கு முதலில் குடிநீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும். சமையலறையை வெகு சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காய்கறிகளையும் பழங்களையும் தண்ணீரில் கழுவுவதைவிட வினிகரில் கழுவினால் வைரஸ் ஒழியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கேரள மாநிலத்திலும், கர்நாடகாவில் சிலருக்கும் நோரோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஹோட்டல் உணவுகள், டீகடை திண்பண்டங்கள், வெளியில் செல்லும் இடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் தண்ணீரை நன்கு காய்ச்சி பருகுவது நல்லது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*