குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல், இந்தக் கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்குகிறது. சுமார் 3 வாரங்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதையொட்டி மக்களவை சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
நாடாளுமன்றம் கூடியதும், மக்களவையில் முதலில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதன் மீது எம்.பி.க்கள் விவாதம் நடத்துவார்கள். அதன் பிறகு மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்படும். அதன்பிறகு மாநிலங்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவார். அதன்பிறகு புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இதையடுத்து, மிக முக்கியமானதாக விளங்குவது ’கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021’. இதன் நோக்கம், ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதும், புழக்கத்தில் உள்ள இதர கிரிப்டோ கரன்சிகளை தடைசெய்வதுமாக இருக்கலாம். ஆனாலும் இதுதொடர்பான இருவேறு தகவல்கள் வெளியாகின்றன.
Also Watch : கிரிப்டோவுல போட்ட காசு அவ்ளோதானா? | தெரியாம இன்வெஸ்ட் பண்ணிட்டு…!
புதிய சட்ட மசோதாவால் இதுவரை கிரிப்டோவில் முதலீடு செய்தவர்களுக்கு பாதிப்பு வருமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதிகாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் கிரிப்டோவில் முதலீடு செய்த இந்தியர்களுக்கு, அநேகமாக அவற்றை விற்று வெளியேற அவகாசம் அளிக்கப்படலாம். ஆனால், அதன் லாபம் வழக்கமான வரி விதிப்புக்கு அடங்கும். பிட்காயின் போன்று எதிரியம், பைனாஸ், சொலானா, டெதர் என சுமார் 7 ஆயிரம் வகையான கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் இருக்கின்றன.
யாரிடமிருந்து யாருக்கு செல்கிறது என்பது எவருக்குமே தெரியாது என்பதுதான் கிரிப்டோ கரன்சியின் சிறப்பே. இதை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவோரை விட நிழல் தேவைகளுக்காக நாடுவோரே அதிகம். கிரிப்டோ கரன்சி என்றாலே அரசுகள் அச்சமடைவதற்கு இதுதான் காரணம். இந்தியாவும், கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்துவதன் நோக்கமாக பயங்கரவாத செயல்பாடுகளையே காரணமாகச் சொல்கிறது.
அதேபோல், நாட்டின் பொருளாதாரத்துக்கு கிரிப்டோ கரன்சி நாசம் விளைவிக்கும் என்ற அச்சமும் அரசுகளுக்கு உண்டு. தேசத்துக்கு என பிரத்யேக கரன்சியும் அதன் புழக்கத்துக்கான கட்டுப்பாடுகளும் விதித்திருக்கையில், போட்டியாக மாயக் கரன்சி புழங்குவதை அரசுகள் விரும்புவதில்லை. கிரிப்டோ கரன்சியின் கை ஓங்கினால், நாடு அங்கீகரித்த நாணயத்தின் மதிப்பு வீழலாம்.
கிரிப்டோ பரிவர்த்தனைக்கு அடிப்படையான பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகிராஃபி தொழில்நுட்பங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகின்றன. அவற்றின் ஆரம்ப அலைக்கான தடுமாற்றங்களே தற்போது நிகழ்ந்து வருவதால், அதன் அங்கமான கிரிப்டோ வளர்ச்சியை முழுதுமாக புறக்கணித்துவிட முடியாது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*