ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்! கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிப்பதாக இல்லை – ICMR

0
69

தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவி விட்டது. ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், கண்காணிப்பை அதிகரித்தல், மேம்பட்ட சோதனை, ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காணுதல், தடுப்பூசி வேகத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐசிஎம்ஆர் தொற்று நோயியல், தொற்று நோய்கள் துறை தலைவர் டாக்டர் சாமிரான் பான்டா, “இந்த புதிய வைரஸில் கண்டறியப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. இது ஆபத்தானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது கடுமையான நோயை ஏற்படுத்துவதாகவும் இல்லை என்றே தெரிகிறது. அத்தகைய செய்திகளோ, தரவுகளோ எதுவும் வரவில்லை. இந்த புதிய வகை வைரஸ் பாதிப்புகளின் வீரியம் தொடர்பான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். எனவே,பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லைஎன கூறினார்.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடுமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லைஅதேபோல், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது, இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லைஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமிக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அரசு பட்டியலிட்ட 12 நாடுகளை தவிர பிற நாடுகளில் இருந்து வருபவர்களும் கொரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டும் விமான நிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வகை கொரோனாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள், பொது சுகாதாரத்துறை இயக்குனர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வகங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*