பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை! மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

0
51

பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்க எந்தவிதமான திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு அடையாளம் தெரியாத குழுக்களால் சர்வதேச சந்தையில் பிட்காயின்  அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடு ஏதும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல், பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பிட்காயினில் முதலீடு செய்வது, பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் விதமாககிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021’ஐ மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்த மசோதாவின் மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகள்  இந்தியாவில் தடை செய்யப்படலாம். அதே நேரம், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது ஒப்புதலுடன் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவையில் கிரிப்டோ கரன்சி குறித்து சுமலதா அம்பரீஷ், டி.கே. சுரேஷ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. பிட்காயின் குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு சேகரிக்கவில்லைஎனத் தெரிவித்தார். இதன் மூலம் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக இந்தியா அறிவிக்காது எனத் தெளிவாகியுள்ளது.

Also Watch : கிரிப்டோவுல போட்ட காசு அவ்ளோதானா? | தெரியாம இன்வெஸ்ட் பண்ணிட்டு…! 

இதேபோல், இந்தியாவில் நடக்கும் கிரிப்டோ வர்த்தகம் குறித்து அரசு அறிந்திருக்கிறதா? என தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். மேலும், கிரிப்டோ வர்த்தம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியையும் நிதி அமைச்சகத்திடம் அவர் முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகள் ஒழுங்குமுறை செய்யப்படவில்லை, கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பற்றிய தகவல்களை நிதி அமைச்சகம் சேகரிக்கவில்லை என்று பதிலளித்தார்.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இரண்டு தினங்களுக்கு முன்பு நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதான் கூறியிருந்தார். இதனிடையே, முன்னணி கிரிப்டோ கரன்சியில் ஒன்றான பிட்காயினை மத்திய அரசு அங்கீகரிக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*