வார ராசிபலன் : இவங்களுக்கு காதல் கைகூடும்..! சினிமாக்காரங்க, மெக்கானிக்களுக்கு யோகம்! அரசியல்வாதிங்களே எச்சரிக்கை..!

0
42
Weekly Horoscope: Check Astrological prediction from August 21st to 27th August 2023 | GETTY IMAGE

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 21ல் இருந்து ஆகஸ்ட் 27வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : முன்கோபம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் உபஜெய ஸ்தானமான 6ல் இருப்பது ஓரளவுக்கு சிறப்பு. எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி தேர்வு, வழக்குகளில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்றாலும் கடன் தொல்லை அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருங்கள். சிலருக்கு பல் வலி, பல் தொடர்பான பிரச்னைகள் வந்து அவதிப்படுத்தும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. தன ஸ்தான அதிபதியான சுக்கிரன் 4ல் உள்ளதால் ஆடம்பரமான வாழ்க்கைக்குள் அஸ்திவாரம் போடுவீர்கள். வீடு, வாகனங்கள் மூலம் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் புகழ் வெளிச்சத்திற்கு வருவார்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். 23ந்தேதி பிற்பகல் தொடங்கி 25ந்தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். நீண்டதூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம் : யாருக்காகவும் தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ளாத ரிஷப ராசிக்காரர்களே, ஆசைகளை குறைத்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வருவீர்கள். இசைக் கருவி விற்பனை, பழுது பார்க்கும் தொழிலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய முயற்சிகள் மூலம் புகழடைவார்கள். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். சொகுசு விடுதி, உயர்தர உணவகங்கள் நடத்துபவர்கள், ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். திருமண வயதில் உள்ள மகன், மகளுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். குழந்தைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அரசு வேலை மனைவிக்கு தற்போது கிடைக்கும். 25ந்தேதி பிற்பகல் தொடங்கி 27ந்தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள்.

Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

மிதுனம் : சாந்தமான குணம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 3ல் இருந்தாலும் தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் சூரியனுடன் இணைந்து இருப்பது சிறப்பு. தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். பேச்சாளர்கள், ஓவியர்களின் திறமை வெளிச்சத்திற்கு வரும். அரசியல் கட்சி மேடை பேச்சாளர்கள் மட்டும் பொதுவெளியில் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். கணித பாடத்தில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு அமையும். குழந்தைகள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படும். மிதுன ராசிக்காரர்கள் தந்தையை அனுசரித்து செல்வது நல்லது. 27ந்தேதி பிற்பகலுக்கு பிறகு சந்திராஷ்டமம் என்பதால் வருமானம் கைக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம்.

கடகம் : வேகமும், விவேகமும் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிநாதன் சந்திரன் வளர்பிறையை நோக்கி செல்வதால் கடந்த வாரம் இருந்த எதிர்மறை எண்ணங்கள், பலன்கள் மாறும். மனக்குழப்பம் விலகும், தாய், மனைவி, மாமியார் என குடும்ப உறவுகள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தன ஸ்தான அதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதால் ஆவணி மாதம் முழுவதும் வருமானத்தில் தடை இருக்காது. தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் இருந்தாலும், சனிபகவான் பார்ப்பதால் அடிக்கடி சிறுசிறு பிரச்னைகள் வந்து நிம்மதியை கெடுக்கும். வெளியூர், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு, ஆதாயம் கிடைத்தாலும் பூர்வீகத்தை விட்டு வெளியூரில் தங்கி விடலாம் என்ற எண்ணம் தற்போதைக்கு வேண்டாம். ஆசிரியர், வங்கி பணியாளர்களுக்கு அனுகூலமான வாரம் இது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

சிம்மம் : லட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன் ஆட்சி பெறுவதும், புதனுடன் இணைவது சிறப்பு. மன தைரியம், தன்னம்பிக்கையை இழந்து அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் திணறிய உங்களுக்கு தற்போது புதிய வழி பிறக்கும். எதையும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கும் நிலை உண்டாகும். அனைத்தும் சரியாக அமைந்தாலும் சனிபகவான் ராசி, சுகம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். அதனால் எந்தவொரு விஷயத்தை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து, நிதானமாக செய்வது நல்லது. உடல் சோர்வு, உடலில் சிறிய குறைவு என்றாலும் உடனடியாக கவனித்து விடுங்கள். அசையா சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானம், அவற்றை பாதுகாப்பதற்கே செலவாகி விடும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

கன்னி : கல்வி அறிவை காட்டிலும், அனுபவ பாடமே பெரிது எனும் நம்பும் கன்னி ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 12ல் இருந்தாலும் தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் சூரியனுடன் இருப்பது சிறப்பு. அரசு ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். தந்தையின் தொழில், வியாபாரத்தை நடத்துபவர்களுக்கு அனுகூலமான வாரம். 3, 8க்கு உடைய செவ்வாய் ராசியில் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சகோதரர்கள், மைத்துனர் உடன் கருத்து வேறுபாடு வந்து செல்லும். உறவினர்கள், நண்பர்களின் கடனுக்கு ஜாமின் கையெழுத்து போடுவது, அடுத்தவர்களின் பிரச்னையில் தலையிட வேண்டாம். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த சொத்து வந்து சேரும். வறண்ட நிலத்தில் தண்ணீர் வசதி அமைக்கும் பணிகளை மேற்கொள்வீர்கள். விவசாயம், காய்கறி, அரிசி, தண்ணீர், பால் பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபகரமான வாரம். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

துலாம் : கலைகளில் ஆர்வம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் 10ல் இருப்பதும், ராஜயோகாதிபதியான சனிபகவான் தன ஸ்தானத்தை பார்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தால் வருமானம் அதிகரிக்கும். பழம் வியாபாரம், ஜூஸ் கடை வைத்திருப்பவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். சுற்றுலா வாகனங்கள், சொகுசு விடுதிகள், இனிப்பு, உணவகங்கள் மூலம் ஆதாயம் உண்டு. பாடகர், இசையமைப்பாளர், கதை, வசனம், ஒளிப்பதிவு, புகைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு அனுகூலமாக வாரம் இது. ஃபேஷன் டிசைனிங் சார்ந்த உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாழ்க்கை துணையின் சொத்து தற்போது கைக்கு வரும். ராசியில் கேது இருப்பதால் அவ்வப்போது குறுக்கு புத்தி, சிந்தனை வந்தாலும் அதை புறந்தள்ளி விடுங்கள். குல தெய்வமான மதுரை வீரர், முனீஸ்வரர், கருப்பன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவது நல்லது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

விருச்சிகம் : யாராலும் புரிந்து கொள்ள முடியாத விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் உபஜெய ஸ்தானமான 11ல் இருப்பது சிறப்பு என்றாலும் அவருக்கு பிடிக்காத கன்னி வீட்டில் இருப்பதால் கலப்பு பலன்கள் நடைபெறும். காலிமனை, விவசாய நிலங்கள் மூலம் வருமானம் கிடைக்கும். சகோதரர்கள், சித்தப்பா உறவுகள் வழியில் நன்மைகள், ஆதாயம் உண்டு. பழைய பொருட்கள், ரசாயனங்கள் தொடர்பான தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. ஒப்பந்தம், ஆவணங்கள், பத்திரம், இணையதளம் போன்ற விஷயங்களில் மட்டும் கவனமாக இருங்கள். மனைவி மூலம் திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். தந்தையின் தொழில், வியாபாரத்தை எடுத்து செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். சமையல் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் வார இறுதி நாட்களில் மனக்குழப்பம், மனதில் தெளிவு இல்லாத நிலை ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள்.

Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

தனுசு : சிந்தித்து செயல்படும் தனுசு ராசிக்காரர்களே, பிள்ளைகளால் கவுரவம், பெருமை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினாலும் அனுசரித்து செல்லுங்கள். எந்தவொரு வேலையாக இருந்தாலும் தள்ளிப் போடாமல் உடனே செய்து முடித்து விடுங்கள். அப்பறம் பார்த்து கொள்வோம் என்று தள்ளிப் போட்டால் வாய்ப்புகள், வெற்றிகளை நழுவ விடுவீர்கள். சோம்பேறித்தனம், தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளுங்கள். ஆடம்பர விஷயங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடல்பருமன், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். திருமண வயதில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு வரன் அமைவதில் தாமதம் ஏற்படும். இளைய வயதினருக்கு காதல் தோல்வி, எதிர் பாலினத்தவரால் ஏமாற்றம் அடைவீர்கள். வார இறுதி நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால் குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து விடுங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

மகரம் : பணத்தை சரியாக கையாளும் திறன் கொண்ட மகர ராசிக்காரர்களே, ராசிநாதனும் தன ஸ்தான அதிபதியான சனிபகவான் ஆட்சி பெற்று இருப்பதால் தாமதமானாலும் உழைப்பின் பலனை அடைந்து விடுவீர்கள். அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு, மனதில் பட்டதை துணிந்து செய்யுங்கள். 10ல் கேது இருப்பதால் சித்த மருத்துவம், ஆன்மிகத்தில் இருப்பவர்கள், தையற்கலைஞர்கள், நூற்பாலை பணியாளர்களுக்கு அனுகூலமான வாரம் இது. வார இறுதி நாட்களில் வாழ்க்கை துணை, பெற்றோர் வழியில் ஆதாயம் உண்டு. மனைவியால் வாழ்க்கை தரம் மேம்படும். நண்பர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். நிலுவையில் உள்ள வரி பாக்கி, சட்ட விதிகளை பின்பற்றுவது மூலம் அரசு வழியில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளை தவிர்க்க முடியும். தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கும்பம் : பிடிவாத குணம் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ராசிநாதன் சனிபகவான் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. 7ம் அதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதால் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு ஆவணி மாதம் முழுவதும் அனுகூலமாக இருக்கும். சூரியன் உடன் புதன் இணைந்து இருப்பதால் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன்பு ஒருமுறைக்கு பலமுறை படித்து பார்ப்பது நல்லது. அஜாக்கிரதையாக இருந்தால் கூட்டு தொழிலால் கிடைக்கும் லாபத்தை இழக்க நேரிடும். காதல் விவகாரங்கள் கைகூடும். சிலருக்கு காதலால் பிரச்னை, மன உளைச்சல் ஏற்படும். வாழ்க்கை துணைக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். உஷ்ணம், தோல் பிரச்னை, தோள்பட்டையில் வலி, நரம்பு தொடர்பான தொல்லைகள் வந்து செல்லும் என்பதால் கவனமாக இருங்கள். விவசாயி, கனரக வாகனங்கள், ஆயுதங்களை கையாளும் நபர்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

மீனம் : ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்ட மீன ராசிக்காரர்களே, 7ம் அதிபதி புதன் 6ல் இருப்பதும், ராசிக்கு 2ல் ராகு இருப்பதாலும் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் வேண்டாம். வாழ்க்கை துணையின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து விடுங்கள். தந்தையை அனுசரித்து செல்வது நல்லது. தந்தையின் சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த கடன், நிதியுதவி, ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் நண்பர்கள், உறவினர்களுடன் கேளிக்கை, சுற்றுலா சென்று வருவீர்கள். ராசிக்கு 8ல் கேது இருப்பதால் தனிமையை விரும்புவீர்கள். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பீர்கள். 21, 22, 23 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதிர்பாலினத்தவர் உடன் தேவையற்ற வாக்குவாதங்களை உருவாகும் என்பதால் கவனம் தேவை.

தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry