ஐம்பதினாயிரம் ஆண்டு நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக கலாச்சாரத்தினூடே நகரும் ஒரு பண்பாட்டு அசைவு எங்கள் பென்னிகுயிக். பென்னி குயிக் என்ற இந்த பெயரை உச்சரித்தாலே முல்லைப் பெரியாறு பாயும் ஐந்து மாவட்டத்திலும் அன்பு இழையோடுகிறது.
மானுடமும், மனித நேயமும், கொஞ்சம் ரத்தமும், கொஞ்சம் சதையுமாய் குழைத்து உருவாக்கப்பட்ட அந்த நெடிய உருவம் தான் ஐந்து மாவட்டங்களையும் இணைக்கும் ஒரு அச்சாணி. முல்லைப் பெரியாறு அணையை கட்டி தந்தார் என்பதைத் தாண்டி, அதற்காக அவர் சுமந்த மெனக்கெடல்கள் தான் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடச் செய்கிறது.
கூகுளில் குடும்பம் நடத்தும் ஒரு நச்சுக்கும்பல், பென்னிகுயிக் தன்னுடைய சொத்துக்களை விற்று வந்து அணையை கட்டினாரா, இல்லையா? என்று அரசு வாகனங்களில் ஆலோலம் பாடும் நிலையில், நன்றி கெட்ட மனிதர்களுக்கும் சேர்த்து தான் நாம் கட்டும் அணை தண்ணீரை தரப்போகிறது என்கிற நினைவோடு கம்பீரமாய் கேம்பர்லியில் உறங்கிக் கொண்டிருக்கிறது அந்த உடல்.
முல்லைப் பெரியாறு அணையை அவர் கட்டிக் கொடுத்து 125 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. எத்தனை கோடி பேர் அந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்திருப்பார்கள், குடித்து கொண்டாடி இருப்பார்கள்?எத்தனை கோடிப் பேரினுடைய வயிறுகளை அந்த தண்ணீர் பசியாற்றி இருக்கும் என்று நினைத்தால் உடம்பெல்லாம் இனம் புரியாத பரவசம் ஒன்று பரவுவதை என்னால் உணர முடிகிறது.
பசி என்று வந்தவருக்கெல்லாம் உணவளித்து உபசரித்த வள்ளலார் பெருமகன் இந்த பூமிப் பந்தில் ஒரு இயக்கமென்றால், தாகம் என்று வந்தவருக்கெல்லாம் தண்ணீர் தந்து உபசரித்த பென்னி குயிக்கும் இன்னொரு இயக்கம் தான். பசியும் தாகமும் பிரிக்க முடியாத இரட்டை குழந்தைகள் என்கிறது வரலாறு. இரு வேறு திசைகளில் வாழ்ந்த இரு வேறு மகாத்மாக்களை நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம், பசியம் தாகமும் இருக்கும் வரை நீங்கள் இருவரும் இருப்பீர்கள்.
முன்னோர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு என்பது தமிழர் அறவியலில் காலம் காலமாக தொன்று தொட்டு வரும் ஒரு மரபுத் தொடர்ச்சி. சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கற்குவேல் அய்யனார் கோயிலுக்கு சென்றிருந்தேன். கூட்டம் அதிகம் இல்லை என்பதால் மூலவரை உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
Also Read : புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!
இன்னும் ஆழமாக உற்று நோக்கினேன். கற்குவேல் அய்யனார் பத்துத் தலைமுறைகளுக்கு முன்னால் வாழ்ந்து செத்துப் போன ஒரு மாமனிதன் என்பதை எனக்கு உணர்த்தியது ஒரு அசரீரீ… மூலவரை சுற்றி குடி கொண்டிருக்கும் அத்தனை துணைச்சசாமிகளின் பெயரும் புலமாடன், கச மாடன், தூண்டி கருப்பன் என்பதாக இருந்தது. அது ஒரு வழிபாட்டுத்தலமாக எனக்குப் படவில்லை. என்னுடைய பாட்டன் வீட்டுக்கு சென்ற உணர்வையே அது எனக்கு தந்தது.
ஏதோ ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தாங்கள் வாழும் ஊரைக் காக்க , களத்தில் நின்று உயிரை விட்ட ஒரு கூட்டத்தின் தலைவன் தான் ஐயன் கற்குவேல் அய்யனார், அங்கு குடிகொண்டிருக்கும் துணைச்சாமிகள் எல்லாம் எங்கள் அய்யன் கற்குவேலுக்கு துணையாக சென்றவர்கள் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.
ஐயன் கற்குவேலின் கதையைப் போல, சுண்ணாம்பும், சுருக்கியும் வைத்து கட்டப்பட்ட அந்தப் பேரணைக்குப் பின்னாலும் ஒரு சாமி உருவாகலாம். இந்தக் கதையை நான் முடிக்கும் நேரத்தில், சுருக்கிக் கட்டுமானத்திற்கு பின்னாலும் ஒரு கடவுள் உருவாகலாம்.
எங்கள் அய்யன் பென்னிகுவிக்கை பற்றி நான் எழுதப்போகும் இந்தத் தொடரில் எந்த வசீகரமும் இருக்கப் போவதில்லை. ஜிகினா பூ பந்துகள் ஒருபோதும் அணிவகுக்காது. அரசு வாகனங்களில் எங்கள் பயணம் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. ஒரு எளியவன் இன்னொரு எளியவனை பற்றி பேசும்போது எதற்கு மாயாஜாலங்கள்?
நெடிய கதை மலரும்..!
தொடர் எழுத்தாளர் : ச.அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry