சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும்! தமிழக அரசுக்கு பாமக வலியுறுத்தல்!

0
24
Anbumani Ramadoss | File Image

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2000 மட்டுமே ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 40 ஆண்டுகள் வரை பணி செய்த அமைப்பாளர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் வழங்குவது அவர்களின் சேவையை கொச்சைப்படுத்துவதாகும்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நான் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த ஒரு கூட்டத்தில், பூ.நாகராஜன் என்ற மாற்றுத்திறனாளி பெரியவர் என்னை சந்திப்பதற்காக காத்திருந்தார். அதையறிந்த நான், அவரை நேரில் அழைத்து விசாரித்த போது கிடைத்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

பெரியவர் நாகராஜன், 37 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். பணி ஓய்வு பெற்றுள்ள அவருக்கு ஓய்வூதியமாக ரூ.2000 மட்டும் தான் வழங்கப்படுகிறது. ‘‘ நான் 60 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளி. பல நோய்களுக்கு மருத்துவம் பெற வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு வழங்கும் 2000 ரூபாயை வைத்துக் கொண்டு குடும்பச் செலவுகளை கவனிப்பேனா? மருத்துவச் செலவுகளை சமாளிப்பேனா? அல்லது பிற கடமைகளை நிறைவேற்றுவேனா?’’ என்று கேட்டார். அவரது வினாவுக்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை.

Also Read : கைப்பிடித்து செய்த சத்தியத்தையே நிறைவேற்றாத முதல்வர்! அவமானப்படுத்தும் துறை அமைச்சர்! அரசு மருத்துவர்கள் குமுறல்!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.2000 ஓய்வூதியம் போதுமானதல்ல. அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பல முறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், மாற்றுத் திறனாளி முதியவர் ஒருவர், என்னை நேருக்கு நேராக சந்தித்து, தனது நெருக்கடிகளையெல்லாம் கூறி, அதற்கான தீர்வு என்ன? என்று கேட்ட போது, அவருக்கு பதில் கூற முடியவில்லை. உங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தேன்.

எனக்கும், பெரியவர் நாகராஜுக்கும் இடையில் நடந்த உரையாடலை இங்கு குறிப்பிட்டதற்கான காரணம், மிகவும் வலிமையான அவரது வினாக்கள் ஆட்சியாளர்களின் காதுகளில் விழ வேண்டும்; அதன் பிறகாவது அவர்களின் வலிகள் களையப்பட வேண்டும் என்பது தான். ஓய்வூதியம் என்பது அரசு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் தொகை என்று ஆட்சியாளர்கள் கருதுவது தான் இத்தகைய அவலங்களுக்கு காரணம் ஆகும். இந்த அவலங்கள் அனைத்தும் போக்கப்பட வேண்டும்.

சத்துணவுத் திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போது, சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மிகக்குறைந்த தொகுப்பூதியம் தான் வழங்கப்பட்டது. அதன்பின் சத்துணவுப் பணியாளர்கள் பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியதன் பயனாக, அமைப்பாளர்களுக்கு ரூ.7,700 – ரூ.24,200, சமையலர்களுக்கு ரூ.4,100 – 12,500, சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3,000 -9000 என்ற அளவில் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு இணையாக சத்துணவுப் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் மூல காரணம் ஆகும்.

Also Read : உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் டிஜிட்டல் புத்தகம்! Know what’s better for your heath? – a digital book or a print book?

தமிழகத்தில் முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை அதிகம் என்று கூறவில்லை. இந்தத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். ஆனால், 40 ஆண்டுகள் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை தான் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? என்பது தான் பாமகவின் வினா.

சத்துணவுப் பணியாளர்களில் பெரும்பான்மையினர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அதை கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கான ஓய்வூதியம் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் அனைவருக்கும் ஒரே ஓய்வூதியம், அது மாதத்துக்கு ரூ.2000 மட்டும் தான் என்பது நியாயமல்ல. இது ஒரு நாளைக்கு 100 ரூபாயை விடக் குறைவு. இதை வைத்துக் கொண்டு அடிப்படையான தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அதைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக தனியாக மாதம் ரூ.3000 வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் சத்துணவுப் பணியாளர்களின் ஓய்வுக்காலத்தை நிம்மதியானதாக மாற்ற வேண்டும்.” இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry