மனதையும் உடலையும் ஒன்றிணைக்கும் யோகா..! ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது எப்படி?

0
84
International Yoga Day 2024: Benefits of Yoga and Common Diseases It Can Cure.

யோகா என்னும் அற்புதமான கலை உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், இந்தக் கலையில் மருத்துவரீதியான சவால்கள் அனைத்திற்கும் தீர்வுகள் உள்ளன என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். “யுஜ்’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது “யோகா’ என்னும் சொல். சிதறும் சக்தியைக் கட்டுப்படுத்துதல் என்பது இதன் பொருள். இக்கலையை ஆதிசித்தரான சிவபெருமான் அருளினார் என்பர்.

சிவபெருமான் அருளியதை சித்தர் பெருமக்கள் தங்கள் இறைசக்தியால் அறிந்து, மக்கள் பயன்படும் வகையில் அளித்தனர். இக்கலையை தகுந்த குரு மூலம் கற்றுக்கொண்டு தினமும் பயிற்சிசெய்தால், என்றும் இளமையுடன் திகழ்வதுடன் உடல்நலமும் சீராக இருக்கும். உடலையும், உயிரையும், ஆன்மாவையும் ஒன்றிணைக்கும் அற்புதமான வாழ்வியல் கலையே யோகா.

யோகாசனங்களில் ஆசனவணக்கம், சூரிய நமஸ்காரம், சர்வாங்காசனம், மத்யாசனம், பாதஹஸ்தாசனம், தனுராசனம், விபரீதகரணி, அர்த்தமத்யாசனம், ஹலாசனம், புஜங்காசனம், யோகமுத்ராசனம், அர்த்தசக்கராசனம், பக்ஷிமோத்தாசனம், சலபாசனம், வஜ்ரோளி முத்ராசனம், சுப்தவஜ்ராசனம், திரிகோணாசனம், பூரணசந்தியாசனம், சவாசனம் எனப் பல வகை உண்டு.

யோகாசனம் என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல; உடலிலுள்ள உள்ளுறுப்புகளுக்கு வலிமையையும், நல்ல செயல்பாட்டினையும் தருகிறது. இந்த யோகக்கலையின் தொடர்ச்சியே தியானமாகும். தியானத்தில் ஈடுபடுவோருக்கு மனம் அமைதிபெறும். தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும். எனவே ஆண்- பெண் அனைவருமே இந்தக் கலையைப் பயின்று பயன்பெற வேண்டும்.

இக்கலை ஒரு மதத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ சொந்தமல்ல. அனைவருமே இதைப் பயின்று பயனடைகிறார்கள். தற்பொழுது அமெரிக்கா மற்றும் சீனா போன்ற வெளிநாடுகளில் யோகா மிகச் சிறப்பாகப் பயிற்சியாக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இக்கலை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே வேரூன்றிவிட்டது. யோகக் கலையின் தந்தை பதஞ்சலி முனிவர் என்று வேத நூல்கள் கூறுகின்றன. மகரிஷிகளில் சக்திவாய்ந்தவர் பதஞ்சலி மாமுனிவர். பல நூல்களை இயற்றியவர்.

யார் இந்த பதஞ்சலி முனிவர்? பாற்கடலில் வாசம் செய்யும் மகாவிஷ்ணுவுக்கு பாம்புப் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன்தான் இந்தப் பதஞ்சலி முனிவர் என்கிறது புராணம். ஆதிசேஷன் பூலோகம் வந்து பதஞ்சலியாக அவதரித்தது எப்படி? மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த ஆதிசேஷன், ஒருநாள் தன்மீது பள்ளிகொண்டிருந்த பகவானின் கனம் கூடுவதை உணர்ந்து அவர் முகத்தைப் பார்த்தார். திருமாலோ கண்களை மூடியவண்ணம் புன்னகை பூத்தபடி காட்சிதந்தார். எதை ரசிக்கிறார் என்று புரியாமல் ஆதிசேஷன் பெருமூச்சுவிடவே, மகாவிஷ்ணு கண்திறந்து“என்ன ஆதிசேஷா?” என்றார்.

”சுவாமி, திடீரென தங்களின் உடல்கனம் கூடியதால் வியப்புற்றேன். அதன் காரணத்தை அடியேனுக்கு அருளவேண்டும்” என்றார். ஆதிசேஷனின் உள்ளப்போக்கை அறிந்த மகாவிஷ்ணு, ”ஆதிசேஷா, தில்லையம் பதியில் ஆடலரசனான கூத்தபிரான் நடனமாடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டேன். கூத்தபிரானின் ஒவ்வொரு அசைவும் ஓர் ஆசனத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துவது மிகவும் சிறப்பாக உள்ளது” என்றார்.

”அதனை தரிசிக்கும் பாக்கியம் எனக்குக்கிட்ட அருளவேண்டும் சுவாமி” என்று பணிவுடன் கேட்டார் ஆதிசேஷன். ”அதைக் காணவேண்டுமானால் நீ பூலோகம் செல்லவேண்டும்.” ”தங்களைவிட்டுப் பிரிந்து நான் எப்படி சுவாமி செல்வேன்?” ”கவலைப்படாதே. நீ மாய உருவம் கொண்டு பூலோகம் செல்ல நான் ஆசி வழங்குகிறேன்” என்றார் மகாவிஷ்ணு. அதன்படி மாய உருவில் பூலோகம் வந்த ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார்.

Also Read : ஸ்மார்ட்ஃபோன்களை ஒழிக்கப்போவதாகக் கூறும் எலான் மஸ்க் நம்பிக்கை பலிக்குமா? வாக்கு எந்திரம்(EVM) குறித்தும் முரணாகப் பேசி அம்பலப்பட்ட மஸ்க்!

காலம் சென்றது. சிவனருளால் அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாக அவதரித்தார் ஆதிசேஷன். ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது பங்குனி மாத மூல நட்சத்திரம். அவர் பூலோகத்தில் வாழ்ந்தது 5 யுகம், 7 நாள் என்பர். இந்த காலக்கட்டத்தில் பல அரிய நூல்களை வழங்கினார் என்று புராணம் கூறுகிறது.

வியாக்ரபுரத்தில் அவதரித்த ஆதிசேஷனான பதஞ்சலிக்கு வியாக்ர பாதர் என்ற முனிவரின் நட்பு கிடைத்தது. இவரை புலிக்கால் முனிவர் என்றும் சொல்வர். இவர்கள் இருவரும் சேர்ந்து தில்லைக்கு வந்து நடராஜப் பெருமானை வழிபட்டார்கள். அங்கு அவர்கள் விரும்பிய ஆனந்தத் தாண்டவத்தை நடராஜர் காட்டியருளினார். பல திருக்கோலங்களில் இறைவன் ஆட, அதைக்கண்டு இருவரும் பேருவகை கொண்டனர்.

பெருமானின் நடனத் திருக்கோலத்தைக் கண்டு ரசித்த பதஞ்சலி முனிவர், வருங்காலத்தில் மக்கள் நலம்பெற, ஸ்ரீநடராஜரின் அங்க அசைவுகளின் நிலைகளிலிருந்து ஆசன முறைகளைக் கொண்டுவந்தார். அதுவே யோகாசனம் என்று புராணம் கூறுகிறது. அதனால், யோகாசனத்தின் தந்தை என்று பதஞ்சலி போற்றப்பட்டார். அவர் வகுத்துக்கொடுத்த ஆசனங்கள்தான் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது என்பர். நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, நாம் வணங்கும் தெய்வங்களும் யோகாசன நிலையில் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

Also Read : சந்துருவின் பரிந்துரைகள் நடுநிலையாக இல்லை! அபத்தமான, தான்தோன்றித்தனமான கருத்துகள் என விமர்சனம்!

கயிலையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணலாம். சிவபஞ்சாட்சார மந்திரத்தில் சாருபத்மாசனஸ்தம் என்றும் பத்மாசனம் போற்றப்படுகிறது. மேலும் பல தெய்வங்கள் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தை கோவிலில் தரிசிக்கிறோம்.
பொதுவாக அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். காஞ்சி காமாட்சி அம்மன் வீற்றிருப்பதும் பத்மாசனமே. ஆஞ்சனேயர் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தையும் பல இடங்களில் காணலாம்.

சபரிமலையில் ஸ்ரீஐயப்ப சுவாமி அமர்ந்திருப்பது குக்குட ஆசனம். இதேபோல் அகோபிலம் திருத்தலத்தில் யோகப்பட்டையுடன் குக்குட ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கலாம். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அருள்புரியும் ஸ்ரீகமலாம்பிகையின் திருக்கோலத்தை திரிபங்கி ஆசனம் என்பர்.

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடை சாலையில் மகாசக்தி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்திருக்கும் திருக்கோலத்தை சவாசனம் என்று போற்றுவர். மேலும், புத்தர்பிரான், ஸ்ரீராகவேந்திரர் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை சுகாசனம் என்பர். ஆதிசங்கரர் உள்ளிட்ட பல மகான்கள் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளதைக் காணலாம்.

சிரசாசனத்தை தகுந்த குருவின் துணையுடன் தகுதியானவர்கள் மட்டுமே செய்யவேண்டும். நாம் யோகாசனக் கலையைக் குரு மூலமாக கற்றுக்கொண்டு பயிற்சி செய்வோமானால், முதிய வயதிலும் இளமையுடனும் நலமுடனும் இருக்கலாம் என்பது பேருண்மை. அற்புதமான யோகக்கலையைக் கற்றுக்கொள்ளும்போதே பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியும் பெற வாய்ப்புள்ளது. இதனால் யோகப்பயிற்சி மேன்மைப்படும். இதில் தியானப் பயிற்சியும் இடம்பெறுகிறது. தியானப் பயிற்சியில் பலவகை உண்டு.

அதனை தகுந்த குருவிடம் பயிலும்போது, அவரவர் உடலுக்கேற்ப பயிற்சியாளரான குரு அறிவுறுத்துவார். சித்தர்கள் வானில் பறப்பது, நீரில் நடப்பது, நீருக்குள் ஜலசமாதியாகக் காட்சிதருவது போன்றவை இந்த யோகக் கலை, பிராணாயாமக் கலையால் கிட்டும் அற்புதமான செயல்களே. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடுவதற்கான தீர்மானம் ஐ.நா. சபையின் 69-ஆவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். இது யோகக்கலைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் ‘சுய மற்றும் சமூகத்திற்கான யோகா’, இது தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதில் யோகாவின் இரட்டை பங்கை எடுத்துக்காட்டுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry