
2.30 Mins Read : தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன், லேப்டாப், டேப், கம்ப்யூட்டர் போன்றவை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. வேலை காரணமாகவும் இதுபோன்ற சாதனங்களை தினம் தினம் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தொடர்ந்து அதிக நேரம் இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பும், அவற்றை போக்கும் வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.
அடிப்படையில், நம்முடைய தலையை அதிக நேரம் கீழே குனிந்து பார்ப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்னைதான் Tech Neck Syndrome or Text Neck Syndrome or Smartphone Neck ஆகும். தலையை 60 டிகிரி கோணத்தில் சாய்த்து லேப்டாப், போன் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பதே இந்தப் பிரச்னைக்குக் காரணம். நகரத்தைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுடையவர்களையே இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. தகவல் தொழில்நுட்பம், வங்கி போன்றவற்றில் வேலை செய்பவர்கள் டெக் நெக் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக கேட்ஜெட்கள் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.
டெக்ஸ்ட் நெக் அல்லது டெக் நெக் சிண்ட்ரோம் மூலம் கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கம் அடையும். கழுத்தில்தான், தசைகள் மற்றும் மூளைக்குச் செல்லும் நரம்புகளும் உள்ளன. அதனால் கழுத்தை வெகுநேரம் இறுக்கமாக வைத்திருக்கும்போது இவை பாதிப்படையும். டெக் சிண்ட்ரோம் அல்லது டெக்ஸ்ட் சிண்ட்ரோமால் பாதிக்கப்படுவோருக்கு கழுத்து, மேல் முதுகு, தோள்பட்டையில் வலி ஏற்படலாம். இந்த வலி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கலாம் மற்றும் வலியானது தீவிரமாகவோ அல்லது சுருக் சுருக்கென குத்துவது போன்றோ உணரலாம்.
கழுத்தில் அதிக வலி ஏற்பட்டால், கழுத்தைத் திருப்ப முடியாது, வலி இருப்பதால் தூக்கம் வராது, இதுவே நாளடைவில் மன அழுத்தத்துக்கு கொண்டு சென்றுவிடும். இப்படித் தொடர்ந்து செய்துக்கொண்டிருப்பதால் முதுகில் கூன் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னை ஏற்பட சில காலம் ஆகலாம். ஒரு நாளில் ஏற்படாவிட்டாலும், மெல்ல கழுத்து வலி வர ஆரம்பிக்கும். இந்த வலி கழுத்து, முதுகுத்தண்டு, தோள்பட்டை போன்ற இடங்களில் பரவும். எந்தக் கையில் போன் வைத்துப் பயன்படுத்துகிறோமோ அந்தக் கையில் அதிக வலி ஏற்படும், விரல்கள் மரத்துப்போவது போன்ற பிரச்னை, மூச்சு விடுவதில் பிரச்னை, தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
Also Read : கரையான் பிரச்சனை சமாளிக்கும் டிப்ஸ்! வீட்டில் கரையான் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
அதிகநேரம் தலையை முன்னோக்கி வைத்து மின்னணுப் பொருட்களை பயன்படுத்துவதால், கழுத்து, மார்பு மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் சமநிலை இழந்து பாதிக்கப்படும். கழுத்து, மேல் முதுகு மற்றும் தோள்களில் ஏற்படும் இறுக்கம் காரணமாக நமது அன்றாட இயக்கங்கள் தடைபட நேரிடும்.கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள தசைகள் பிடிப்புக்கு ஆளாகும்போது வலி அதிகமாகும். மட்டுமல்லாமல் கழுத்திலிருந்து தலை வரையிலும் வலி ஏற்படாலம். உட்காரும் அமைப்பைப் பொருட்படுத்தாமல், கணினி அல்லது செல்பேசி திரைகளைப் அதிக நேரம் பார்க்கும்போது கண் இமைகள் மற்றும் தலைவலிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிறது.
கழுத்தை கீழ் நோக்கிப் பார்த்து குறுஞ்செய்தி அனுப்புவது, சேட் செய்வது, கழுத்து, முதுகை முன்னோக்கி வளைத்து மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்துவது போன்றவற்றால் டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம் பாதிப்பு மோசமடைகின்றன. வலி எங்கு, எப்படி உணரப்படுகிறது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, மேசையில் அமர்ந்தவாறோ அல்லது படுத்துக்கொண்டே இரு கைகளையும் பயன்படுத்தி தொலைபேசித் திரையைப் பார்க்கும்போது கழுத்து மற்றும் மேல் முதுகின் இருபுறமும் சமமாக வலி ஏற்படும். அதேசமயம் ஒரு கையைப் பயன்படுத்தும்போது அந்த கைக்கான தசைகளை அதிகம் பயன்படுத்துவதால் ஒரு பக்கத்தில் அதிக வலி இருக்கலாம்.
ஆரம்பகட்டத்தில் இந்தப் பாதிப்பிலிருந்து வெளிவர, முதலில் அதிகமாக போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நம்முடைய உயரத்துக்கு ஏற்றாற்போல டேபிளை அமைத்து நம் கண் பார்வைக்கு நேராக போன், லேப்டாப், டேப் போன்றவற்றை வைத்து பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற சாதனங்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
கழுத்திற்கு சின்னச் சின்ன Exercise, Massage செய்வது நல்லது. கழுத்தில், தோள்பட்டையில் ஹாட்பேக் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கழுத்து நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கழுத்துத் தசையின் இறுக்கமும் குறையும். தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தும்போது, கண் மட்டத்திற்கு நேராக வைத்து பயன்படுத்தும்போது தலையை முன்னோக்கி சாய்க்க வேண்டியதில்லை.
எப்போதும் நேராக நிமிர்ந்து நிற்கவும். தசை வலியைக் குறைக்க கழுத்து மற்றும் மேல் முதுகை அவ்வப்போது பின்னோக்கி வளைக்கவும். வலுவான, நெகிழ்வான முதுகு மற்றும் கழுத்து மன அழுத்தத்தை கையாள கூடுதல் பலம் தரும். குழு விளையாட்டுகளில் சுறுசுறுப்பாக இருக்கும் இளைஞர்களுக்கு கழுத்து வலி ஏற்படுவது குறைவு என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
எதிர்காலத்தில் மின்னணு சாதனங்களை முறையாக பயன்படுத்தாததன் மூலம் பாதிப்புகள் அதிகமாகக்கூடும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இதுபோன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மேலும், அடிக்கடி கழுத்து வந்தால் அல்லது கடுமையான தலைவலி, காய்ச்சல், குமட்டல், எதிர்பாராத எடை இழப்பு, தலைச்சுற்றல், கைகளில் பரவும் எரிச்சலுடன் கூடிய வலி போன்ற பிற சிக்கலான அறிகுறிகள் இருந்தால், மருத்துவ உதவியை நாடுவது முக்கியம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry