சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

0
61
Representational Image | Getty Images

3.30 Minutes Read : குடிப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்ற போதைப் பழக்கங்கம் போன்றே, இணையத்துக்கும், சமூக வலைதளங்களுக்கும் ஏராளமானோர் அடிமையாகி வருகின்றனர். விமர்சனம், காதல், திருமணம், உறவுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், திருமணத்துக்கு அழைத்தல் என பல நிகழ்வுகளுக்கு இணையம் மற்றும் சமூக வலைதளத்துக்கு இளைய சமுதாயத்தினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இந்தியாவின் இணையதளம் மற்றும் செல்போனுக்கான சங்கம் (ஐஏஎம்ஏஐ) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 75.9 கோடி பேர் இணைய பயனாளர்களாக உள்ளனர். இதில் 36 கோடி பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களும், 39.9 கோடி பேர் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் இணையத்தை அணுகுவதற்கு செல்போன்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டுக்குள் 90 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!

தற்போதைய சூழலில் செல்ஃபோன் இல்லாமல் இருக்க முடியாது என நினைப்பது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் ஃபோனை ஸ்க்ரால் செய்வது மனதளவில் உங்களுக்கு நிர்ப்பந்தமாக மாறிவிட்டால், Internet Addiction Disorder பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டீர்கள் என்பதை உணரவேண்டும். அதாவது, நீங்கள் இணையம் அல்லது பிற ஆன்லைன் சேவைகளை அதிகமாகச் சார்ந்து இருந்தால், உங்களுக்கு ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’ இருக்கலாம்.

இணைய அடிமைத்தனம் என்பது ஒரு நடத்தை போதை. “சைபர் அடிமையாதல்” என்றும் அறியப்படும் இணைய அடிமைத்தனம், ஆன்லைன் உலகத்துடன் அதிகப்படியான மற்றும் கட்டாய ஈடுபாட்டைக் குறிக்கிறது. ஆன்லைனில் நேரத்தை செலவழிக்கத் தொடங்கும்போது கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் நபர்கள், பெற்றோர், வேலை அல்லது சமூகச் செயல்பாடுகள், கேளிக்கைகள் போன்றவற்றை தள்ளிவைத்துவிட்டு, இணையத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றனர். இணைய அடிமையாதல் என்பது, செல்ஃபோன் அடிமைத்தனம் அல்லது நோமோஃபோபியாவின் பண்புகளை ஒத்திருக்கிறது. இந்த நோமோபோபியா ஒரு தனிநபரின் அன்றாட வாழ்க்கையை எளிதாக பாதிக்கிறது.

Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!

நோமோஃபோபியா (Nomophobia) என்பது ஒருவரை மன பாதிப்பு. உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே, செல்போனைப் பார்க்கும் பழக்கம். அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம். நம்மைவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம். அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம், தன்னிச்சையாக மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் போன்றவை நோமோஃபோபியா ஆகும்.

அதேபோல், பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோய் உண்டாகும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.

சமூக ஊடகங்களோடு ஒன்றியிருப்பது, ஆன்லைன் ஷாப்பிங் செய்வது என அதிகப்படியான மற்றும் கட்டாய இணையப் பயன்பாடு காலப்போக்கில் குறிப்பிடத்தக்க உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது, நீங்கள் அறியாமலேயே உங்களுக்கு கவலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துவதுடன், சுயமரியாதையையும், உறவுகளையும், தொழிலையும் குலைத்துவிடும். மிக அதிகமான இணையப் பயன்பாடு தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். எதிர்மறை மனநிலையை உருவாக்கலாம்.

Also Read : கேடு விளைவிக்கும் ரீஃபைண்டு ஆயில்? சுத்திகரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? Adverse Effects of Refined Oil!

COVID-19 பரவலின் போது, நம்மில் பலர் முன்னெப்போதையும் விட அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்தத் தொடங்கினோம். பெருந்தொற்று போனபிறகும், ஸ்க்ரீன் டைமிங் எனப்படும் செல்ஃபோன் பயன்பாடு குறையவே இல்லை, மாறாக, மேலும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் இணையப் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம்வரை அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டுகளிலும் இரவு தூக்கத்தை தொலைக்கும் இளைஞர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் பாடப் புத்தகங்களை படிப்பதே இல்லை. டிவி பார்ப்பதைத் தவிர்க்கின்றனர். விளையாடச் செல்வதில்லை. நண்பர்களைச் சந்திக்கப் போவதில்லை. செல்போனைக் கையில் எடுத்துக்கொண்டு, மணிக்கணக்கில் அமர்ந்துவிடுகின்றனர். அதில் விளையாடிக் கொண்டும், சக மாணவர்களுடன் வாட்ஸ்-அப்பில் அரட்டையடித்துக் கொண்டும் நேரத்தைப் போக்குகின்றனர். ஒரு வயது குழந்தைகளைக் கூட பெற்றோரே செல்ஃபோனுக்கு அடிமையாக்கி வருகின்றனர்.

Internet Addiction Disorder | PEXELS

மேம்பட்ட தொழில்நுட்பம், டோபமைனைத் தூண்டும் சமூக ஊடக தளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை நாம் அதிகம் சார்ந்து இருப்பது இணைய அடிமைத் தனத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் கேமிங், பங்கு வர்த்தகம், சைபர்செக்ஸ் அல்லது ஆன்லைன் ஏலம் போன்றவை ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’ஐ ஏற்படுத்துகிறது.

சமூக ஊடக நெட்வொர்க்குகள் டோபமைனை அதிகரிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளன. டோபமைனின் தாக்கத்தை நம் மூளை விரும்புகிறது. இதிலிருந்து வெளியேற வேண்டும் என நாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளும்போது, டோபமைனை மூளை மேலும் மேலும் தேடுகிறது. மரபியல், சூழல், மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவையும் இணைய அடிமைக்குக் காரணமாக அமைகிறது. Behavioral therapy மூலமாக ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’ பிரச்சனையில் இருந்து வெளிவரலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Internet Addiction Disorder சில நேரங்களில், Compulsive Internet Use (CIU), Problematic internet use (PIU), iDisorder என்றும் அழைக்கப்படுகிறது. அதேநேரம், ஆராய்ச்சி முடிவுகள், இணைய அடிமையாதல் பிரச்சனையை மனப்பிறழ்வு நோயாக வகைப்படுத்தவில்லை.

Also Read : வார விடுமுறைக்கு ஏற்ற தினம் ஞாயிறு மட்டுமா? வெள்ளி, சனிக்கு மாற்ற மத்திய அரசு பரிசீலிக்குமா?

இதுபற்றி மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கூறும்போது, ‘‘உலக அளவில் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’ (Internet addiction disorder) என்ற நோய்க்கு, 10 முதல் 20 வயதிலான இளைஞர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். நோய் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களின் மூளையில் ஹார்மோன் அழுத்தம் உண்டாகி, மீண்டும் மீண்டும் அதே செயலில் அவர்களை ஈடுபட வைக்கிறது.

இதனால் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் கை நடுக்கம், படபடப்பு இவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படுவோர், மற்றவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் மனநிலைக்கு வந்துவிடுவர். தனிமையை விரும்புவர். தாழ்வு மனப்பான்மைக் கொண்டிருப்பர்.

இவற்றில் இருந்து விடுபட, வீடுகளில் இரவு 9 மணிக்குமேல் இணையத்தை பயன்படுத்துவதை குடும்பமாக குறைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் நேரங்களில் செல்போன் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வெளிப்புறங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய செயல்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் இணையதளப் பயன்பாட்டை குறைக்கலாம்’’ என்றார்.

Also Read : சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!

இணையப் பயன்பாடு, செல்ஃபோன் பயன்பாடு எல்லை மீறும்போது ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’ நோயால் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நரம்பு மண்டலம், கழுத்து நரம்பு, தண்டுவடம் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.

செல்போன் உபயோகிப்பதால் மிக முக்கியமாக கண்களும் பாதிக்கப்படும். அதிகமாகவும் நீண்ட நேரமாகவும் மொபைலில் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். நம்முடைய வசதிக்கேற்றாற்போல் அமர்ந்து, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு பயன்படுத்துகிறோம். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகும்.

With Input Indhu Thamizh Thisai

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry