சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!

0
337

புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுவது அனைவருக்கும் தெரியும். இதுமட்டுமல்ல, புகைபிடிப்பவர்களால், மண், காற்று, ஆகாயம் ஆகியவையும் புற்றுநோயை விட மோசமான கேடுகளை எதிர்கொள்கிறது.

சர்வதேச அளவில் ஆண்டுக்கு ஏழு மில்லியன் மக்களை புகையிலை காவு வாங்குவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. புகையிலைப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிகரெட் புகைத்தல், புகைப்பவர்களின் உடல் நலத்திற்கு மட்டும் கேடல்ல. இந்தியாவில் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் பாதிப்பேர் புகைப் பழக்கம் இல்லாதவர்கள். புகையிலை சூழலியலுக்கும் பெரும் கேடாக உள்ளது.

PASSIVE SMOKING

சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையுடன், நச்சு பொருட்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றன. காற்று மாசு என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வாகனங்கள்தான். சூழலியல் கேடுக்கு சிகரெட்டை ஒரு காரணியாக கருதாததன் பின்னணியை ஆராய்வது அவசியமாகிறது. ஒரு டீசல் கார் வெளியிடும் புகையைவிட, சிகரெட் புகை 10 மடங்கு அதிகமாக காற்றை மாசுபடுத்துகிறது.

சிகரெட்டிலிருந்து மிக நுண்ணிய துகள்களுடன் வெளியேறும் புகை, காற்று மாசு மற்றும் புகைக்காதவர்களின் ஆரோக்கிய கேடுக்கு வழிவகை செய்கிறது. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான சிறிய துகள்கள் நுரையீரலில் உள்ள அல்வியோலியில் (நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து ரத்ததுக்கு அனுப்புவதும், ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதும் அல்வியோலியின் வேலை) நேரடியாக ஊடுருவி அடைப்பை ஏற்படுத்துவதும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணம்.

தாவரங்கள், மக்களின் கண்கள் மற்றும் சுவாசக் குழாயை சிகரெட்டில் இருந்து வெளிப்படும் ஆல்டிஹைடுகள் சேதப்படுத்துகின்றன. சிகரெட் வெளியேற்றும் நைட்ரிக் ஆக்சைடு நகர்ப்புறங்களில் ஓசோன் உருவாக காரணமாகிறது. புகையிலை புகையில் 7,000க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. இவற்றில் தார், நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, கார்பன் மோனாக்சைடு, அம்மோனியா போன்ற 250 இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அசிடால்டிஹைடு, அசிடோன், அம்மோனியா, பென்சீன், குரோமியம் என ரசாயனங்களின் பட்டியல் நீள்கிறது. எந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும் என நாம் தீர்மானிக்க முடியாத நிலையில், சுகாதார மற்றும் சூழலியல் அபாயத்தை உணர்வது காலத்தின் தேவையாகிறது.

அடுத்ததாக, புகையிலை சாகுபடி, பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் புகையிலைக் கழிவுகளும் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. சிகரெட் புகையில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகியவை புவி வெப்பமடைய காரணமாகின்றன. கார்பன் டை ஆக்சைடு காற்றையும் மாசாக்குகிறது. 2010 ஆம் ஆண்டு இந்தியாவில், 10,000 மில்லியன் சிகரெட்டுகளை உற்பத்தி செய்தபோது, கிட்டத்தட்ட 6750 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புகையிலை பயிரிடுதல் மற்றும் அதனை பதப்படுத்தும் செயல்முறைகளால் காடுகள் அழிகின்றன. புகையிலை பயிரிடப்பட்டதால் 1962 முதல் 2002 வரை ஆண்டுதோறும் 1,700 ஹெக்டேர் காடுகளை இந்தியா இழந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அரை ஹெக்டேர் புகையிலையை பதப்படுத்தி மதிப்புக்கூட்ட, ஒரு ஹெக்டேர் பரப்பளவிலான மரம் அழிக்கப்படுகிறது. இந்தியாவில் 20 ஆயிரம் ஹெக்டேரில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இதன்படி, சற்றேறக்குறைய டெல்லியின் பரப்பளவுக்கு, அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்த எட்டு கிலோ மரம் தேவைப்படுகிறது.

சிகரெட் தயாரிக்கும் ஆலைகளில், சிகரெட்டை உருட்டவும், பெட்டியில் அடைக்கவும் ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு 300 சிகரெட்டுகளுக்கும் ஒரு மரம் வெட்டப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அதிக ரசாயன பயன்பாடுகளால் புகையிலைப் பயிர் மண்ணை மலடாக்குகிறது. மற்ற பயிர்களை விட, புகையிலைப் பயிர் மண்ணிலிருந்து ஆறு மடங்கு பொட்டாசியத்தை உறிஞ்சுகிறது.

புகைத்துவிட்டு வீசி எறியப்படும் சிகரெட் மற்றும் பீடித் துண்டுகள் வீரியமிக்க நச்சுக் கழிவுகளாகும். சிகரெட்டுகளில் இணைக்கப்படும் புகை வடிப்பான், அதாவது ஃபில்டர், செல்லுலோஸ் அசிடேட்டால் தயாராகிறது. இது ஒருவகை பிளாஸ்டிக் ஆகும். இவை மண்ணில் மக்கும் என்றாலும், அதற்கு 2 ஆண்டுகள் வரை பிடிக்கும் என்கிறார்கள். 2 ஆண்டுகள் கழித்து முழுமையாக மக்கிவிடுமா? என்பது விவாத நிலையிலேயே உள்ளது. புகைத்து வீசப்படும் சிகரெட் துண்டுகளில் பாதி நிலப்பரப்புகளில் கிடக்கிறது. எஞ்சியவை ஏரிகள், கடல்களில் வீசப்படுகின்றன. இவை நச்சு இராயனங்களை வெளியேற்றுவதால், புகைக்காதவர்களின் உடல் நலத்துக்கும், சூழலியலுக்கும் கேடாக அமைகிறது.

புகையிலைத் தொழில் சிவப்புப் பட்டியலின் கீழ் இருந்தாலும், பீடி தயாரித்தல் குடிசைத் தொழிலாகவே இருப்பது நகை முரண். 2020-ம் ஆண்டு ஆய்வின்படி இந்தியாவில் 19 வயதுக்கு உட்பவர்களில் 10.14% புகைக்கிறார்கள். 20 முதல் 44 வயதுக்கு உட்பவட்டவர்கள் சராசரியாக 14.8% பேர் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். தலைமுறையே நாசமாவதை இதன் மூலம் உணரமுடியும்.

(ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-வது புதன் கிழமை ‘No Smoking Day’)

– கி. கோபிநாத், பத்திரிகையாளர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry