பேருந்து, மின் கட்டணம் உயர்கிறது! தனியார்மயத்தை ஊக்குவிக்க முடிவு! நிதியமைச்சர் பிடிஆர் தகவல்!

0
1489
INDIA TODAY CONCLAVE

தமிழ்நாட்டில் பேருந்து மற்றும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இந்தியா டுடே கருத்தரங்கில்(India Today Conclave), அந்த இதழின் பதிப்புப் பிரிவு இயக்குநருக்கு பேட்டியளித்த பழனிவேல் தியாகராஜன், “மின் வாரியத்தில் ஏற்படும் இழப்பை 100% தடுக்கும்படி மத்திய அரசு கூறுகிறது. போக்குவரத்துத் துறையில் ஊழியர்கள் அதிகம் இருக்கிறார்கள், ஆனால் உபகரணங்கள் போதுமானதாக இல்லை. மின்துறையைப் பொருத்தவரை மின் இழப்பு, கட்டணம் ஆகியவை பிரச்சனையாக உள்ளது. 20-25 ஆண்டுகளாக பல கட்டணங்கள் உயர்த்தப்படவே இல்லை. அவை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.அது பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார்.

2 ஆண்டுகளில் மின்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளின் நிதி உதவியுடன் தனியாரிடம் இருந்து பேருந்துகளை லீசுக்கு எடுத்து இயக்க ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் டிரைவர், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளை தனியாரே பார்த்துக்கொள்ளும். சென்னை பெருநகரில் இதனை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.

குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று கூறுகிறார்கள். அங்கு வளர்ச்சி இருக்கிறதே தவிர உயர் கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் வளர்ச்சி கிடையாது. தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு 4 மருத்துவர்கள் இருக்கிறார்கள். குஜராத்தில் ஆயிரம்பேருக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளார். தமிழ்நாடு எல்லாவற்றிலும் சமமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாம் சரிசமமான வளர்ச்சி பெற்று முதல் இடத்தை பெற்றுக் காட்டுவோம்.

மாநிலத்தின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் முக்கியம். அது முதலமைச்சர் சொன்னது போல திராவிட மாடல் வழியில் இருக்கும். 2014-க்குப் பிறகு தனிநபர் வருவாய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, நல்ல நிர்வாகம் இல்லை, நிதி மேலாண்மை சரி இல்லை. அதை சரிசெய்வதில் கவனம் செலுத்துகிறோம். 5 ஆண்டுகளில் நிதி நிலையை சீராக்கி விடுவோம். அரசு நிர்வாகம் 20வருடங்கள் பின்னோக்கி உள்ளது. அதையும் சரிப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

1983-ல் நான் பொறியியல் படிப்பில் சேர்ந்தபோது, தமிழ்நாட்டில் மொத்தம் 3000 பொறியியல் இடங்கள்தான். ஆனால் 2016-ல், நான் இந்தியா திரும்பி எம்.எல்.ஏ. ஆனபோது 2.5 லட்சம் பொறியியல் இடங்கள். இவர்களுக்கு யார் பாடம் எடுப்பது? பலரும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உயர் கல்வி விகிதம் 52% என இருந்தாலும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதில்லை. டிகிரி வாங்கிவிடுகிறார்கள். ஆனாலும் டிகிரிக்கும் – திறமைக்கும் பெரிய இடைவெளி உள்ளது. தேவைக்கு ஏற்ப திறனை வளர்ப்பதே எங்கள் இலக்கு.

மத்திய அரசின் திட்டங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசின் பங்களிப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் பயன் தராது. தமிழ்நாட்டில் 7 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்கிருந்து ஒருவர் உத்தரப்பிரதேசம் சென்றால், அந்த மாநில நிர்வாகத்தால் எப்படி வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும்?.” இவ்வாறு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry