இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 4ல் இருந்து செப்டம்பர் 10 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
மேஷம் : முரட்டு சுபாவம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, தாய் மீது பாசம் அதிகரிக்கும் வாரம் இது. தாய் வழியில் எதிர்பார்த்த சொத்து, பணம் வந்து சேரும். பரம்பரை சொத்தில் தாய்க்கு பங்கு கேட்டு மாமனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக சட்டப் போராட்டம் நடத்திய உங்களுக்கு தற்போது வெற்றி கிடைக்கும். முன்னோர்கள் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். கடற்படை, கடலோர காவல் படை, நீர்வளத்துறை போன்ற அரசுத் துறையில் வேலை கிடைக்கும். வேளாண் ஆராய்ச்சி, விவசாயம் சார்ந்த தொழில், வியாபாரத்தில் லாபம் பல மடங்கு உயரும். வியாபாரத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் விலகும். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்பு, பதவிகள் தேடி வரும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
Also Read : செவ்வாய்..! தோஷமா? யோகமா? இவங்களுக்கு எப்பவுமே செவ்வாய் தோஷம் இல்லையாம்! Sevvai Dosham simple explanation!
ரிஷபம் : அழகிய உடல் அமைப்பும், புத்திசாலித்தனமும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இதுநாள் வரை வக்கிர கதியில் இருந்த ராசிநாதன் சுக்கிரன் தற்போது வக்கிர நிவர்த்தி அடைந்து விட்டார். சுக்கிரனின் வக்கிரம் பெரிய அளவில் பாதிப்பையோ, மாற்றத்தையோ தராது என்றாலும், உங்களது இயல்பான குணத்தில் சற்று மாற்றத்தை கண்டிருப்பீர்கள். உங்களையே அறியாமல் அவ்வப்போது ‘அந்நியன்’ எட்டி பார்த்திருப்பார். இனி கோபம் கட்டுக்குள் இருக்கும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. நடிப்பு, இயக்குநர், ஒளிப்பதிவு போன்றவற்றில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கார், மக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் உண்டு. ரிஷப ராசியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் விளையாடும் போது சற்று கவனமாக இருங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
மிதுனம் : பேச்சில் வல்லவரான மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் சூரியன் உடன் இணைந்து ராசிக்கு 3ல் இருப்பதால் தொலைத்தொடர்பு துறையில் இருப்பவர்கள் தனித் தன்மையுடன் திகழ்வார்கள். ஓவியர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருவார்கள். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கமிஷன் மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். மேடைகளில் பல குரலில் பேசும் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் புகழ் அடைவார்கள். வருமான வரித்துறை, கலால் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. அசையா சொத்து வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளிப்போடுவது நல்லது. வங்கியில் கடன் பெற்று நிலம், வீடு வாங்குபவர்கள் ஒப்பந்தங்கள், பத்திரங்களை தெளிவாக படித்த பிறகு கையெழுத்து போடவும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு மறு திருமணம் நல்லபடியாக கைக்கூடும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
Also Read : திருமணத்திற்கு எத்தனைப் பொருத்தம் தேவை? பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிப்பது சரியா? Part – 2
கடகம் : அனைத்து துறைகளிலும் ஞானம் கொண்ட கடக ராசிக்காரர்களே, ஃபாஸ்ட் புட் கடை, வாட்டர் சப்ளை, அரிசி மண்டி, பால் பொருட்கள் உற்பத்தி தொழில் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏற்றுமதி, இறக்குமதி மூலம் ஆதாயம் உண்டு. எவ்வளவு சாதகமான வாரமாக அமைந்தாலும் அவ்வப்போது அஷ்டம சனி பாதிப்புகளை கடக ராசிக்காரர்கள் சந்திப்பார்கள். பிறப்பு ஜாதகத்தில் யோகமான தசா, புத்தி நடப்பில் இருப்பவர்கள் பிரச்னைகளை சமாளித்து கரை சேருவார்கள். மாறாக பிறப்பு ஜாதகத்தில் 6, 8 அதிபதிகளின் தசா, புத்தியின் பிடியில் சிக்கி உள்ளவர்களுக்கு அஷ்டம சனி பாதிப்புகள், கஷ்டங்கள் சற்று அதிகமாக இருக்கும். அவயோக தசா, புத்தி நடப்பில் உள்ளவர்கள் மட்டும் தொழில், வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
சிம்மம் : சிந்தித்து செயல்படும் குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று புதன் உடன் சேர்ந்து இருப்பது சிறப்பு. சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். கெளரவமான வேலை, பதவிகள் கிடைக்கும். பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நிர்வாக திறமை மேலோங்கும். டீம் லீடர், மேனேஜர், மேற்பார்வையாளர், சிஇஓ போன்ற பதவி உங்களை தேடி வரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள், கடைநிலை ஊழியர்களுடன் இனிமையாக பேசி பழகுங்கள். சனிபகவான் ராசியையும், சூரியனையும் பார்ப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். தந்தை சொல்லை கேட்டு நடக்க முடியவில்லை என்றாலும் அவருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு அனுகூலமான வாரம் இது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?
கன்னி : மனதில் பிடித்ததை மட்டும் செய்யக்கூடிய கன்னி ராசிக்காரர்களே, ராசியில் செவ்வாய், ராசிநாதன் புதன் 12ல் இருப்பதால் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்படும். நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்த்து விடுங்கள். 8ல் குருவுடன் சேர்ந்த ராகுவால் பங்குச்சந்தையில் ஓரளவு லாபம் கிடைக்கும் என்றாலும் அதை நம்பி கடன் வாங்கி முதலீடு செய்யும் எண்ணம் வேண்டாம். 2, 9க்கு உடைய சுக்கிரன் 11ல் இருப்பதால் மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வீடு, வாகனங்கள், பயணங்களால் வருமானம் கிடைக்கும். ஏலக்காய் விவசாயம் செய்பவர்கள், வாசனை திரவியங்கள், பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக கிடைக்கும். 4, 5 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய முடிவுகள், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
துலாம் : கடுமையாக உழைக்க கூடிய குணம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, சாய ஆலை, நூற்பாலை உற்பத்தியில் இருப்பவர்கள், ஜவுளி வியாபாரம் செய்பவர்கள், அழகு நிலையம் வைத்திருப்பவர்களுக்கு லாபகரமான வாரம். கழிவறையை சுத்தம் செய்யக்கூடிய வெள்ளை மற்றும் நீல நிற திரவ பொருட்கள் உற்பத்தி, வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கும். துலாம் ராசி மாணவர்களுக்கு ஃபேஷன் டிசைனிங் சார்ந்த உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு அமையும். துலாம் ராசிக்கு ஆகாத குரு வக்கிரம் அடைவதால் இதுநாள் வரை உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகள் சற்று விலகும். கடன் தொல்லையில் இருந்து மீண்டு வருவீர்கள். மாமனார் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகி சகஜமாக பழகும் நிலை ஏற்படும். 6, 7 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளுங்கள்.
Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?
விருச்சிகம் : வைராக்கிய குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் அண்ணன், அக்கா வழியில் உதவிகள் கிடைக்கும். விவசாய நிலங்கள், காலி மனைகள் மூலம் ஆதாயம் உண்டு. கல்லூரியில் இடம் கிடைக்காத விருச்சிக ராசி மாணவ, மாணவிகளுக்கு தொழிற்கல்வி வாய்ப்பு கிடைக்கும். 24 மணி நேரமும் உழைக்க நீங்கள் தயாராக இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சிம்மத்தையும், சூரியனையும் சனிபகவான் பார்ப்பதால் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் நீங்கள் செய்யும் தவறு வெளிச்சத்திற்கு வரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 8, 9, 10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.
தனுசு : நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனுசு ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு வக்கிரம் அடைவதால் உங்களது நடவடிக்கை, செயல்பாடுகளில் மாற்றம் தென்படும். இதுநாள்வரை பொது நலமாக சிந்தித்த தனுசு ராசிக்காரர்கள் தற்போது சுய நலத்துடன் செயல்படுவார்கள். தனக்கு மிஞ்சி தானமும் தர்மமும் என்பதை உணர்ந்து நாம், நமது குடும்பம், குழந்தைகள் என்று யோசித்து செயல்படுவீர்கள். பிறப்பு ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருப்பவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை அதாவது சுமார் 120 நாட்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றதும் கடவுளை நிந்தனை செய்வீர்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட நீங்கள் திடீர் திடீரென நாத்திகவாதி போல் செயல்படுவீர்கள். 10ம் தேதிக்கு பிறகு சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய வேலைகளை வார இறுதிக்குள் முடித்து விடுங்கள்.
Also Read : குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!
மகரம் : பொது தொண்டில் ஆர்வம் கொண்ட மகர ராசிக்காரர்களே, விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். தன ஸ்தான அதிபதியான சனிபகவான் ஆட்சி பெற்று இருப்பதால் பொருளாதாரம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். வருமானம் வருவதில் சிறு தடை, தாமதம் ஏற்படும். அவ்வப்போது குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் வந்து போகும். தந்தையுடன் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை உடனடியாக செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சித்த மருத்துவர்கள், தையற்கலைஞர்கள், ஃபேஷன் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். இதுவரை ஏழரை சனி பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த மகர ராசிக்காரர்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
Also Read : One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!
கும்பம் : நினைத்ததை செய்து முடிக்கும் கும்ப ராசிக்காரர்களே, உறவினர்கள், நண்பர்கள் உடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துரோகத்தை சந்திக்கும் நேரம் இது. யாரையும் நம்பி புதிதாக எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். அவரவர் தகுதிக்கு ஏற்ப ஏமாற்றங்கள், மனக் கஷ்டம், மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும் காலக்கட்டம். ஜென்ம சனி காலகட்டத்தில் சுய ஜாதகம் செயலிழந்து போகும். எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நீங்கள் மிகவும் எதிர்பார்த்தது நடக்கவில்லையே என்ற மனக்கவலை மேலோங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள், சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். அவசரப்பட்டு இருக்கும் வேலை விட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.
மீனம் : புகழுக்கு அடிமையான மீன ராசிக்காரர்களே, ராசிநாதன் குரு வக்கிரமாகி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பொறுமையாகவும், பெருந்தன்மை உடனும் நடந்து கொள்ளுங்கள். சனிபகவான் ராசிக்கு 12ல் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். கைநிறைய சம்பாதித்தாலும் எதிர்காலத்திற்காக ஒரு ரூபாய் கூட சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். கையில் ரொக்கமாக வைத்திருந்தால் செலவுகள் தேடிவரும் என்பதால் முடிந்தவரை அசையா சொத்துகளில் முதலீடு செய்வது நல்லது. பூர்வீக சொத்தை விற்கும் எண்ணத்தை கைவிடுங்கள். உடல் பருமன், உஷ்ணம் தொடர்பான உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும், 6, 7 ஆகிய தேதிகளில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry