சம்மணமிட்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..? நம்பவே முடியல…! Shocking Benefits of Eating Cross-Legged: You Won’t Believe It!

    0
    196
    Cross-legged position enhances the blood circulation in our body as it calms the nerves and releases away from the tension in it. It keeps the heart healthy as when we are sitting down; there is less pressure on our body and the heart. In Sammanam or Sukhasana, blood flow is distributed evenly throughout the body. Getty Image.

    சம்மணம், சப்பணங்கால், சப்பணங்கட்டு என தரையில் அமரும் முறைக்கு இத்தனை பெயர்கள் உள்ளன. சம்மணமிடுவதை சுகாசனம் என்றும் சொல்வார்கள். நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதும் உடலுக்கு வலிமை அளிக்கக்கூடியதுமான ‘சம்மணமிடும்’ வழக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். நின்று நிதானித்து, உட்கார்ந்து, தரையில் சம்மணமிட்டு இளைப்பாறவோ, உணவருந்தவோ பெரும்பாலானோருக்கு நேரமில்லை. கொஞ்சம் ஆசுவாசமாக அமரலாம் என்றாலும் நாற்காலியைத் தேடுகிறோம்.

    உணவகங்கள், திருமண நிகழ்வுகள், பொது இடங்கள் என எங்கு சென்றாலும், அங்கிருக்கும் மேஜை நாகரிகத்துக்கேற்ப நாமும் பழகிவிட்டோம். அதே பழக்கம் வீடுகளிலும் தொடர்கிறது. டைனிங் டேபிள்களும், குஷன் மெத்தைகளும், ராஜா ராணி கட்டில்களும் நம்மைத் தரையிலிருந்து பிரித்து வசதியாக மிதக்கச் செய்துவிட்டன. இதனூடே நோய்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    குனிந்து நிமிர்ந்து இடுப்புப் பகுதிக்கு பயிற்சி கொடுக்க அவகாசம் இல்லாததால், இடுப்பைச் சுற்றி சதை திரண்டு உருண்டு நிற்கின்றன. சம்மணம் போட்டு வேலைகளைச் செய்தபோதும், உட்கார்ந்து சாப்பிட்டபோதும், உடலில் இயல்பாக இருந்த நெகிழ்வுத் தன்மையை தொலைத்துவிட்டோம். இது கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பரிணாம வளர்ச்சி! வெளி இடங்களுக்குச் செல்லும்போது சம்மணம்போட முடியாவிட்டாலும் வீட்டிலாவது சம்மணமிடும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    Cross-Legged Eating: Improve Digestion & Posture.

    இன்றைக்கு சம்மணமிட்டு உணவருந்திவிட்டு எழுந்திருப்பது, சாதனைபோல பார்க்கப்படுகிறது. தோப்புக்கரணம் போடுவதைப்போல, சம்மணமிடுவதையும் இன்றைய இளையோரும், நடுத்தர வயதினரும் ஒரு தண்டனையாகவே பார்க்கிறார்கள். அதை அவர்களது எண்ணத்தில் இருந்து மாற்ற வேண்டும். சம்மணம் போடுவதால் உண்டாகும் பலன்கள் எண்ணற்றவை.

    நாம் உண்ணும் உணவு முழுமையாகச் செரிமானமாக சம்மணமிட்டு உணவருந்தும் முறையே சிறந்தது. கீழே அமர்ந்து நமக்கு முன்னே இருக்கும் உணவைக் குனிந்து நிமிர்ந்து எடுத்துச் சாப்பிடும்போது, வயிற்றுத் தசைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்; செரிமானச் சுரப்பிகளும் தூண்டப்படும். சம்மணமிட்டு உணவருந்துவதால் ‘பசி அடங்கிவிட்டது’ என்ற உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

    அதுவே நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினால், அந்த உணர்வு உடனடியாக மூளைக்குக் கடத்தப்படாமல், கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் அதிக உணவு சாப்பிட நேரிடும். தேவைப்படும் கலோரிகளைவிட, அதிக கலோரிகள் உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஆசைப்படுபவர்கள் சம்மணமிட்டு உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்.

    Ditch Your Chair: Eat on the Floor for Better Health | Getty Image.

    சம்மணமிட்டதும் பசி உணர்வு அதிகரிப்பது, நமது இயல்பிலேயே இருந்த ஒன்று. ஆனால், சம்மணமிடும் வழக்கத்தைக் கைவிட்டதால், பசி உணர்வு ஏற்படுவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, பசியை உண்டாக்கும் `சிந்தடிக்’ மருந்துகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். கால்களை மடக்கி, தொடைப் பகுதியில் வைத்துக்கொள்ளும் ஆசன வகையான ’பத்மாசனத்தில்’ கிடைக்கும் பலன்களில் பாதி, சம்மணம் எனும் ‘சுகாசனத்தின்’ மூலம் கிடைக்கும்.

    மேலும், உடல் உறுதிபெறுவதோடு, மூட்டு சார்ந்த நோய்கள் ஏற்படாது என்கிறது மருத்துவ நூல். பத்மாசனத்தில் அமர்ந்து ஆசன வகைகளைச் செய்ய முடியாதவர்கள், சம்மணமிட்டபடி ஆசனங்களைச் செய்யலாம் என வலியுறுத்துகிறது ஆசனம் சார்ந்த குறிப்புகள். சம்மணமிடுவதால், இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமை கிடைப்பதுடன் இடுப்பு இணைப்புகளில் நெகிழ்வுத் தன்மை ஏற்படும். நாற்காலியில் கூனிக் குறுகி அமர்வதைப் போல இல்லாமல், தரையில் சம்மணமிட்டு நிமிர்ந்து அமரும்போது, உடலுக்கு நிலையான தன்மை உண்டாகும்.

    Also Read : பெட்ஷீட்டுகளை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்? படுக்கை விரிப்பில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா?

    களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் உடல் இயங்க, சம்மணம் வழிவகுக்கும். உடலின் மேல் பகுதிக்கு ரத்தம் அதிகமாகப் பாயும். குருதியின் சுற்றோட்டத்தை அதிகரித்து, பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மனதை அமைதிப்படுத்தவும் ஒருநிலைப்படுத்தவும் சம்மணமிடும் முறை உதவும். தினமும் சம்மணமிடுபவர்களுக்கு வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சம்மணமிட்டு அமர்ந்ததும் கைகளின் துணையில்லாமல், மேலே எழுவதை வைத்து (Sitting-rising-test) நமது ஆயுட்காலம் எவ்வளவு என்று நிர்ணயிக்கும் வழக்கமும் இருக்கிறது.

    அதாவது குறிப்பிட்ட நேரம் சம்மணமிட்ட பிறகு, எத்தகைய சோர்வுமில்லாமல் மீண்டும் எழுந்து நிற்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஆயுள் கெட்டி! சிறுவயது முதல் சம்மணமிடும் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, வயதான காலத்தில் உண்டாகும் சமநிலையின்மை சார்ந்த பிரச்னைகள் (Disorders related to Equilibrium) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறது ஆய்வு.

    Also Read : வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிக்கலாமா..? இத்தனை நாளா இது தெரியாமலா இருந்தோம்?

    ஒரு நாளில் எத்தனை மணிநேரம், நமது உடல் தரையுடன் தொடர்பு கொள்கிறது என்பதை யோசித்திருக்கிறோமா. சில நிமிடங்கள்கூட, தங்கள் உடலைத் தரையுடன் தொடர்புப்படுத்தாத பலர், இன்றைய அதிவேக உலகில் அதிகமாக இருக்கின்றனர். சிந்தித்துப் பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளாகத்தான் சம்மணமிடும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

    அதற்கு முன்னர் பன்னெடுங்காலமாக நமது மரபணுக்களில் உறுதியாகப் பதிந்த பழக்கத்தை நாம் தவறவிடுவது எந்த வகையில் நியாயம். சம்மணமிடுவதை அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் சம்மணம் போட ’ஸ்பெஷல் கிளாஸ்’ செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் காக்க, வீட்டிலிருக்கும் டைனிங் டேபிளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, தரையில் அமர்ந்து உண்டு, உரையாடிக் களிப்போம்.

    Courtesy : Dr.வி.விக்ரம்குமார்., MD(S).

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry