பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யவும் சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது, பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.
Also Read : ஏ.சி. அறையில் ஜம்முனு தூங்குற ஆளா? இந்த 6 பிரச்னைகள் வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க..!
இதையடுத்து சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த முறை தேனி மாவட்ட போலீசார் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த ரிட் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் தற்போது புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மேல் முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மேலும் என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு ஆணையிட்டார். மேலும் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அவர் ஒத்திவைத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry