70 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று (செப்டம்பர் 11) ஒப்புதல் அளித்துள்ளது. வருமான வரம்பின்றி அனைவருக்கும் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், 6 கோடி மூத்த குடிமக்களை உள்ளடக்கிய 4.5 கோடி குடும்பங்களுக்கு பலனளிக்கும். ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் என்ற வகையில் காப்பீடு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கென மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தனியான, புதிய அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் யாரெல்லாம் பயனடைவார்கள், தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்துமா? என்பதை தெரிந்துகொள்வோம்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்தியாவில் வருவாய் குறைந்த 40 சதவீதம் மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அளிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இந்தியாவில் உள்ள 10 கோடி குடும்பங்கள் அதாவது 50 கோடி பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள். இது இந்தியாவின் 40 சதவீத மக்கள் தொகை என மத்திய அரசு தெரிவித்தது.
பயனாளிகளுக்கு இதற்கென அட்டை ஒன்று வழங்கப்படும். மருத்துவமனைகள், மாநில அரசுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமல்ல. ஏற்கனவே நோயுற்றிருந்தாலும் இந்தத் திட்டத்தில் இணைந்த தினத்திலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்க்கும் சிகிச்சைபெறலாம். இந்தியா முழுவதும் எந்த மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
ஏற்கனவே மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா (ABPMJAY) என்ற திட்டம் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. வருமான வரம்பு ஏதுமின்றி 70 வயதுக்கு மேற்பட்ட எல்லா குடிமக்களுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு இதற்கென தனியான அட்டை வழங்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், மூத்த குடிமக்களுக்கு மட்டும் என தனியாக ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டிற்கான அட்டை வழங்கப்படும். அதே குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு குறைவானவர்கள் இந்தக் காப்பீட்டைப் பயன்படுத்த முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால், அவர்கள் இந்த ஐந்து லட்ச ரூபாய் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே நேரம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இந்தக் காப்பீட்டுத் திட்டமே தனி நபருக்கு என அல்லாமல் குடும்ப ரீதியாகத்தான் வழங்கப்படுகிறது. ஆகவே, எப்போதுமே குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இந்தக் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதைப் போலவே, இப்போதும் ஒரே குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் கிடைக்கும் காப்பீட்டைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் 70 வயதுக்கு மேல் இருந்தால், இருவருக்கும் சேர்த்துத்தான் ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள் (CGHS), முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்போடு கூடிய மருத்துவத் திட்டம் (ECHS) மத்திய ஆயுதப் படையினருக்கான ஆயுஷ்மான் திட்டம் (CAPF) ஆகிய காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பலனடையும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களுடைய தற்போதைய திட்டத்திலேயே தொடரலாம் அல்லது இந்தப் புதிய திட்டத்தில் இணையலாம். இதில் ஏதாவது ஒன்றில்தான் பயனடைய முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சைபெற பணம் ஏதும் கட்டத் தேவையில்லை. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளும். நோயாளிகள் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.
இந்தத் திட்டத்தை அறிவிக்கும்போது, தனியார் நிறுவனங்களிடம் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்கும் மூத்த குடிமக்களுக்கும் சேர்த்துத்தான் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு செய்திருந்தாலும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழும் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. மூத்த குடிமக்கள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப கட்டத் தொகையாக ரூ. 3,437 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேவையை அடிப்படையாக வைத்து செயல்படுத்தப்படும் திட்டம் இது. தேவை அதிகரித்தால் அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
Step 1: Visit the official website https://abdm.gov.in/
Step 2: Eligible person should get your Aadhaar card or ration card verified at a PMJAY kiosk
Step 3: Submit family identification proofs
Step 4: Get your e-card printed with a unique AB-PMJAY ID
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டமும் அதைப் போலவே செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ‘கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம்’ என்ற பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்கள் இதில் பதிவுசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் அமலில் இருந்த ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில், காப்பீட்டிற்கான தவணைத் தொகையை பயனாளிகள் கட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் தமிழக அரசே அதைக் கட்டியது.
2011ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த போது மத்திய அரசின் பயனாளிகள் பட்டியலும் மாநில அரசின் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளின் பட்டியலும் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீடு வழங்கப்பட்டது.
அதன்படி, தொடக்கத்தில் மாநில அரசின் பயனாளிகள் பட்டியலில் இருந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம் காப்பீடு வழங்கப்பட்டது. பின்னர், மாநில அரசின் திட்டப் பயனாளிகளுக்கும் காப்பீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் தற்போது மத்திய, மாநில அரசுகளின் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry