மழைக்கு நடுவே ஆசிரியர்களுக்கு பயிற்சி! ஆதிக்கம் செலுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கலெக்டர்கள் வசமாகிவிட்டதா கல்வித்துறை? முதலமைச்சருக்கு ஐபெட்டோ கடிதம்!

0
1468
AIFETO's Annamalai has opposed the decision to conduct a teacher training session in Thanjavur amidst heavy rains. He raised concerns about the timing, citing potential risks and difficulties for teachers due to adverse weather conditions.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு வெள்ள பாதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். பெருமிதம் கொள்கிறோம்.

AIFETO Annamalai

மாணவர்களுக்கு மழைக்காக விடுமுறை விடப்பட்டுள்ள சமயத்தில், கட்டாயமாக இணைய வகுப்புகள் நடைபெறக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். வரவேற்கிறோம். அதேநேரம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒன்று – இரண்டு – மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து கலந்தாய்வு, பயிற்சிக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி 19.10.2024 சனிக்கிழமை அன்று தஞ்சை சங்கீதா மஹாலில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

அக்.16ம் தேதி புதன் கிழமை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 17ம் தேதியும் தஞ்சை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. பொதுவாக கனமழை விட்டு இயல்புநிலை திரும்ப கட்டாயம் ஓரிரு நாட்களாவது ஆகும்.

கனமழை தாக்கத்திற்கு நடுவே, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்ணாசிரியர்கள் கலந்தாய்வு, பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிடுகிறார். நான்கு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களை அடுத்த கூட்டத்தில் சந்திக்கிறாராம். தலைமை ஆசிரியர்களை, மற்ற பள்ளிகளை பார்வையிடுமாறும் வலியுறுத்தி வருகிறார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி உள்ளது, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளது. நிர்வாகத்தை, இயக்குநர்கள் தனித்தனியாக நிர்வகித்து வருகிறார்கள். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிக்கல்வித்துறை தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்கிறார் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம். மாவட்ட ஆட்சியர்களிடம் கல்வித்துறை தாரைவார்க்கப்பட்டு வருகிறதா?

Also Read : மழைக்காலத்தில் கலைநிகழ்ச்சி தேவையா? மேலிடம் என்றால் அமைச்சரா, ஒன்றிய அரசா? கல்வித்துறைக்கு ஐபெட்டோ அழுத்தமான கேள்வி!

தஞ்சை மாவட்ட ஆட்சியர், தனது மாவட்டத்தில் உள்ள காவல் துறையினரை கூட்டி அவர்களுக்கு பயிற்சி கொடுப்பாரா? தஞ்சை மாவட்ட ஆட்சியரைப் பற்றி ஆதாரப்பூர்வமாக பல புகார்களை பலரும் பட்டியலிட்டு வருகிறார்கள். எங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. பள்ளியைப் பார்வையிடும்போது தேவையற்ற வார்த்தைகளை ஆசிரியர்களிடம் பேசி இதே ஆட்சியர் சர்ச்சையில் சிக்கினார். மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை செயல்பாடுகளை தானே கையில் எடுத்துக் கொள்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.

தாங்கள், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு, மக்களை பாதிப்பில்லாது காக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறீர்கள். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திருமானூர் பாலம் தொடங்கி கல்லணை வரை ஆய்வு செய்ய வேண்டும். இதைவிடுத்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக ஆட்சியர் கூறுகிறார்.

தொடர் மழையில் பெரும்பான்மையான பெண் ஆசிரியர்கள் பங்கேற்கும் கூட்டத்தினை தவிர்ப்பதற்கு ஆணை வழங்கிடுமாறு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர், கல்வித்துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டு, பள்ளிக் கல்வித்துறையின் தனித்தன்மையினை பாதுகாத்திட வேண்டுகிறோம்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry