சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை! ஆந்திராவுக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

0
72
Due to the low-pressure system moving towards Andhra Pradesh, weather enthusiasts have predicted that there is no chance of extremely heavy rain in and around Chennai.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் கனமழை பெய்யவில்லை. வானம் வெளிவாங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மிக லேசான மழையே பெய்கிறது.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read : முடிவு பெறாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகள்! அரசின் செயலற்ற தன்மையால் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கப்போகும் சென்னை?

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 130 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டியும், 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நிரம்பி உள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கலாம் என்றாலும்கூட அதன் காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இது சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. இருப்பினும், இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யலாம்.

காற்றுக் குவிப்பு ஆந்திராவின் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மழை மேக ஈர்ப்பால் நிகழும் மழை மட்டுமே சென்னையில் 18 முதல் 20 ஆம் தேதி வரை பெய்யக்கூடும். ஆகையால் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் வீட்டுக்குக் கொண்டு வரலாம். கடந்த இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூரில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சென்னையில் சில இடங்களில் 30 செ.மீ அளவு மழை பெய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் 350 கி.மீ. தூரத்தில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் சென்னையில் தரைக்காற்று சற்று அதிகமாக வீசும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை மிதமான மழையே பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

முன்னதாக, திங்கள்கிழமை இரவு தொடங்கி கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தலைநகர் சென்னை மிதக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும். இதனால், நாளை (அக்.17) சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும், 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry