பள்ளிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு! NEP 2020ஐ மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சியா? ஐயம் கிளப்பும் ஐபெட்டோ!

0
602
AIFETO leader Annamalai has voiced strong opposition to the Director of Elementary Education's recent decision to merge schools. He argues that the merger will negatively impact students, teachers, and local communities, urging reconsideration to protect educational quality and accessibility. Image : P.A. Naresh, Director of Elementary Education & AIFETO Secretary Annamalai.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலனப்பதிவு அறிக்கையில், “பள்ளிகள் இணைப்பு திட்டம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.அ.நரேஷிடம், 29.10.2024 அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். மேலும், பள்ளிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கையினை முற்றிலும் கைவிட வேண்டுமென வலியுறுத்தினோம்.

அப்போது, ஒரே வளாகத்தில் நடுநிலை பள்ளியும், தொடக்கப்பள்ளியும் தனித்தனியாக இயங்கி வருமேயானால், இரண்டு பள்ளிகளையும் இணைத்து உயர்நிலைப் பள்ளியாக உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று இயக்குநர் கருத்து தெரிவித்தார்கள். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் இழந்து ஒரு உயர்நிலைப் பள்ளி உருவாக்குவதால் என்ன பயன்? என்ற கருத்தை நாம் முன்வைத்தோம்.

Also Read : தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! ஆளுநரின் பங்கு குறித்து ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி!

குறிப்பாக கும்பகோணம் மாநகராட்சியில் ஐந்து பள்ளிகளை இணைக்கும் முடிவு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று கணக்கெடுத்து பார்ப்போமேயானால் சென்னை மாநகராட்சி, வேலூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடவேண்டிய அபாயம் நேரிடும் என்பதையும் இயக்குநரிடம் விளக்கினோம்.

மேலும், இத்தனை ஆண்டு காலமாக, முந்தைய ஆட்சிக்காலத்திலும் சரி, தற்போதைய ஆட்சிக் காலத்திலும் சரி, இதுவரை பள்ளிகள் இணைப்புக் கொள்கையினை எந்தத் தொடக்கக் கல்வி இயக்குநரும் வலியுறுத்தவில்லை. காரணம், பள்ளிகளை மூடுகிறார்கள் என்ற கடுமையான விமர்சனம் ஆளும் அரசின் மீது வரும். நூறு பள்ளிகளை இணைத்தால் கூட, நூறு பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறையும் என்பதை எடுத்துரைத்தோம்.

Also Read : அபாயகரமான நிலையில் சென்னை சூழலியல் பாதிப்புகள்! 85% சதுப்பு நிலங்கள் அழிப்பு! பின் விளைவுகளை தாங்குமா தலைநகரம்?

இதற்கு பதிலளித்த தொடக்கக்கல்வி இயக்குநர், காலிப் பணியிடங்கள் நிறைய இருக்கிறது. அவர்களுக்கு மாறுதலில் செல்ல வாய்ப்பு அளிக்கலாம் என்று கூறினார். ஆனால், அந்த பேச்சுக்கே இடமில்லை என நாம் உறுதிபட மறுதலித்தோம். திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு புதிய தொடக்கப் பள்ளிகள் எதையும் தொடங்கவில்லை. தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை. உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்படவில்லை.

மட்டுமல்லாமல், சுமார் 30 கிராமங்களில் பள்ளிகளே இல்லாமல் அந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் வெளியூரில் சென்று படித்து வருகிறார்கள். இந்த நிலைமையில் திமுக அரசு, காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நடத்தப்பட்டு வரக்கூடிய பள்ளிகளை இணைப்பு என்ற பெயரால் மூடுகிற எண்ணம், அரசுக்கு தீராத பழியினை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இயக்குநருக்கு தெளிவுபடுத்தினோம்.

பள்ளிகள் இணைப்பு என்பது, தேசிய கல்விக் கொள்கையில் இருந்து வெளிவரக்கூடிய முடிவாகும். தேசியக் கல்விக் கொள்கையினை மறைமுகமாக அமல்படுத்துவது போன்ற தோற்றத்தினை உருவாக்கும். தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு, பள்ளிகள் வாரியாக சென்று, பள்ளிகளை இணைப்பதற்கு எழுதிக் கொடுங்கள் என்று வற்புறுத்தி வருகிறார். மேயர், மாநகராட்சி உறுப்பினர் ஆகியோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் கொடுத்து வருகிறார்கள். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரின் பார்வைக்கும், கவனத்திற்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார்கள்.

காமராஜர் மாதிரி தொடக்கப்பள்ளியினை முதலில் மூடுவதாக அந்த மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதற்கு கடுமையான எதிர்ப்புக் கனல் வெளியில் வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு, தொடக்கக் கல்வித்துறையில்(தஞ்சாவூரில்) அடிக்கடி கலவரத்தினை ஏற்படுத்தி வருகிறார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 1, 2, 3ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு, 4,5ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு கூட்டம் நடத்தி சந்திக்க இருப்பதாக வாய்ஸ் மெசேஜ் கொடுத்து பிரச்சனையை ஏற்படுத்தியவரும் இவர்தான். பிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இப்போது பள்ளிகளை மூடுவதற்கான அபாய சங்கை ஊதி வருகிறார்.

Also Read : தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்! Health Benefits of Peanuts!

பத்துக்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளியாக இருந்தாலும், ஐந்து வகுப்புகள்தான் நடத்துகிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கை ஒன்பது இருக்கும் பள்ளிகளிலும் ஐந்து வகுப்புகள் தான் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மிகவும் குறைவாக இருக்கக்கூடிய பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறார்கள். அதற்கு பெரிதாக எதிர்ப்பு இல்லை.

தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்து அந்த பள்ளியின் வகுப்புகளை நடத்துவதற்கு தீர்வு காண முன்வர வேண்டும். மேலும், பள்ளிகள் இணைப்பு முயற்சிகளை நிறுத்திட வேண்டுமாய், தொடக்கக்கல்வி இயக்குநரை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். கோரிக்கை விண்ணப்பங்களை உடன் பரிசீலனை செய்து தீர்வு கண்டுவரும் தொடக்கக் கல்வி இயக்குநரை பெரிதும் பாராட்டி மகிழ்கின்றோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry