தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! ஆளுநரின் பங்கு குறித்து ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி!

0
168

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இணைய வழி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க வைக்கும் பிள்ளைகளின் பெற்றோர், என அனைவரின் இதயத்து உணர்வுகளை தெரியப்படுத்தவே இந்த வேண்டுகோள் கடிதம்.

கல்விக்கு அழகு கசடற மொழிதல், ஆளுநருக்கு அழகு வகித்து வரும் பதவிக்கும், மாநிலத்திற்கும், பெருமையினை சேர்த்து மாண்பினை காத்தல். மட்டுமல்ல, எந்த காரணத்தினை முன்னிட்டும் அரசியல் சட்டம், இறையாண்மைக்கு சோதனையினை ஏற்படுத்தும் வண்ணம் செயலும், பேச்சும் அமையாமல் பாதுகாத்து வருதல்.

AIFETO Annamalai

ஆனால், ஆளுநரின் செயலும், பேச்சும் அவரின் சுயபரிசோதனைக்கே சோதனையினை ஏற்படுத்துவதாக அமைந்து வருகிறது. D.D. தமிழ் நடத்திய ‘இந்தி மாத நிறைவு விழா’வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது ‘தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரிகள் விடப்பட்டு பாடப்பட்டது.

Also Read : சூடா ஒரு டீ; கூடவே ஒரு ‘தம்’! 15 வகையான நோய்கள் ஏற்படும் ஆபத்து! Health risks of tea and cigarette combination!

ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் செய்திக்குறிப்பில் ‘தெக்கணமும் அதில்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற வரிகள் விடுபட்டதற்கும், ஆளுநர் மாளிகைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பாடியவர்களின் குற்றம்தான் என்கிறார்கள். வரிகள் விடப்பட்டவுடன் ஆளுநர் அந்த இடத்தில் கண்டனத்துடன் திருத்தம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதில்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் கைவிடப்பட்டதேன்? என பள்ளி மாணவர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமான வாடிகன் நகரத்தில் போப் அரண்மணையில் தமிழ்த்தாய் வாழ்த்து எந்த சிரமமும் இல்லாமல் பாடப்பட்டு வருவதாக மதச்சார்ப்பற்ற உணர்வாளர்களால் பெருமிதத்துடனே வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமல்ல, ஆளுநரின் கடந்தகால செயல்பாடுகள் சாட்சியங்களாக, நேரலையாக ஒன்றன்பின் ஒன்றாக கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவதை காண்கிறோம்.

ஆளுநர் மாளிகையில் செப்டம்பர் 5ந் தேதி ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டபோது, ஆசிரியர்களை பாராட்ட வேண்டிய விழாவில், தமிழ்நாட்டில் கல்வி, கற்பித்தல் – கற்றல் திறன் மிகவும் மோசமாக உள்ளது எனப்பேசி ஆசிரியர்களை மதிப்பிழக்கச் செய்யும் உரையாக வெளிப்படுத்தினார். எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்தியிருந்தோம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள கல்வியின் தரம் குறித்து பட்டியலிட தயாராக உள்ளோம். ஏற்றுக் கொள்வீர்களா?

Also Read : அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

நீட் தேர்வு முறைகேடுகள் கூச்சப்பட செய்யவில்லையா? குஜராத் மாநிலத்தில் 51 ஆசிரியர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட வெளிநாடுகளில் 5 முதல் 8 ஆண்டுகள் வரையில் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மாதந்தோறும் 70 ஆயிரம் முதல் 76 ஆயிரம் வரை தொடர்ந்து ஊதியம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதை கண்டுபிடித்து 3 மாதமாகத்தான் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையில் 120 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக குஜராத் கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாலை நேரத்தில் பள்ளிகளை மூடியபிறகு பசுமாடுகளைப் பள்ளி வளாகத்தில் வைத்துப் பத்திரமாக பாதுகாத்து வருகிறது உத்திரப்பிரதேச அரசும், கல்வித்துறையும்.

உத்தரப்பிரதேச கரும்பு மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சஞ்சய்சிங் கால்வர் என்பவர் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்கிறார்; 10 நாட்களுக்குள் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவைக்கு மாத்திரைகள் சாப்பிடத் தேவையில்லை, சரியாகிவிடும் என்கிறார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெருமைக்குரிய தமிழ்நாட்டின் கல்வியின் தரத்தினை தொடர்ந்து விமர்சனம் செய்தால், இன்னும் சில மாநிலங்களில் உள்ள கல்விச்சாலைகளின் நிலைகளை வெளிக்கொண்டு வருவோம்.

தேசியக் கல்விக் கொள்கை இன்னொரு நவீன குலக்கல்வித் திட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதை இதயத்தில் பதிவு செய்து வைத்துள்ளோம். WE REJECT NEP-2020, REPEAL NEP 2020, Abolish NEET, CUET and other Centralised tests that undemocratically minimise and also undermine the federal structure of the constitution the role of states
என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அதேபோல், இருமொழிக் கொள்கையிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். பி.எம்.ஸ்ரீ. பள்ளி தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டதா? இல்லையா? என்ற ஆய்வறிக்கையினை வெளியிட முன்வரவில்லை. பி.எம்.ஸ்ரீ. பள்ளியினை தொடங்கினால் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம், 3-வது மொழி எது?

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். இது, கடனும், இலவசமும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கானது என்பதாக மட்டும் இல்லை. நாளடைவில் அப்பன் தொழிலை அவனது பிள்ளை தவறாமல் செய்யும் சூழ்நிலை பெருகும் வாய்ப்பு கண்கூடாக தெரிகிறது.

மீனவர்கள் விழாவில் கலந்துகொண்ட உத்தரப்பிரதேச அமைச்சர் ஒருவர், உங்கள் பிள்ளைகளுக்கு கங்கையாற்றில் மீனை எப்படி பிடிப்பது என்பதை பயிற்சி கொடுங்கள், பிழைத்துக் கொள்வார்கள் என்ற பேச்சு செய்தியாக வெளிவந்ததை படித்துள்ளோம். தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து இந்தி மொழியினை படிக்க வைப்பவர்களுக்கு எதிராக எந்த அமைப்பும் கோரிக்கை முழக்கமிடுவது இல்லை. அதுபோல் சமஸ்கிருதப் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதும் இல்லை! கொள்கை முடிவுகளை திணிப்பதை எதிர்க்கிறோம்.

தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்களின் பதவிக்காலம் நிறைவுற்று ‘Untill further orders’ ஆக பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறியாதவர்கள் இல்லை. இது விமர்சனம் அல்ல, விளக்கம்! பொது வாழ்வில் 51 ஆண்டுகள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவர், 22 மாநிலங்களில் தொடர்புள்ள All India Federation of Elementary Teachers’ Organizations (AIEFTO/ஐபெட்டோ) அமைப்பில் 18 ஆண்டுகளாக தேசியச் செயலாளர்.

கூட்டமைப்பு சார்பில் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்திய அனுபவம், இப்படியான யாம், செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னால் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ” என்ற பாரதிதாசனார் பாடல் வரியினை இரத்த ஓட்டத்தில் இரண்டறக் கலக்கச் செய்துள்ளவன். ஆளுநர் என்ற பதவிக்குரிய பொதுமரியாதையினை என்றும் தருவோம். நாட்டையும், மொழியினையும் மதிப்பிழக்கச் செய்யும் பேச்சினையும், செயலினையும் என்றும் எதிர்த்து எப்போதும் முழக்கமிடுவோம்.‘வழியே ஏகுக வழியே மீளுக’ என்பதை நினைவில் கொள்ளுமாறு ஆளுநரை பெரிதும் வேண்டுகிறோம். Save Our Children..! Save Our Education..! Save Our Tamil Nadu.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry