
அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழைத்தண்டில் கால்சியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. துவர்ப்புத்தன்மை உடையது. வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.
வாழைத்தண்டு நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து அருந்தி வர, விரைவிலேயே எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும். ஆண்களுக்கு சிறுநீரோடு கலந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. விந்துப்பை வீக்கத்தை சரிசெய்யும்.
அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் பருமனைக் குறைக்கும். தொப்பை இருப்பவர்கள் வாழைத்தண்டை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டில் அதிகப்படியான தாது உப்புக்கள் மற்றும் புரதச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு வாழைத்தண்டில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்க, அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.
Also Read : வாழைத்தண்டு சட்னி! சிறுநீரகம் தொடங்கி பல உறுப்புகள் பாதுகாப்பாக இருக்க உதவும்…!
குழந்தைகளுக்கு வாழைத்தண்டை எப்போதும் போல பொரியலாக மட்டுமே செய்துகொடுக்காமல், ஜூஸ், மோரில் கலந்து நீர்மோர், பச்சடி, சூப்பாக செய்துகொடுக்கலாம். பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்யலாம். விரும்பிச் சாப்பிடுவார்கள்.
வாழைத்தண்டு பித்தப்பையை சுத்தமாக வைத்து சிறுநீரக கற்கள் சேராமல் தடுக்கிறது. வாழைத்தண்டு சாறுடன் ஏலக்காய் பொடி, மோர் சேர்த்து கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை சுத்தமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட ஏற்ற பானம் இதுவாகும்.
வாழைத்தண்டு வைட்டமின் B6 நிறைந்தது. மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் இது நன்மை பயக்கும். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி வாழைத்தண்டு சாப்பிடுங்கள்.
வயிற்று அமிலத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டை வாரம் இரண்டு முறையாவது உட்கொள்ள வேண்டும். இது உடலில் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிக்கிறது. நெஞ்செரிச்சல், அசௌகரியம் மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றை குணப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Also Read : இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! நிச்சய வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை அளித்ததரும் அபிஜித் முகூர்த்தம்!
வாழைத்தண்டு ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு தவிர வாழைப்பூவும், பிஞ்சும் ரத்த விருத்தியை அதிகரிக்கும். வாழைப்பூவில் வடகம் செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகள் சரியாகும். விஷக்கடி, தீக்காயங்களுக்கு வாழைப்பட்டை, வாழைத்தண்டின் சாறைப் பூசினால், எரிச்சல் போவதுடன், சீக்கிரத்தில் ஆறிவிடும்.
வாரம் முழுவதும் வாழைத்தண்டை உணவில் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வாரத்துக்கு மூன்று முறை சேர்த்துக்கொண்டாலே, அதன் முழுப் பயனையும் பெறலாம். பகல் நேர உணவில் மட்டுமே வாழைத்தண்டு இடம்பெற வேண்டும். இரவு உணவில் கட்டாயம் சேர்க்கக் கூடாது. சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry