ஆரோக்கியத்துக்கும், செல்வச் செழிப்புக்கும், தீபாவளிக்கும் என்ன தொடர்பு? அதிசயிக்க வைக்கும் ஆன்மிகமும், அறிவியலும்!

0
62

தீபாவளியை பண்டிகை என்று சொல்வதைவிட, திருவிழா என்று சொல்வதே சரியாக இருக்கும். 5 நாள் கொண்டாட வேண்டிய இந்த தீபாவளியானது, ஆன்மிகமும், அறிவியலும் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது.

தென் மாநிலங்களில் ஒரு நாளும், வட மாநிலங்களில் 5 நாள்களும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியம், செல்வம், சகோதரத்துவம் போன்றவற்றை உணர்த்துவதாக இந்தத் திருவிழா திகழ்கிறது. அதாவது, முதல் நாள் தன்வந்திரி திரியோதசி, இரண்டாவது நாள் நரக சதுர்தசி எனப்படும் தீபாவளி, மூன்றாவது மஹாலட்சமி பூஜை, நான்காவது நாள் கோவர்த்தன பூஜை, ஐந்தாவது நாள் பய் தூஜ் எனப்படும் சகோதரத்துவ நாள்.

இந்த 5 நாளும் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் சக்தியின் அளவு வேறுபடுகிறது. எனவே, இந்தப் பண்டிகை தினத்தில் குறிப்பிட்ட பூஜைகளை செய்தால், உரிய சக்தியை உடல் கிரகித்து அதற்கான பலனை பெற முடியும் என சித்தர்கள் வகுத்துள்ளனர்

தன்வந்திரி திரியோதசி

விஷ்ணுவின் அவதாரமும், (ஆயுர்வேத) மருத்துவத்தின் பிதாமகருமான தன்வந்திரியை போற்றும் நாள். தீபாவளிக்கு முந்தைய தினம், இந்நாள் அனுசரிக்கப்படும். உடலையும், உயிர் சக்தியையும் கொடுத்த தன்வந்திரிக்கு நன்றி தெரிவித்து, உடல் ஆரோக்கியம் மேம்பட இந்த நாளில் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனைய நாள்களைவிட இந்த நாளில் செய்யும் பிரார்த்தனைக்கு கூடுதல் பலன் கிடைக்கும். இதுதான் அறிவியல்.

அதிகாலை நேரத்தில் குளித்து, பூஜை செய்து, பெருமாளுக்கு நன்றி தெரிவித்து, பிரார்த்தனையை முன்வைக்கும்போது, பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச அதிர்வு அதை நிவர்த்தியாக்கும்.

தீபாவளி எனப்படும் நரக சதுர்தசி 

நரகாசுரனின் கொடுமைகள், இம்சைகள் அதிகரிக்கவே கிருஷ்ணர் அவனை கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில், இந்நாளை மக்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என நரகாசுரன் வரம் கேட்கிறான். அதன்படி தீபாவளி கொண்டாடப்படுவதாக ஐதீகம். இந்த நாளில்தான், அறியாமை எனும் இருளில் இருந்து, அறிவு எனும் ஒளியைப் பெற கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். இதற்கும் அதிர்வுகள்தான் காரணம். இதைக் குறிப்பிடும் வகையில்தான் தீப ஒளித் திருநாள் என்கிறோம்.

அதாவது, தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா? என பெரியவர்கள் கேட்பார்கள். கங்கையில் குளித்தால், பாபம் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். ஏனென்றால், கங்கை நீரில் இருக்கும் பிராண சக்தியே இதற்குக் காரணம். அதேபோல், தீபாவளியன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில், பூமியில், அனைத்து நீரிலும், பிராண சக்தி மேலோங்கி இருக்கும். எனவே, தீபாவளி நாளன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, கங்கையில் குளித்தற்கான உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

ஸ்கந்தபுராணத்தின் படி, சிவனோடு கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில், சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நாளினை நினைவுபடுத்துவதாகவும் தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.

மஹாலட்சுமி பூஜை

இன்றைய தினம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் மஹாலட்சுமி, தன்னை அழைக்கும் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம். மஹாலட்சுமி பூஜை செய்தால், கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டாது. ஆனால், செல்வம் ஈட்டுவதற்கான சக்தி மேம்படும், அதற்கான வழிமுறைகள் தெளிவாகும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து, மஹாலட்சுமி படம்(இயன்றவர்கள் கலசம் வைப்பது சிறப்பு)வைத்து, ஆபரணங்கள் சூட்டி பூஜை செய்ய வேண்டும். அப்போது, இதுவரை கொடுத்த செல்வத்துக்கு நன்றி தெரிவித்து, மேலும் வேண்டுவனவற்றை கேட்கலாம்

கோவர்த்தன பூஜை

இது, நான்காவது நாள் பண்டிகை. கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து வருணன் மற்றும் இந்திரனின் செருக்கை அடக்கிய கிருஷ்ணரைப் போற்றும் வகையில்,கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது

சில மாநிலங்களில், மகாவிஷ்ணு வாமனராக வந்து மகாபலிச் சக்கரவர்த்தியை வெற்றிகொண்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது.இன்னும் சில மாநிலங்களில் ராவணனை சம்ஹாரம் செய்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ராமபிரானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். குஜராத்தில் இந்த நாளைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வியாபார நிறுவனங்களில், அன்றுதான் புதுக் கணக்கு துவங்குகிறார்கள்.

பய் தூஜ்

ஐந்தாவது நாளை, பய் தூஜ் என கொண்டாடுகின்றனர். சகோதர சகோதரிகளுக்கு இடையே அன்பை வளர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் சகோதரிகளைப் போற்றும், கொண்டாடும் நாள். சகோதரத்துவத்தை போற்றும் வகையில், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசு கொடுக்க வேண்டும். அதாவது சகோதரிகளிடம் இருந்து அன்பையும், அருளையும் பெறுதல்தான் பய் தூஜ். இன்றைய நாளில் பரிமாறிக்கொள்ளும் அன்பானது ஆரோக்கியமாக நிலைத்து இருக்கும்

இதன்படி பார்த்தால், பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் சக்தியானது, இந்த ஐந்து நாள்களிலும் வேறுபட்டு பல்வேறு பலன்கள் தருவதை அறிவியல் ரீதியாக உணர்ந்த சித்தர்கள், அதை திருவிழாவாக நிர்ணயித்து நம்மை கொண்டாட வைத்துள்ளனர். வேல்ஸ் மீடியா அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry