‘மூக்குத்தி அம்மன்’ திரைவிமர்சனம்! நறுக் வசனங்கள்! சாமியார்களின் மூலதனமே, பக்தர்களின் பயம்தான்!

0
85

ஆர்.ஜே. பாலாஜிஎன்.ஜே. சரவணன் இணையின் இயக்கத்தில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், OTT தளத்தில் தீபாவளி சிறப்பு(சிரிப்பு) விருந்தாக வந்துள்ள படம்தான் மூக்குத்தி அம்மன்.

நாஞ்சில் நாட்டில், 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைக்கத் துடிக்கிறார் போலிச்சாமியாரான பகவதி பாபா (அஜய் கோஷ்). அதை, ரிப்போர்ட்டரான ஏங்கல்ஸ் ராமசாமி(ஆர்.ஜே. பாலாஜி), தனது குலதெய்வமான மூக்குத்தி அம்மன்(நயன்தாரா) துணையுடன் எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதைக் கரு.

அம்மா ஊர்வசிக்கு பாலாஜி மற்றும் 3 பெண் குழந்தைகள். கணவர் வீட்டைவிட்டு ஓடிவிட்ட நிலையில், மாமனார் மவுலியின் துணையோடு குழந்தைகளை வளர்க்கிறார். ஒவ்வொரு முறை திருப்பதி செல்ல முற்படும்போதும், தடை ஏற்படுகிறது. திடீர் திருப்பமாக, குலதெய்வமான மூக்குத்தி அம்மனை தரிசித்தப் பிறகு ஏற்படும் அதிசயங்கள் லாஜிக் மீறலுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

100 சதவிகித கமர்ஷியல் சினிமா என்றாலும், பாலாஜிசரவணன் கூட்டணி, வசனத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். கிறித்துவ பள்ளியில் படிக்கும் தங்கை, கிறித்துவ மதத்தை பின்பற்றுகிறாளே என சிஸ்டரிடமே அப்பாவியாக கேட்பது!, பக்தியில் யாரும் சாமி கும்பிடவில்லை, பயத்தில்தான் கும்பிடுகிறார்கள்!, கடவுளை வெளியே எங்கும் தேடாதீர்கள், உங்களுக்குள்ளேயே இருக்கிறார்!, ஒவ்வொருவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைதான், என பல இடங்களில் வசனங்கள் நறுக். குறிப்பாக, கடைசி காட்சியில் நயன்தாரா பேசும் வசனங்களுக்கு ஒரு ஷொட்டு.

சாமியார்கள் காப்பாற்றுவதாக சொல்வது மனிதனை உருவாக்கிய கடவுளையா? அல்லது அவர்கள் உருவாக்கிய கடவுளையா? என்பது விடைதேட வேண்டிய கேள்வி. கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம், ஆனால் ஒரு மதம் மட்டுமே சிறந்தது எனக் கூறுபவன் டேஞ்சர் என சிலரை காயடித்திருக்கிறார் பாலாஜி. அதேபோல, கடவுள் மறுப்பு போஸ்டர் மீது அம்மன் போஸ்டர் ஒட்டுவது மற்றும் ஜோதிடர் பாபு, நித்தியானந்தா போன்றோரையும் விட்டுவைக்கவில்லை. கார்ப்ரேட் சாமியாரான வில்லன் கதாபாத்திரம் யாரை குறிப்பிடுகிறது என்பது பெரும்பாலானோருக்கு எளிதாகவே புலப்படும்.

பல இடங்களில் சிரிக்க வைத்தாலும், மலையாள இளம் தம்பதிகளின் ஃபோட்டோ ஷூட், அம்மன் தரும் திடீர் வரங்கள், தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்க வேண்டும் என்று பாலாஜிக்கு மூக்குத்தி அம்மன் போடும் உத்தரவு, 11 ஆயிரம் ஏக்கர் வனத்தை எரிப்பது போன்ற லாஜிக் மீறல்களுக்கும் குறைவில்லை.

கதையின் நாயகனாக, நகைச்சுவை மற்றும் யதார்த்தமான நடிப்பில் முத்திரை பதித்தாலும், தான் இன்னமும் ரேடியோ ஜாக்கி என்ற நினைப்பிலேயே இருக்கிறார் பாலாஜி. மூக்குத்தி அம்மனாக நயன்தாராவின் நடிப்பு பாராட்டுக்குரியது. தந்தை தயவில்லாத குழந்தைகளின் தாயாகவே வாழ்ந்திருக்கும் ஊர்வசி, படத்துக்கு கூடுதல் பலம்.  நாகர்கோவிலை பசுமையாக கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இசையமைப்பாளர் கிரிஷ் கோபலகிருஷ்ணன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

தீபாவளி விடுமுறையை குடும்பத்துடன் கண்டுகளிக்க சரியான தேர்வாக இந்தப்படம் இருக்கும். திரைக்கதையில் சுணக்கம் இருந்தாலும், தங்களது கதைவசனம் மூலம் மூக்குத்தி அம்மனுக்கு வாகை மாலை தரித்திருக்கின்றனர் இயக்குநர்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry