Saturday, January 28, 2023

விஸ்வரூபமெடுக்கும் கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரம்! முதலமைச்சர் தொடங்கியதால் முடக்கிய ஆளுநர்! தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் அச்சம்!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கிரிக்கெட்டில் அரசியலைப் புகுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிசிசிஐ அனுமதியுடன் நடைபெறும் T-20 போட்டி துவக்க விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக கிரிக்கெட் ஸ்டேடியத்தையே முடக்க நினைப்பது நியாயமா என்ற கேள்வியை கிரிக்கெட் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

புதுச்சேரி, துத்திப்பட்டு கிராமத்தில் சீசெம் (Siechem) டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் அமைத்திருக்கும் சீசெம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த இரண்டு வருடங்களாக ரஞ்சி உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. சீசெம் உரிமையாளர் தாமோதரன், அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் அமைத்திருப்பதாக புகார் எழுப்பப்பட்டது.

இதையடுத்து, சீசெம் நிறுவனம் மீது எஃப்..ஆர் பதிவு செய்யவும், தற்போது நடைபெற்று வரும் T-20 போட்டியை நிறுத்தவும் கிரண் பேடி உத்தரவிட்டிருக்கிறார். இதுமிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அரசு நிலங்களையோ, நீர் நிலைகளையோ ஆக்கிரமிக்கவில்லை, சட்டத்திற்கு உட்பட்டு, அரசு அனுமதியுடனேயே அனைத்தும் செய்யப்பட்டது என CAP (Cricket Association of Pondicherry) செயலாளர் சந்திரன் கூறியிருக்கிறார்.

கிரண்பேடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், “சர்வதேச தரத்திலான இதுபோன்ற கிரிக்கெட் ஸ்டேடியத்தை புதுச்சேரி அரசால் அமைக்க முடியாது. எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளும் இங்கு நடக்கும். வேண்டுமென்றே கிரண்பேடி விளையாட்டில் அரசியலை திணிக்கிறார். ஸ்டேடியத்தை முடக்க அவருக்கு அதிகாரம் இல்லைஎன்றும் கூறியுள்ளார்.

Also Watch: ஸ்டேடியம் விவகாரத்தில் ஆளுநரை வறுத்தெடுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே தொழில், சுற்றுலாத்துறைகள் போதிய வளர்ச்சி இல்லாமல் தள்ளாடுகின்றன. தனிநபரின் முயற்சியால் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டு, பிசிசிஐ அனுமதியுடன் போட்டியும் நடைபெறுகிறது. இதன் மூலம் விளையாட்டுத்துறையில் புதுச்சேரி மாநிலம் தேசிய கவனத்தை முழுவதுமாக ஈர்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், கிரண்பேடி மைதானத்தை முடக்க நினைப்பது சரியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மைதானத்தில் விதி மீறல்கள் இருந்தால், அதை சுட்டிகாட்டி சரிசெய்ய உத்தரவிடலாம். ஆனால், மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மைதானத்தை அரசியல் காரணத்துக்காக முடக்குவது சரியல்ல என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இது ஆளுநருக்கு CAP-க்கும் இடையிலான பிரச்னையாக தெரியவில்லை, அரசுக்கும் ஆளுநருக்குமான மோதலாக தெரிகிறது.

முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார் என்பதற்காகவே, ராஜ்பவன் தரப்பிலிருந்து கேவி டெக்ஸ் துணிக்கடை முடக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது. தற்போது, முதலமைச்சர் தொடங்கி வைத்தார் என்பதற்காக, கடந்த 11-ம் தேதி தொடங்கிய T-20 போட்டியை ரத்து செய்ததுடன், மைதானத்தை முடக்க ஆளுநர் உத்தரவிடுவது சரியா என்ற கேள்வியை பரவலாக பலரும் முன்வைப்பதை கேட்க முடிகிறது.

முதலமைச்சர் செய்வது அனைத்துமே குற்றம் என்ற ரீதியில் ஆளுநர் அணுகலாமா? இதன் மூலம் கிரண்பேடி எல்லா விஷயத்தையும் அரசியலாக பார்க்கிறார் என்ற எண்ணம் ஏற்டுவதை மறுக்க இயவில்லை. மாநில வளர்ச்சியை தாண்டி, முதலமைச்சர் எது செய்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்ற மன நிலையை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அதிகாரத்தை வெளிப்படுத்தினால், புதிய முதலீட்டாளர்கள் புதுச்சேரி வரமாட்டார்கள். வேலை வாய்ப்பு, மாநில வரி வருவாய், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். மாநில வளர்ச்சிக்கான விஷயங்களில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டியுள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது. மில்களையும், மைதானத்தையும் மூடுவதில் மட்டும் காட்டும் அக்கறையை, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் காட்டியிருந்தால், புதுச்சேரி மக்கள் கொண்டாடியிருப்பார்கள், வேலை வாய்ப்பும் பெருகியிருக்கும்.

அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட மனங்களே, அதை எளிதாகக் கடந்து மனிதத்தன்மையைப் போற்றும் என்பதை புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles