தமிழ்நாட்டில் ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கிவைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(பிக் பாஸ்), நாளை சென்னை வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜக-வின் பார்வையில், டிடிவி தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சித்தாந்த ரீதியாகவே டிடிவி தினகரனுக்கும் – பாஜக-வுக்கும் பெரிய அளவிலான வேறுபாடுகள் இல்லை. அடிப்படையில் சிறந்த ஆன்மிகவாதியான தினகரன், கோ பூஜையும் செய்வார். இதுமட்டுமல்லாமல், ‘திராவிட’ என்ற வார்த்தை இல்லாத அரசியல் கட்சியை நடத்தும் மிக முக்கியமானவராக டிடிவி தினகரனை, பாஜக பார்க்கிறது. இவரை சரியாகப் பயன்படுத்தும்பட்சத்தில், தங்களுக்குச் சாதகமாக தமிழக அரசியல் சூழலை மாற்றுவார் என்று பாஜக நினைக்கிறது. (சில மாதங்களுக்கு முன் டிடிவி தினகரன் டெல்லி சென்றுவந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்)
அதிமுக-பாஜக இடையேயான உறவு நாளுக்குநாள் கசந்து வருகிறது. பாஜக கூட்டணி வேண்டாம் என்றே அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை கூட்டணி முறியும்பட்சத்தில், அடுத்து செய்ய வேண்டிய மூன்று முக்கிய வியூகங்களை பாஜக வகுத்துவிட்டது. இதுபற்றி அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர்கள் ஏற்கனவே விவாதித்துள்ள நிலையில், நாளை மீண்டும் ஆலோசிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
முதல் வியூகம் – டிடிவி தினகரன்

சித்தாந்த ரீதியாக ஒத்துப்போகும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தங்கள் அணிக்கு கொண்டுவரும் முடிவில் பாஜக இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை இல்லை என கர்நாடக அரசு கூறியுள்ளதால், ஜனவரி மாதம் அவர் விடுதலையாகிவிடுவார். (கூட்டணி உறுதியானால் முன்கூட்டியே விடுதலையாகலாம்) ஜெயலலிதா பெயரைச் சொல்லியும், அவருக்காக தாம் சிறை சென்றதாகவும் கூறி சசிகலா மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்யும்போது, மக்களிடையே குறிப்பாக அதிமுக வாக்காளர்களிடையே ஏற்படும் அனுதாபம் தங்கள் அணிக்கான வாக்குகளாக மாறக்கூடும் என பாஜக கணக்குப்போடுகிறது.
இரண்டாவது வியூகம் – மு.க. அழகிரி
மு.க. அழகிரியை தனிக்கட்சி தொடங்க வைப்பது, அல்லது தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பது என்பதை நோக்கி பாஜக காய் நகர்த்துகிறது. கலைஞர் திமுக என்ற பெயரில் அழகிரி தனிக்கட்சி தொடங்குவார் என்ற தகவல்கள் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தனிக்கட்சி தொடங்காமல், திமுக-வுக்கு நெருக்கடி தரும் விதமாக, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதுபற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.
Also Read : தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என மு.க. அழகிரி அறிவிப்பு! பாஜக-வை அரவணைக்கலாம் என ஆதரவாளர்கள் தகவல்!
மூன்றாவது வியூகம் – ரஜினிகாந்த்

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான ரஜினி, சித்தாந்த ரீதியாக பாஜக-வுடன் இணைந்தே பயணிப்பவர். ஆன்மிக அரசியலை முன்வைத்த இவர், தற்போது தனிக் கட்சி தொடங்குவதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. ரஜினி கட்சி தொடங்கினால் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த பாஜக, தற்போது அவரை தங்களது ஆதரவாளராக மாற்றும் பணியை தொடங்கியுள்ளது.
அண்மையில் ரஜினியை சந்தித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கட்சி தொடங்காவிட்டால், பாஜகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இந்த நிலையில்தான், நாளை சென்னை வரும் அமித் ஷா, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரஜினியை சந்திக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது பாஜக-வுக்காக குரல்கொடுக்குமாறு ரஜினியிடம் அமித் ஷா கோருவார் என்று தெரிகிறது.
பாஜக-வைப் பொறுத்தவரை, எக்காரணம் கொண்டும் திமுக-வை ஆட்சி அதிகாரத்தில் அமர விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறது. எனவே அதிமுக கூட்டணி இல்லை என்றானால், இந்த முக்கோண வியூகத்துடன், சில கட்சிகளை கூட்டணியில் இணைத்து, திமுக, அதிமுக-வுக்கு மிகப்பெரிய நெருக்கடியை தருவதுடன், குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில், சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என நினைக்கிறது. அரசியல் சாணக்கியர்களான மோடி-அமித் ஷா இணை அதை கச்சிதமாக செய்துமுடிக்கும் என்று தமிழக பாஜக-வினர் உறுதியாக நம்புகின்றனர்.
Subscribe to our channels on YouTube  & Telegram &  Tamilnadu &
  Tamilnadu &  Pondicherry
  Pondicherry

