புதுச்சேரி போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு! காவல்துறையில் மறைமுகமாக அமல்படுத்தப்படுகிறதா எமர்ஜென்சி?

0
47

புதுச்சேரி மாநில போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது மறைமுகமாக எமர்ஜென்சியை அமல்படுத்துவதாக உள்ளது என போலீஸார் பொருமுகின்றனர்.

தேர்தல் பிரிவு எஸ்.பி. செல்வம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அரசியல் கட்சிகள் மீதான போலீஸாரின் விசாவாசம் என்பதைக் குறிப்பிடுவதாக உள்ள அந்த சுற்றறிக்கை, டிஜிபி சம்மதத்துடன் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில், இணயத்தில் சமூக ஊடகக் குழுக்கள் செயல்படுகின்றன. அந்தக் குழுக்களில் இணைந்திருக்கும் போலீஸார், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவம் விதமாக, பல தகவல்களை பகிர்வது தெரியவருகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு, கட்சிகள் மீது விசுவாசத்துடனோ, கட்சியினருக்கு ஆதரவாகவோ மற்றும் அமைப்புகளுக்கு சாதகமாகவோ செயல்படாமல், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும்.  அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் இது பொருந்தும். பாரபட்ச செயல்பாடு, கட்சிகள் மீதான விசுவாசம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகக் கூடாது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்பதுதான் அந்த சுற்றறிக்கையின் சாராம்சம்.

கட்சி சார்பற்று, நேர்மையாக பணியாற்ற அறிவுறுத்துவதே இதன் நோக்கம் என உயரதிகாரிகள் கூறினாலும், புதுச்சேரி போலீஸார், வாட்ஸ் அப்டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது என்பதை சூசகமாக வலியுறுத்தவதே இந்த சுற்றறிக்கை என்று கூறப்படுகிறது. ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் 19-ம், 21-ம், கருத்துச் சுதந்திரம் மற்றும் தனி நபர் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. (Article-19: Protection of certain rights regarding freedom of speech, etc. Article-21: Protection of life and personal liberty).

இந்த சட்டப்பிரிவுகள், மத்திய எமர்ஜென்சி மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மட்டும், தேவைப்பட்டால் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்படும். வேறுஎப்போதும் இதை மீற அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவேதான், போலீஸார் சமூக ஊடகங்களில் இருக்கக்கூடாது என நேரடியாக உத்தரவு பிறப்பிக்காமல், புதுச்சேரி காவல்துறை மறைமுகமாக கட்டுப்பாடு விதித்துள்ளது என்பதே குற்றச்சாட்டாக இருக்கிறது.

பாரபட்சமாகவோ, காவல்துறை கட்டுப்பாடுகளை மீறியோ நடக்கும் போலீஸாரை, சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் கண்டறிந்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். அது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும். அதைவிடுத்து, ஒட்டுமொத்த போலீஸாரும், கட்சி அல்லது அமைப்பு சார்புடனோ, சாதகமாகவோ செயல்படுவதாக அதிகாரிகள் கருதுவது எப்படி சரியாக இருக்கும்? என்ற கேள்வியும் பலரால் முன்வைக்கப்படுகிறது

தமிழ்நாட்டில் சென்னை, கோவை போன்ற மாநகங்களில், குற்றங்களை குறைக்க, காவல்துறையினருக்கு வாட்ஸ் அப் பெருமளவில் உதவியாக இருக்கிறது. பொதுமக்கள் பிரச்சனைகளை தெரிவிக்க பகுதி வாரியாக போலீஸார் குழுக்கள் அமைத்து விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்தியாவசிய தகவல் தொடர்பில், வாட்ஸ் அப் முன்னணியில் இருக்கும் நிலையில், கடந்த 03-ந் தேதி வெளியிடப்பட்டிருக்கும் இந்த சுற்றறிக்கை எவ்வளவு நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்பது தெரியவில்லை. துணை நிலை ஆளுநர் கிரண்பேடியே வாட்ஸ் அப் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், முதலமைச்சர் நாராயணசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு இதுபோன்றதொரு கட்டுப்பாடு தேவையா என்பதை காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry