குற்றவாளிகளின் கூடாரமாகிறதா புதுச்சேரி பாஜக? சாமிநாதனிடம் விளக்கம் கேட்டு டெல்லி தலைமை நோட்டீஸ்!

0
9

புதுச்சேரி பாஜகவில் குற்றப்பின்னணி உடையவர்களை அதிகளவில் இணைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில தலைவர் சாமிநாதனுக்கு டெல்லி பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் பாஜகவை வளர்க்க டெல்லி மேலிடம் பல்வேறு ஆரோக்கியமான வியூகங்களை வகுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், முன்னாள் எம்.எல்.. தீப்பாஞ்சானும் பாஜகவில் இணைந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாஜக வலைவீசியுள்ளது. அண்மையில் புதுச்சேரி வந்திருந்த பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், டெல்லி தலைமையின் வியூகங்களை தவிடுபொடியாக்கும் விதமாக மாநில பாஜக தலைவர் சாமிநநாதன் செயல்படுவதாக நிர்வாகிகளும், தொண்டர்களும் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத பாஜக நிர்வாகி ஒருவர், “புதுச்சேரியில் எப்படியாவது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக டெல்லி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வ பலம்பொருந்திய நமச்சிவாயம் போட்டிக்கு வந்துவிடுவார் என்பதால், தேசிய தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என சாமிநாதன் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்.

குற்றப்பின்னணி உடையவர்களை கட்சியில் சேர்த்து, இணைப்பு விழா நடப்பதாக பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்கிறார். பத்திரிகைகளில் தமது போட்டோ, பெயர் வந்துவிட்டால், தான் முழுவீச்சில் செயல்படுவதாக கட்சித் தலைமை நம்பும் என அவர் நினைக்கிறார். குற்றப்பின்னணி இருப்பதாலேயே ஒருவரை தவறானவர் என நாங்கள் கூறவில்லை, சூழ்நிலை காரணமாக தவறு செய்யும் ஒருவர், பின்னர் திருந்தி சிறப்பான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழமுடியும், அவ்வாறு பலர் வாழ்கிறார்கள்.

அனைத்து கட்சியிலுமே குற்றப்பின்னணி உடையவர்கள் இருக்கிறார்கள். அந்த கட்சிகளைப் போல பாஜக அல்ல என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கட்சியில் இணைந்த குற்றப்பின்னணி உடையவர்களுக்கு கட்சியில் சாமிநாதன் பதவி கொடுக்கிறார். தேசிய தலைமைக்கு அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்து, கட்சிப் பதவி கொடுக்க சாமிநாதன் அனுமதி வாங்கினாரா என்பதுதான் எங்கள் கேள்வியே? ஏனென்றால், கட்சிக்கு சாதகமான செய்திகளை வெளியிடும் முன்னணி நாளேடுகள் கூட, சாமிநாதனின் செயல்பட்டை கண்டிக்கின்றன.

குற்றப்பின்னணி உடையோரை அதிக அளவில் சேர்த்து விளம்பரம் தேடுவதும், அவர்களுக்கு பதவி கொடுப்பதும், பற்றிய பத்திரிகை செய்தியை இணைத்து, புதுச்சேரி ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் டெல்லி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். சாமிநாதனின் இதுபோன்ற செயல்பாடு, கட்சி பற்றிய தவறான அபிப்பிராயத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும், இதே நிலை நீடித்தால் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு ஆளாவது மட்டுமின்றி, அவர்களது கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

கடிதம் கண்டு அதிர்ச்சி அடைந்த டெல்லி தலைமை, உடனடியாக விளக்கம் அளிக்குமாறு சாமிநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நியமன எம்.எல்..க்கள் செல்வகணபதி, தங்க விக்ரமராஜா மற்றும் நிர்வாகிகளுடன் சாமிநாதன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், மேலிட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, குற்றப்பின்னணியோடு சேர்ந்தவர்களை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறதுஎன்று விரிவாகக் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry