மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதா, இந்திய சினிமா துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது என படைப்பாளிகள் தெரிவிக்கின்றனர்.
ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவை பொதுமக்கள் கருத்திற்காக பத்து நாட்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டது. திரைத்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த Cinematograph Act-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்தப் புதிய வரைவுவானது, சில மாற்றங்களை முன்மொழியும் வகையில் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் சென்ஸார் போர்டு இணையதளத்தில் இந்த வரைவு பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின், பிரிவு 5பி(1)-ன் படி திரைப்படங்களை சான்றளிக்கும் வழிகாட்டுதலுக்கான கொள்கைகளில், ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், மத்திய அரசுக்கு அதனை திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. 2000-வது ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஏற்கெனவே அளிக்கப்பட்ட சென்ஸார் சான்றுகளை திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், இந்தப் புதிய வரைவு மசோதாவானது நீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசின் தலையீட்டிற்கு இடம் அளிக்கிறது.
இதுவரை திரைப்படங்களுக்கு மூன்று வகைகளாக சான்றிளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மக்களும் பார்க்கும் வகையிலான ‘யு‘ சான்று, 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் உடன் பார்க்கும் வகையில் ‘யு/ஏ‘ சான்று, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் படங்களுக்கான ‘ஏ‘ சான்று என வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் புதிய வரைவானது, வயது அடிப்படையிலான சான்றிதழை கொடுக்கப்போவதாக கூறுகிறது. அதாவது U/A 7+, U/A 13+ மற்றும் U/A 16+ என்ற வகையில் புதிய சான்றுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ஸார் சான்றுகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கான இறுதி அமைப்பாக இருந்த திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Film Certificate Appellate Tribunal) கடந்த ஏப்ரல் மாதம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட வரைவு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அடூர் கோபாலகிருஷ்ணன், கமல்ஹாசன் போன்ற மூத்த படைப்பாளிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Cinema, media and the literati cannot afford to be the three iconic monkeys of India. Seeing, hearing and speaking of impending evil is the only medication against attempts to injure and debilitate democracy. (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2021
இதற்கிடையே, இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இந்த வரைவு மசோதா மத்திய அரசுக்கு அதிகளவிலான அதிகாரத்தை அளிப்பதோடு, இது நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் சினிமாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல், Ministry of Information and Broadcasting ஆல் முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தங்களுக்கு எதிராக பிரபல இயக்குநர்கள் திவாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், விக்ரமாதித்ய மோத்வானே, ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், அபிஷேக் தாஹனே, ஃபாரன் அக்தர் உள்பட 1400 பேர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், சட்டத் திருத்தத்தை கைவிடுவதுடன், திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை மீண்டும் அமைக்க வேண்டும். இந்த சட்ட வரைவு, தணிக்கை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், சினிமா துறையின் மீது மத்திய அரசு உச்சபட்ச அதிகாரம் செலுத்த வழிவகுக்கும், கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry