ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் அதிரடி ஆபரேஷன்! ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பாயும் என தகவல்!

0
13

.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆபரேஷன் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கிறது.  

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தாலும், கட்சியின் நெம்பர் 2ஆகவே ஓ. பன்னீர்செல்வம் அறியப்படுகிறார். கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஓ. பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி லாவகமாகக் கையாண்டு வருகிறார். டெல்லி பாஜகவில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் காட்டிக்கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக முரண்டு பிடித்தாலும், கடைசியில் சரண்டர் ஆகிவிடுவார்.

சசிகலாவுக்கு எதிராக முதலில் தர்ம யுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், இப்போது மீண்டும் சசிகலாவின் விசுவாசியாக மாறியுள்ளார் என்றே தெரிகிறது. எனவே, சசிகலாவுக்கு ஆதரவாக அவர் தர்மயுத்தம் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எப்படியும் சசிகலாவின் கைப்பிடிக்குள் கட்சி வந்துவிடும், அப்போது தனது அதிகாரத்தை தக்க வைக்கலாம் என்பதே ஓபிஎஸ் கணக்காக உள்ளது.

எனவேதான், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுகளுக்கு ஓபிஎஸ் முடிந்த அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். பின்னர் வேறுவழியில்லாமல் சம்மதம் தெரிவித்து சரண்டர் ஆகிறார். சசிகலாவைப் போன்றே, டெல்லி பாஜக மேலிடம் தம்மைக் கைவிடாது என ஓபிஎஸ் உறுதியாக நம்புகிறார். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய செய்திகள் அவரது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, தேர்தல் நடக்கும் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள், பாஜக வலுவிழந்துள்ள மாநிலங்களின் எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே இந்த முறை எப்படியாவது தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார். இதற்கான நேரம் கைகூடிவிட்டதாகவே அவர் நம்புகிறார்.

தனது மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சராகிவிட்டால், கட்சியில் செல்வாக்கு செலுத்த முடிவதுடன், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரை எளிதாக சமாளித்துவிடலாம் என அவர் கணக்குப்போடுகிறார். ஆனால், டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் ஓபிஎஸ்.க்கு சாதகமாக இல்லை. தொண்டர்களிடத்திலும், பெரும்பாலான நிர்வாகிகள் இடத்திலும் ஓபிஎஸ்.க்கு செல்வாக்கு இல்லை என்று பாஜக தலைமை கருதுகிறது

இதற்கு மத்தியில், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு எதிரான அதிரடியாக நடவடிக்கைகளில் இறங்க திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது. லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி கந்தசாமி, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தங்களது ஆபரேஷனை தொடங்க கந்தசாமி சம்மதம் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.(கொரோனா 3-வது அலை உருவானால், இந்த நடவடிக்கை தள்ளிப்போகலாம்)

பழைய ஊழல் கோப்புகள் தூசுதட்டப்பட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய உள்ளதாம். திமுக தயார் செய்து வைத்துள்ள ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் அடங்கியுள்ளது. தம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ஓபிஎஸ், டெல்லியில் லாபி செய்வதாகக் கூறப்படுகிறது.

கட்சியில் செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், மகனுக்கு அமைச்சர் பதவி தராமலும், ஊழல் வழக்கிலிருந்து தம்மை காப்பாற்றாமலும், டெல்லி பாஜக மேலிடம் கைகழுவிவிடுமோ என ஓபிஎஸ் அச்சத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் பாஜக மேலிடத்தை சமாதானம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஓபிஎஸ் செய்து வருவதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனைகளை ஓபிஎஸ் கடந்துவிடுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry