‘ஜெய் பீம்’ என்ற தலைப்பு, வழக்கறிஞராக சூர்யா, இயக்குநர் ஒரு எழுத்தாளர், இவையெல்லாம் எங்கே படம் பிரசாரத்தனமாக இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், படம் தொடங்கிய முதல் காட்சியில் இருந்து இறுதி வரை, அத்தனையையும் சுக்குநூறாக அடித்து நொறுக்கி விட்டது ‘ஜெய் பீம்’.
1993ம் ஆண்டுவாக்கில் விருதாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் வசித்து வந்த இருளர் பழங்குடியைச் சேர்ந்த ராஜாகண்ணு (மணிகண்டன்), திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். இதன் பின்னணியையும் உண்மைத்தன்மையையும் தான் ‘ஜெய் பீம்’ திரையில் உயிர்பித்துள்ளது.
பாம்பு கடிக்கு வைத்தியம் பார்க்கும் ராஜாக்கண்ணு, அந்த ஊரின் அரசியல் பின்னணி கொண்ட செல்வந்தர் வீட்டில் பாம்பு பிடிக்கச் செல்கிறார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அந்த வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இதில் ராஜாக்கண்ணுவை சந்தேகிக்கும் போலீஸார், அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி செங்கண்ணி (லிஜோமோல் ஜோஸ்), தம்பி, அக்கா, உறவினர் இவர்களை பிடித்துச் சென்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.
இறுதியில் ராஜாக்கண்ணுவும் போலீஸாரிடம் சிக்கிக்கொள்ள, போலீஸாரின் லத்திகள் இன்னும் அகோரமாக அவர்களின் உடல்களில் தடம் பதிக்கின்றன. விசாரணை, கர்ணன் படங்களில் இடம்பெற்ற ஜெயில் காட்சிகளை விட ரொம்பவே உக்கிரமாகவும் உயிர்ப்பாகவும் இருக்கிறது. மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பார்க்க வேண்டிய காட்சிகள் இவை.
திடீரென ராஜாக்கண்ணு, அவனது தம்பி, உறவினர் மூவரும் சிறையில் இருந்து தப்பிவிட்டதாக போலீஸார் வழக்கை திசை திருப்புகிறது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் சந்துரு(சூர்யா) கையில் எடுக்கிறார். இறுதியில் நீதி வென்றதா? ராஜாக்கண்ணு கிடைத்தானா? இதுதான் கதை. இதனை திரைக்கதையில் கொண்டு வந்த விதத்திற்காக இயக்குநருக்கு பெரிய பாராட்டுகள்.
ஒரு இடத்தில் கூட பிரசார நெடி கலந்துவிடாமல் மிக கவனமாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். தமிழகத்தில் ரொம்பவே சிறுபான்மையான சமூகமான இருளர் பழங்குடியினர் மீது போலீஸார் நிகழ்த்தும் அதிகார அத்துமீறல்களையும், பொதுச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் ஒரே நேர்கோட்டில் அடுக்கி வைத்துள்ளார். கதை, திரைக்கதையில் இருக்கும் நேர்த்திக்கு நிகராக, வசனங்களும் உச்சந்தலையில் இறக்கிய ஆணியாக படத்திற்கு வலு சேர்க்கின்றன. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இயக்குநராக களமிறங்கும் போது சில சிக்கல்கள் இருக்கும். இந்தப் படத்தில் அப்படி எதனையும் சொல்லிட முடியாது.
படத்தின் நாயகன் மணிகண்டன் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயமாக இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுத் தரும். கூடவே அவரது கேரியரில் பெயர் சொல்லும் படமாகவும் அமையும். செங்கண்ணியாக லிஜோமோல் ஜோஸ், இவருக்கும் விருதுகள் உறுதி. மிகையில்லா நடிப்பில் அசல் பழங்குடியின பெண்ணாக மாறி அனைவரையும் அசரடிக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யா, பிரகாஷ்ராஜ் இருவரும் கிளாஸிக்கல் மாஸ்டராக அசத்தியுள்ளனர். சில இடங்களில் மட்டும் சூர்யா கர்ஜிக்கிறார், அவைகளை நீதிமன்ற காட்சிகளில் மறக்கடிக்கச் செய்துவிடுகிறார்.
ஐஜி பெருமாள்சாமியாக பிரகாஷ் ராஜ், விசாரணையில் சிக்கிய மூன்று போலீஸ்காரர்களையும் ஒரு பார்வை பார்த்தபடியே காவல்நிலையம் செல்லும் அந்தக் காட்சி மட்டுமே போதும். ராஜு முருகன், எம்.எஸ். பாஸ்கர், ராவ் ரமேஷ், ராஜாக்கண்ணுவை துவைத்து எடுக்கும் மூன்று போலீஸ்காரர்கள் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும், அதில் நடித்தவர்களும் அட்டகாசம்.
எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், காட்சிகள் அனைத்தும் அவ்வளவு எளிதாக கண்களை கடந்து செல்லாத வகையில் கட்டிப் போட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இருளர் பழங்குடியினர் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகள், கல்வி, பொருளாதாரம், சாதிய ரீதியாக அவர்களுக்கு நேரும் துயரங்களும் தேவையான இடங்களில் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயில் காட்சிகள், நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை காட்சிகள், அதில் அவிழும் மர்ம முடிச்சுகள் க்ரைம் திரில்லர் படமாகவும் ரசிக்க வைக்கிறது.
தேவையில்லாமல் வரும் பாடல்கள் திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. என்னதான் போலீஸாரும், நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளின் அதிகார கைப்பாவையாக இருப்பதாக நாம் கருதினாலும்; உண்மை அதுவல்ல, எல்லா இடங்களிலும் நல்லோர் பலரும் உளரே என நிரூபித்துள்ளது ஜெய் பீம். தமிழ் சினிமாவில் இனி த.செ. ஞானவேல் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுவார், இதனை அவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். சூர்யாவுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ‘ஜெய் பீம்’ மெகா வெற்றி. ஒருவேளை இந்தப் படம் அமேசான் அல்லாமல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் ‘அண்ணாத்த’வுக்கு போட்டியாக இருந்திருக்கும். உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்ட இந்தப் படம் அமேசான் பிரைமில் நாளை (நவ.2) வெளியாகிறது. படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
விமர்சனம் :- களந்தை அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர்
தொடர்புக்கு : kalandhai.abdulrahman@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry