சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்! உங்க அப்பனுக்கு அப்பனையே பாத்தவங்க! நாங்கள் சென்னைக்கு வந்தால் பிரச்னை பெரிதாகும்!

0
129

25 கோடி சத்ரியர்களின் உணர்வை ஜெய்பீம் திரைப்படம் மூலமாக புண்படுத்திய சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வதுடன், நாடு தழுவிய போராட்டமும் நடத்தப்படும் என ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, SRKS என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. லோகேந்திர சிங் கால்வி, மஹிபால்சிங் மக்ரானா, விஷ்வபந்து சிங் ரத்தோர், விஜேந்திர சிங் கல்யாண்த் ஆகியோர் இந்த அமைப்பை நிறுவி (2006-ம் ஆண்டு) நடத்தி வருகிறார்கள். ராஜபுத்திரர்களுக்கான இடஒதுக்கீடு, உரிய அங்கீகாரம் ஆகியவற்றுக்கான போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, ஜோதா அக்பர், பத்மாவதி ஆகிய படங்களுக்கு எதிராகவும் ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா போராட்டங்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா தேசிய தலைவர் மஹிபால்சிங் மக்ரானா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தென் இந்தியாவைச் சேர்ந்த வன்னிய குல சத்திரியர்கள் அக்னி வம்சத்தைச் சார்ந்தவர்கள், நாங்களும் அக்னி குலத்தவர்கள். எங்களுடைய சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ள சூர்யா அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்களுடைய அப்பனுக்கு அப்பனாக இருந்த சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் பத்மாவதி திரைப்படம் வெளியானபோது. தவறான காட்சிகள் புகுத்தப்பட்டுள்ளது என்பதை கூறி, இந்தியா முழுக்க நாங்கள் போராட்டம் செய்தோம்.

அவர்களை மன்னிப்பும் கேட்க வைத்தோம், ஆதிவாசிகளுக்காக போராடிய சத்ரிய குலத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளீர்கள். இதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், திட்டமிட்டு சத்ரியர்களை அவமானப்படுத்த வேண்டும் என நீங்கள் திரைப்படத்தை இயக்கி இருந்தால், நாங்கள் கண்டிப்பாக சென்னையை நோக்கி வருவோம், அப்படி நாங்கள் வரும்போது பிரச்சினை பெரிதாகும்என அவர் எச்சரித்துள்ளார்

இதனிடையே, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்பீம் திரைப்படத்தில் சத்ரியர்கள் அதாவது ராஜபுத்திரர்களின் உணர்வு புண்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெய்பீம் திரைப்படத்தில் சத்ரியர்களை தவறாக சித்தரித்துள்ள, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சூர்யாவை கண்டிக்கிறோம். சத்ரியர்களை வில்லனாக படக்குழு சித்தரித்துள்ளது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி படம் எடுக்கப்பட்டதாக இயக்குநர் கூறியுள்ளார். அதன்படி, நாயகன், பாதிக்கப்பட்டவர், காவல்துறை அதிகாரி ஆகியோரது பெயர்கள் மாற்றப்படவில்லை. ஆனால், இயக்குநர் த.செ. ஞானவேலும், தயாரிப்பாளரான சூர்யாவும், வில்லன் கதாபாத்திரமான காவல்துறை எஸ்.. பெயரை அந்தோணி சாமி(கிறித்துவர்) என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியுள்ளனர். காதாபாத்திரத்தின் பெயரை குருமூர்த்தி என வைத்துவிட்டு, குரு என அழைக்கப்படுகிறார். குரு என்பவர் நன்கு அறியப்பட்ட பிரபலமான சத்ரிய தலைவர் ஆவார்.

அக்னி கலசம் பொறிக்கப்பட்ட காலண்டரை வில்லன் வீட்டில் வைத்து ஒரு காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வில்லன் கதாபாத்திரம் அகனிகுல சத்ரியராக காண்பிக்கப்படுகிறது. இது, நாடு முழுவதுமுள்ள 25 கோடி சத்ரியர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது. சத்ரியர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சியை ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா வன்மையாகக் கண்டிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ராஜாக்கண்ணு மனைவியான பாதிக்கப்பட்ட பார்வதி குடும்பத்தின் நீதிக்காக போராடிய சத்ரியரான நிஜ ஹீரோ, கோவிந்தன் பெயரை படத்தில் குறிப்பிடவில்லை.

ஜெய்பீம் படக்குழு, குறிப்பாக படத்தை தயாரித்து நடித்துள்ள சூர்யா, 25 கோடி சத்ரியர்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். தவறினால் சூர்யாவுக்கு எதிராக, ஸ்ரீ ராஜ்புத் கர்ணி சேனா சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல், ஜெய்பீம் படத்தை தயாரித்து நடித்துள்ள சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு, மஹிபால்சிங் மக்ரானா அறிக்கையில் கூறியுள்ளார்.

மஹிபால்சிங் மக்ரானா வெளியிட்டுள்ள அறிக்கையில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே, அறிக்கையின் உண்மைத் தன்மை அறிய, வேல்ஸ் மீடியா சார்பில் அவரை தொடர்புகொண்டபோது, கடந்த 19-ந் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டதாகக் கூறினார்.

இதேபோன்று, டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், அகில பாரதிய சத்ரிய மகாசா, நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஜெய்பீம் படத்தில் அக்னிகுல சத்ரியர்களை வேண்டுமென்றே இழிவுபடுத்தியதற்காக தாங்களும், தங்களது தயாரிப்பு நிறுவனமும் பகிரங்கமாக மன்னிபுக்கடிதம் வெளியிட வேண்டும். இதுபோன்று சிறுமைப்படுத்துவதை, 125 ஆண்டு பழமையான அகில பாரதிய சத்ரிய மகாசா ஏற்றுக்கொள்ளாது, தங்கள் மீதும், தங்களது தயாரிப்பு நிறுவனம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். நாட்டின் பெருமையாக கருதப்படும் சவுகான், பரிகார், பார்மர் உள்ளிட்ட பிரபலமான அக்னிகுல சத்ரிய வம்சங்களை அவமதித்தற்காக நட்டஈடும் கேட்போம்என குறிப்பிடப்பட்டுள்ளது.

மவுனித்த புதுச்சேரி தலைவர்கள்

ஜெய் பீம் படம் தொடர்பாக சூர்யாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் தமிழகத்தில் அரசியல் களம் அதிர்ந்து கொண்டு இருக்கின்றது. வன்னியர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் களமாடி வருகின்றனர்

புதுவையில் 60 சதவீதத்திற்கும் மேல் வன்னியர்கள் உள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். வன்னியர்களின் ஆதரவு பெற்றவர் என்ற காரணத்தினாலேயே கட்சி ஆரம்பித்த 15 நாட்களில் ரங்கசாமி அரியணை ஏறினார். புதுவையில் வன்னியர்களின் காவலர், வன்னியர்களின் ஆதரவாளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் எவரும் ஜெய்பீம் படம் தொடர்பாக தங்களின் கருத்தை தெரிவிக்கவில்லை என்று வன்னிய சமூகத்தைச் சார்ந்த மக்கள் வருத்தப்படுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*