தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25, 26, 27-ந் தேதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமான நிலையில், வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 5-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டது.
கடந்த 15-ந் தேதி உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை கொட்டியது. கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் இதுவரையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஏரி, குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் நிரம்பியதால் பல மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில், அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்த மையம், “தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழகம் நோக்கி கடந்து வரும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 3.1 கி.மீட்டர் உயரத்துக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இலங்கையை கடந்து தெற்கு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த 5 நாட்களுக்கு கன மழையை எதிர்பார்க்கலாம். தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை (24-ந்தேதி) முதல் கன மழைக்கான வாய்ப்புள்ளது. 25, 26, 27-ந்தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*