முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் குறித்து கவிஞர் வெண்ணிலா தவறாக பதிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டி வரும் என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் என ஐந்து மாவட்ட மக்களின் கடவுளாக விளங்கும், மாமனிதர் கர்னல் பென்னிகுயிக்கின் இறவாப் புகழை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், கவிஞர் வெண்ணிலா என்பவர் பதிவிட்ட முகநூல் பதிவுக்கு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மறுப்பை எழுதிக் கொண்டே இருக்கிறோம்.
மறைந்த அந்த மாமனிதரோடு தன்னுடைய விமர்சனத்தை நிறுத்த மனமில்லாத இந்த கவிஞர், அவருடைய சொந்த ஊரில் அந்த மாமனிதருக்கு திருவுருவச் சிலை அமைத்து நம்முடைய நன்றியை காட்ட வேண்டும் என்று அறிவிப்பு செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் வம்புக்கிழுத்திருந்தார். இன்னும் கூடுதலாக, ஏதோ அதிகாரம் கைவரப்பெற்ற தேவதூதனைப் போல, தன் சொத்துக்களை இங்கிலாந்தில் விற்று வந்து அணை கட்டினார் என்கிற அறிக்கையின் வாசகத்தை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிமேதாவித்தனமாக அறிக்கை கொடுத்திருந்தார்.
இதே கவிஞர் வெண்ணிலா, முல்லைப்பெரியாறு அணை குறித்து நீரதிகாரம் என்கிற பெயரில் தொடர் எழுதிக் கொண்டிருக்கும் ஆனந்த விகடனே ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் வெளியிட்ட மறுப்பு கட்டுரையை, வெளியிட்டது என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஆனாலும் கவிஞருக்கு மனம் வரவில்லை. நாம் பொது வெளியில் சொல்லிவிட்டாயிற்று; இனி அது உண்மையாக இருந்தாலும்,பொய்யாக இருந்தாலும் அதைக் குறித்து வாய் திறக்காமல் இருப்பதுதான் நவீனம் என்று கனத்த மவுனத்தை பதிலாக்கிக்கொண்டார்.
கவிஞர் வெண்ணிலாவால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட அந்த மாமனிதர் கர்னல் பென்னிகுயிக்கினுடைய பேரப்பிள்ளைகள் அத்தனை எளிதில் உங்களை விடுவதாக இல்லை. எந்த ஆதாரத்தை கவிஞர் வெண்ணிலா அவர்கள் தமிழக முதல்வர் அவர்களிடம் கேட்டார்களோ ,அதைவிட கூடுதல் ஆதாரங்களோடு, காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் செல்வதற்கு அணியமாகி இருக்கிறோம்.
கவிஞர் வெண்ணிலா அவர்களுக்கு ஆதாரங்களை திரட்டி தந்த பேராசிரியர்களையும், பொறியாளர்களையும் ஒருமித்தே நீதிமன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் வர வைப்போம். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு, ஐந்தாவது தலைமுறை, இன்றைக்கு அந்த மனிதரால் இந்த ஐந்து மாவட்டங்களிலும் வாழ்வு பெற்றிருக்கிறது.
அணை கட்டப்பட்ட பிறகு இங்கு எத்தனையோ அரசுகள் மாறி இருக்கிறது. எத்தனையோ பெரிய மனிதர்கள் வந்து போயிருக்கிறார்கள். எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் எவராலும் விமர்சனத்திற்கு உட்படுத்த முடியாத அப்பழுக்கற்ற தன்னலமில்லாத ஒரு மாமனிதரை,தனக்கு புகழ் வெளிச்சம் தேடிக் கொள்வதற்காக புழுதி வாரித் தூற்றுவது என்பது அவரை மட்டுமல்ல, ஐந்து மாவட்டத்திலும், அவரால் இன்றளவும் வாழ்வு பெற்றுக் கொண்டிருக்கும் 90 லட்சம் மக்களை அவமதிப்பதாகும்.
படைப்பாளி, ஒரு சமூகத்தின் ஆன்மாவை செப்பனிடும் இன்ஜினியராக இருக்க வேண்டுமே தவிர, அவதூறுகளை அள்ளித் தெளித்து புகழ் வட்டங்களை உருவாக்கக்கூடிய பொய்யுரைக்கும் புழுகர்களாக இருக்கக்கூடாது. புனைவுக்கு பெயர்தான் கற்பனை எனப்படுவது,பொய்க்கு அது பொருந்தாது. வரலாறு என்று வந்துவிட்ட பிறகு, கற்பனைகளை அங்கே அள்ளித் தெளிப்பது என்பது, வரலாற்றை இழிவு படுத்தத்தான் உதவுமே தவிர, உண்மையை அங்கே எடுத்தியம்ப இயலாது என்பதை வெண்ணிலாக்கள் உணரவேண்டும்.
வரலாற்றை சம்பவங்களின் அடிப்படையில் எழுதுங்கள். கற்பனையை மூலமாக வைத்து புதினத்தை எழுதுங்கள். இரண்டையும் ஒன்றோடொன்று கலந்து எழுதி, கிழக்குக்கும் மேற்குக்கும் ஒரே பெயர்தான் என்று உளறிக் கொட்டாதீர்கள். இதுவரை கவிஞர் வெண்ணிலா அவர்கள் இந்த சமூகத்திற்கு செய்த இலக்கிய பங்களிப்புகளையெல்லாம் கேள்வி கேட்டு இருக்கிறது அவருடைய நான்கு வரிகள்.
இயந்திரத்தனமாக மனிதக் கூட்டம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதால், நம்மை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள். இதுதான் உளவுத்துறை மூலமாக முதலமைச்சருக்கு சென்று சேர்த்திருக்குமே என்கிற இறுமாப்போடு இனியும் கவிஞர் வெண்ணிலா அவர்கள் காலத்தை கடத்த நினைத்தால், கண்டிப்பாக சட்டம் தன்னுடைய கடமையை செய்தே தீரும். கவிஞர் வெண்ணிலா அவர்கள் ஒரு பெண் என்பதால் அவருக்கு சட்ட நடைமுறைகளில் இருந்து நாங்கள் விதிவிலக்கு கொடுத்துவிட முடியாது.
விதிவிலக்குகளை கேள்வி கேட்கும் துணிச்சல் நமக்கு வருகிறதென்றால், நாம் விதிவிலக்கானவர்களாக இருக்க வேண்டும். மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு விதிவிலக்கு.
எனவே ஐந்து மாவட்ட விவசாய சங்கம், பொது சமூகத்தின் முன்னால் இந்த இரண்டு கோரிக்கைகளை வைக்க விரும்புகிறது. 1)மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் பற்றி வெளியிட்ட கருத்துக்களை இழிவு செய்த கவிஞர் வெண்ணிலா அவர்கள், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். 2)முல்லைப் பெரியாறு அணை குறித்து பாரம்பரியமிக்க இதழான ஆனந்த விகடனில் கவிஞர் வெண்ணிலா எழுதி வரும் நீரதிகாரம் தொடரை விகடன் குழுமம் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு”. இவ்வாறு அறிக்கையில் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry