காங்கிரஸ் கட்சி புனரமைக்கப்பட வேண்டும்! 2024ல் பாஜக-வை வீழ்த்துவது சந்தேகமே! பிரசாந்த் கிஷோர் கருத்து!

0
152

காங்கிரஸுக்கும் என் மீது 100% நம்பிக்கை கிடையாது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது, பாஜகவை வீழ்த்த காங்கிரஸை புனரமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணரும், ஐ பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக அண்மையில் தகவல் வெளியானது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா போன்ற தலைவர்களை பிரசாந்த் கிஷோர் டெல்லியில் சந்தித்து பேசிய நிலையில், திடீரென அக்கட்சியில் இணையாமல் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இது குறித்து என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்துள்ளார். அதில், “மேற்குவங்க தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 5 மாதமாக காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்த பேச்சுவார்த்தை மிக தீவிரமாக நடந்தது. மே – செப்டம்பர் காலகட்டத்தில் எனது ஒவ்வொரு நிமிடத்தையும் அதற்காக செலவிட்டேன். மற்றவர்களை பொறுத்தவரையில் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றாக பணியாற்றுவதற்கு இரண்டு தரப்பும் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அது காங்கிரஸுடன் நடக்கவில்லை.

என்னுடைய தரப்பை எடுத்துக் கொண்டால், நான் ஏற்கனவே 2017 உ.பி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியபோது அந்த அனுபவம் மோசமாக இருந்தது. எனவே எனக்கு காங்கிரஸ் மீது சந்தேகம் இருந்தது. என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது. என்னுடைய பின்புலத்தை கருதி காங்கிரஸுக்கும் என் மீது 100% நம்பிக்கை கிடையாது.

நான் காங்கிரஸில் இணைய விரும்பியதற்கு ஒரு குறிப்பிட்ட தேர்தல் மட்டும் காரணமல்ல. அது காங்கிரஸை மீண்டும் மீட்கச் செய்வதற்கானது. காங்கிரஸ் கட்சியை நான் மதிக்கிறேன். காங்கிரஸ் இல்லாமல் ஒரு பயனுள்ள எதிர்க்கட்சி சாத்தியமில்லை. அதற்காக இதே தலைமையின் கீழ் இருக்கக் கூடிய காங்கிரஸை நான் குறிப்பிடவில்லை. பாஜகவை வீழ்த்த காங்கிரஸை புணரமைக்கப்பட வேண்டும். காங்கிரஸை வலுவிழக்கவிடக் கூடாது. ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ் தேவை.

2024ல் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமே. நாடாளுமன்றத் தேர்தலின் வெள்ளோட்டம் என அறியப்படும் உத்தரப் பிரதேச தேர்தலில் ஒருவேளை முடிவு வேறு மாதிரி வந்தாலும் கூட 2024ல் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமே. ஆனால், இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டு சாத்தியமா என்று கேட்டால் சந்தேகம் என்றே சொல்வேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எனக்கு ஒரு வலுவான எதிரணி தேவை. பாஜக-வானது இந்துத்துவா, தேசியவாதம் மற்றும் மக்கள் நலன் என்ற தளங்களில் வலுவாக நின்று கொண்டுள்ளது. அதை இரண்டு அம்சங்களிலாவது நாம் வீழ்த்த வேண்டும்.

பா.ஜ.க.வின் புகழுக்கு இந்துத்துவா காரணமாக மட்டுமல்ல. இந்துத்துவாவும் மிக முக்கிய கோட்பாடுகளுள் ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் தேசியவாதமும், மக்கள் நலனும் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்களாகும். குடும்பம் மற்றும் தனிநபர் நிலை வெளிப்பாடு, தேசியவாதம் மற்றும் இந்து மதம் இவை ஒன்றாக சேரும்போது, இது ஒரு வலிமையான கூற்றாக மாறுகிறது. மேற்கண்ட கூற்றுகளில் இரண்டையாவது சிறப்பாகச் செய்யும் திறன் எதிர்கட்சிகளிடம் இல்லையென்றால், பாஜகவுக்கு எதிரான வாய்ப்பு மிகக் குறைவு.

சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவின் செயல்பாடு குறைவாக இருப்பதற்கு தேசியவாதம் அங்கு எடுபடாததும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. அதே நேரத்தில் தேசியவாதம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் எந்த இடர்பாடும் இல்லாமல் பாஜகவின் கை ஓங்குகிறது” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry