அதிமுக பாணியில் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த திமுக அரசு! அடிப்படை உரிமைகளை தடுக்கும் அளவுக்கு எதற்காக அச்சம்?

0
157

குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அதிமுக-வை குறைகூறிவிட்டு, திமுக-வே தற்போது கிராம சபை கூட்டங்களை ரத்து செய்வது சரியா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொங்கல் தொகுப்பு குளறுபடியும் அரசின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 (குடியரசு தினம்) , மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி)  என ஆண்டுக்கு 4 முறை நடைபெறும்.

கோப்புப் படம்

இக்கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகிகளுடன் வருவாய், உணவு வழங்கல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதனையடுத்து கிராம சபைக் கூட்டம் கவனத்தை ஈர்த்தது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் அப்போதைய அதிமுக அரசு கிராம சபைக் கூட்டங்களை நடத்தவில்லை.

இதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தார். 24/12/2020 அன்று அவர் விடுத்த அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் “கிராம சபை” கூட்டங்கள் இனி “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1700 நிர்வாகிகள் – 16500 கிராமங்கள்/வார்டுகளை நோக்கி – மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும்  தொடரும். அதை இந்த முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியால் மட்டுமல்ல- எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று கூறியிருந்தார்.

கோப்புப் படம்

இதையடுத்து, மரக்காணம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் வார்டுசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம், இராணிப்பேட்டை தொகுதி அனந்தலை, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேவராயபுரம், கோபி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவலூர், கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட வ.குப்புச்சிபாளையம், இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டியப்ப கிராமணி தெரு, பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட சூடனூர் ஊராட்சி என பல ஊர்களில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார்.

சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்தவுடன், காந்தி ஜெயந்தி நாளான கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் பாப்பாபட்ட கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, வலுவான இந்தியா என்பது கிராமங்களில் இருந்து தான் உருவாக வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். அவரது கனவை நனவாக்கும் வகையில்தான் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என்றார்.

இதைத்தொடர்ந்து குடியரசு தினமான நாளை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக குடியரசு தின நாளன்று கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபைக் கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு, கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பி உறுதி செய்யவேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது திமுக ஆட்சி நடைபெற்றுவரும் சூழலில், கிராம சபைக் கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி நிதியில் செய்யப்பட்ட பணிகள், செலவினங்கள், என எந்த வரவு செலவையும் சரி பார்க்க முடியவில்லை. கிராம சபை கூட்டம் நடந்தால் மட்டுமே வரவு, செலவு சரிபார்க்க முடியும். ஆவணங்களை ஆய்வு செய்ய முடியும். ஊராட்சி நிர்வாகத்திடம் கேள்வி கேட்க முடியும். கோரிக்கைகளை தீர்மானமாகக் கொண்டு வர முடியும்.

கோப்புப் படம்

வரும் குடியரசு தினத்தில், கிராம சபை கூட்டம் நடைபெறும் என, மிகுந்த எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்தனர். இந்த கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என, அதிகாரிகள் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி தேவையற்றது, அது அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், மாநில சுயாட்சி என பேசும் திமுக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. கொரானா பரவல் காலத்தில்தான் சட்டமன்ற கூட்டத் தொடர்கள், நாடாளுமன்ற கூட்டம் ஆகியவை உள் அரங்குகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனாவைக் காரணம் காட்டி, சுமார் 50 பேர், வெட்டவெளியில் கூடி அதிகபட்சம் 2 மணி நேரம், கிராம வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து பேசுவது தடுக்கப்பட்டு உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்தது, பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்று இருந்தது, மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தாதது, ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்தது, நீட் தேர்வு விலக்கு, பெட்ரோல் விலை குறைப்பு, பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் புகார், மதுக்கடை பார் டெண்டரில் ஊழல் புகார் உள்ளிட்டவைகள் குறித்து கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்தே கிராம சபைக் கூட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry