‘இது மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட விவகாரம்’! மிரட்டி வாங்கப்படும் நிலம்! சபரீசன் பெயரில் ஆட்டுவிக்கப்படும் ரியல் எஸ்டேட் துறை!

0
2541

ஆங்கில எழுத்தொன்றின் பெயரில் இயங்கும் நிறுவனம், திமுக ஆட்சி அமைந்தவுடன் தனது ஆக்டோபஸ் கரங்களை ரியல் எஸ்டேட் துறையில் நுழைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. இதுதொடர்பாக ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரை.

‘மூக்கை நுழைக்கும் குடும்பம்… முரட்டு கமிஷன்… திடீர் சஸ்பெண்ட! ‘பத்திரப்பதிவுத்துறை பகீர் சர்ச்சைகள்’ என்கிற தலைப்பில், 23.01.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதில், முதல்வரின் மருமகன் சபரீசனின் பெயரைப் பயன்படுத்தி, ஆங்கில எழுத்தொன்றின் பெயரில் ரியல் எஸ்டேட் துறைக்குள் ஒரு நிறுவனம் தனி ஆவர்த்தனம் செய்வது குறித்து எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தைப் பற்றிப் பல்வேறு தகவல்களை நம்மிடம் கொட்டித் தீர்த்தார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள்…

‘‘சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏராளமான கட்டுமானங்களைச் செய்துவரும் அந்த நிறுவனம், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வேலைகளை முடித்திருக்கும். அரசுத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் பெயரைக் கேட்டாலே, அலறியடித்துக்கொண்டு பணிகளை முடித்துக்கொடுக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான பாலா, ‘முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர்’ என்று சொல்லியே காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள்” என்றவர்கள், பாலாவின் பின்னணி குறித்து விவரித்தார்கள்…!

ஜீ ஸ்கொயர் பாலா
பாலா

‘‘பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்திவந்த பாலாவின் உண்மையான பெயர் ராமஜெயம். அந்தக் கடை பண முறைகேடு விவகாரத்தில் சிக்கியதையடுத்து சென்னைக்கு வந்தவர், தனது பெயரை பாலா என்று மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். தமிழகத்தில் தொழில் தொடங்க முனையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, நிலத்தை வாங்கிக்கொடுப்பதில் மும்முரம் காட்டினார். அந்த நேரத்தில்தான், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கின் நட்பு இவருக்குக் கிடைத்தது. கார்த்திக், முதல்வரின் மருமகனான சபரீசனுக்கு நெருங்கிய நண்பர். கார்த்திக்குடன் சேர்ந்து பாலா ஆரம்பித்ததாகச் சொல்லப்படும் அந்தக் கட்டுமான நிறுவனம், கடந்த ஆட்சியில் சிப்காட் நிறுவனங்களுக்கு நிலங்களை வாங்கிக்கொடுக்கும் வேலையைச் செய்துவந்தது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் லைம்லைட்டுக்கு வந்த நிறுவனம், மொத்த ரியல் எஸ்டேட் துறையிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

ரியல் எஸ்டேட் தொழிலில் அப்ரூவல் மிகவும் முக்கியம். குறிப்பாக, டி.டி.சி.பி அனுமதி பெற்றால் மட்டுமே கட்டடம் கட்டி விற்க முடியும். இந்த அப்ரூவல் விவகாரத்தில் பிற நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஆதிக்கம் செலுத்துகிறது பாலாவின் நிறுவனம். இவரது நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அனைத்து அனுமதிகளையும் உடனடியாக வழங்கும் அதிகாரிகள், பிற நிறுவனங்களைப் பல மாதங்கள் அலையவிடுகிறார்கள். அனுமதிக்காகக் காத்திருக்கும் நிறுவனங்களிடம், ‘எங்களோடு இணைந்து பணிகளைச் செய்யுங்கள்’ என்று பேரம் பேசுவது பாலாவின் ஸ்டைல். பேரத்துக்குப் பணியாதவர்களுக்கு அப்ரூவல் மேலும் தாமதமாகும். இதற்கெல்லாம் பாலா, சபரீசன் பெயரைப் பயன்படுத்துவதுதான் சர்ச்சையாகியிருக்கிறது’’ என்றார்கள்.

பாலாவால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் நம்மிடம், ‘‘தமிழகம் முழுவதும் பாலாவின் நிறுவனம் இடங்களை வாங்கிக் குவித்துவருகிறது. அதற்கான பத்திரப்பதிவின்போது, ‘முதல்வரின் மருமகன் சபரீசனின் நிறுவனத்துக்காக வாங்குகிறோம்’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். பல இடங்களில் நிலத்தின் உரிமையாளருக்குப் பணத்தை முழுமையாகக் கொடுக்காமல், இடத்தின் மதிப்பில் ஐந்து சதவிகிதத்தை மட்டும் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசத்தில் மீதிப் பணத்தை இடத்தின் உரிமையாளர் கேட்டால், ‘உங்கள் இடத்தில் சட்டச் சிக்கல் உள்ளது’ என்று சொல்லியே கதறவிடுகிறார்கள். சமீபத்தில், சென்னை போரூர் பகுதியில் பிரபல ஐடி நிறுவனத்துக்கு இடம் வாங்கிக்கொடுத்தார் பாலா. ஆனால், இடத்தின் உரிமையாளருக்குத் தொகை போய்ச் சேரவில்லை. அவர் பணத்தைக் கேட்டபோது. ‘இது மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட விவகாரம்’ என்று மிரட்டும் தொனியில் சொல்ல, பரிதவித்துப்போன இடத்தின் உரிமையாளர் முதல்வரிடம் புகார் அளிக்கலாமா என்று யோசித்துவருகிறார்” என்றார்.

கார்த்தி மோகன் – சபரீசன்

நம்மிடம் பேசிய சி.எம்.டி.ஏ அதிகாரி ஒருவர், “சமீபத்தில் கோவையில் ஐடி நிறுவனத்தைக் கட்டுவதற்காக, பிரபல சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான இடத்தை வாங்க பாலா தரப்பு முடிவெடுத்தது. ஆலைத் தரப்பிடம் ‘மாப்பிள்ளைதான் உங்கள் இடத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்’ என்று பாலா தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். சர்க்கரை ஆலை உரிமையாளர் இது குறித்து சபரீசனிடமே கேட்க, “எங்களுக்கும் அந்த நபருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் அண்ணா நகர் கார்த்தியின் பெயரைச் சொல்லியும் அரசு அதிகாரிகளிடம் ஆதிக்கம் செய்கிறார் பாலா” என்றார்.

அண்ணாநகர் கார்த்தி மீதான புகார்கள் குறித்து அவரிடம் பேசினோம். “அந்த நிறுவனத்துக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதில் நான் பங்குதாரரும் இல்லை. பாலா எனக்குத் தெரிந்த நபர் மட்டுமே. தேவையின்றி என்னைப் பற்றித் தவறாக எழுதுகிறார்கள். உங்கள் ஜூ.வி-யில்கூட செய்தி வந்துள்ளது. எதுவாயினும் என்னை நேரடியாகத் தொடர்புகொண்டு கேளுங்கள். நான் ஓரிடத்தில் இருக்கிறேன். எனது பெயர் தேவையின்றி டேமேஜ் ஆகிறது. தேவையில்லாமல் எழுதி சிலர் மிஸ்யூஸும் செய்கிறார்கள்” என்றார்.

இந்தப் புகார்கள் குறித்து, சபரீசனைத் தொடர்புகொள்ள முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் சார்பாக பேசியவர்களோ, “கார்த்திக்கின் நண்பர் என்பது மட்டுமே பாலாவின் அடையாளம். சபரீசனுக்கும் பாலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்க, பாலாவைத் தொடர்புகொண்டபோது, நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவருக்கு விளக்கம் கேட்டு நாம் அனுப்பிய கேள்விகளுக்கும் பதில் வரவில்லை.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டபோது, “அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவர்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்று மட்டும் சொன்னார். நெருப்பில்லாமல் புகையாது… தக்க நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

நன்றி : ஜுனியர் விகடன்

சபரீசன் – செந்தாமரை பங்களா

பின்குறிப்பு:- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஒன்றரை ஏக்கர் பரப்பிலான சபரீசன்-செந்தாமரை பங்களா உள்ளிட்ட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதேநேரத்தில் சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக்கின் இல்லம், சென்னை நீலாங்கரையில் உள்ள ‘ஜீ ஸ்கொயர்’ பாலாவின் பங்களா மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry