தமிழக முதல்வரின் பெருந்தன்மையும்…! கேரள முதல்வரின் தமிழர் விரோதமும்! 5 மாவட்ட விவசாயிகளின் ஆதங்கம்!

0
118
பினராயி விஜயன்

அடாவடிகளை எல்லாம் கண்டும் காணாமல் பெருந்தன்மையோடு விட்ட தமிழக முதலமைச்சருக்கு, தோழர் பினராயி ஏற்படுத்திய அவச்சொல், ஐந்து மாவட்ட விவசாயிகளின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நடைபெற்ற தமிழக முதல்வர் அவர்களின் தன்வரலாறு நூலான உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு விருந்தினர், கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள்.

அன்வர் பாலசிங்கம்

அண்டை மாநில முதல்வர் என்கிற அடிப்படையில், அவர் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நடத்திவரும் தமிழர் விரோதப் போக்கை எல்லாம் உயர்ந்த எண்ணத்துடன் மன்னித்து, நிகழ்ச்சிக்கு அழைத்ததோடு, தனக்கு அருகாமையில் அமரவைத்து பெருமையும் படுத்தினார், பரந்த மனம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். இறுகிய மனதுடன் நிகழ்வுக்கு வந்தவர், தமிழக முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.

ஆனால் கடந்த நவம்பரில் இருந்து இதே கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள், தமிழகத்திற்கு எதிராக நடத்திய நாடகங்கள் சொல்லிமாளாது. கடந்த நவம்பர் 6 ஆம் தேதி நம்முடைய முதல்வர் அவர்கள், கேரள மாநில முதல்வருக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினார். வரலாற்றில் கேரள மாநில முதல்வர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது நன்றிக் கடிதம் இது.

இதற்கு முன்பு நெய்யாற்றின்கரை அணையைக் கட்டுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த கேரள மாநில முதல்வர் திரு. சங்கர் அவர்களுக்கு,பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எழுதிய கடிதம்தான் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்ற முதல் நன்றிக் கடிதம்.

2-வது நன்றி கடிதத்திற்கான நோக்கம்…! முல்லைப் பெரியாறின் பிரதான அணையிலிருந்து, பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்த கேரள மாநில அரசுக்கு, மனமுவந்து கூறிய நன்றிக்கான கடிதம்தான் நம்முடைய முதல்வர் ஸ்டாலினால் எழுதப்பட்டது.

பினராயி விஜயன்

கடிதம் கேரள மாநில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. கேரள மாநில இடதுசாரிகளின் வஞ்சகம் என்னவென்று தெரியாது, வெள்ளந்தியாக தமிழக முதல்வரால் எழுதப்பட்ட நன்றி கடிதம், கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் சாராம்சத்தை உணர்ந்துகொண்ட இதே கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள், வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரனை அழைத்து, மரம் வெட்ட அனுமதி அளித்தது யார் வினவி இருக்கிறார். வனத்துறை அமைச்சர் உடனடியாக நீர்வளத்துறை அமைச்சர் திரு ரோஸி அகஸ்டினை அழைத்து இது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க, அவரும் தெரியாது என்று சொல்ல, ரணகளம் ஆனது கேரள அரசியல்.

நவம்பர் 7ஆம் தேதி கேரள சட்டமன்றத்தில் மரம் வெட்ட அனுமதி அளித்தது தொடர்பாக ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, மரம் வெட்ட அனுமதி அளித்ததற்கு பின்னால் நிறைய மர்மங்களும், அவசரமும் இருப்பதாக அனல் கக்கினார் காங்கிரஸ் கட்சியின் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன்.

தமிழகம் 2015 ஆம் ஆண்டு விடுத்த கோரிக்கையை இப்போது நிறைவேற்ற வேண்டிய தேவை எங்கே வந்தது என்று கேள்வி எழுப்பினார் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான வி.டி. சதீசன். நிலைமை கைமீறிப் போகவே எதிர்க்கட்சிகளிடம் சரணாகதி அடையும் முடிவுக்கு வந்தார் தோழர் பினராயி விஜயன்.

அதாவது கேரள மாநில Principal Chief Conservator of Forest திரு பென்னிகன் தோமஸ், துறை அமைச்சரான ஏ.கே.சதீந்திரனையோ, நீர்ப்பாசனத் துறை அமைச்சரான திரு ரோஸி அகஸ்டினையோ அல்லது மாநில முதல்வர் அலுவலகத்திலோ எவ்வித கலந்தாலோசனையும் செய்யாமல், தன்னிச்சையாக இந்தக் கடிதம், கம்பத்தில் உள்ள பெரியாறு பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளருக்கு கொடுக்கப்பட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார் வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன். அப்போதும் விடவில்லை கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான வி.டி. சதீசன்.

கேரள மாநில வனத்துறை அதிகாரி எடுத்த முடிவு, முதல்வருக்கோ, மந்திரிகளுக்கோ தெரியாதாம். ஆனால் அது தமிழக முதலமைச்சருக்கு எப்படி தெரிந்தது என்றும் வினவினார். கூடுதலாக வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் அடிப்படையில், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பிறகுதான், மரம் வெட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஒரு வனத்துறை அதிகாரியால் இந்த முடிவை எப்படி எடுக்க முடிந்தது என்றும் கேள்விக்ணைகளை அடுக்கினார்.

எதிர்க்கட்சிகளின் தாக்குதலிலிருந்து தன்னை காத்துக் கொள்ள நினைத்த தோழர் பினராயி விஜயன், உடனடியாக மரம் வெட்ட அனுமதி வழங்கிய principal chief Conservator of forest பென்னிகன் தோமஸை பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார். ஆனால் வனத்துறை அதிகாரியான பென்னிகன் தோமஸ் அமைதி காக்கவில்லை. உடனடியாக ஒரு தன்னிலை விளக்கத்தை அரசுக்கும் தனது துறைக்கும் கொடுத்தார்.

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த தன்னிலை விளக்கத்தின் சாராம்சம் இதுதான்…! அக்டோபர் முப்பதாம் தேதி, வனத்துறை சார்பாக, நீர்ப்பாசனத் துறைக்கு, மரம் வெட்டுவது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பப்படுகிறது. அந்தக் கடிதத்தை மையமாக வைத்து, அதற்கு மறுநாள், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்ப்பாசனம்) தலைமையில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தை நடத்த சொல்லி அறிவுறுத்தியது சாட்சாத் இதே பினராயி தலைமையிலான அரசுதான் என்றும், கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்ப்பாசனம்) மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் சேர்ந்து எடுத்த கூட்டு முடிவுதான் இந்த மரம் வெட்டுவது தொடர்பான முடிவே தவிர, தன்னிச்சையாக தான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் உண்மைகளை வெளிப்படுத்தினார்.

இதைக் கண்டு எரிச்சலுற்ற கேரள மாநில வனத்துறை அமைச்சரான ஏ.கே. சசீந்திரன், மரம் வெட்டுவது தொடர்பாக , கம்பம் பெரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளருக்கு, பென்னிகன் தோமசால் அனுப்பப்பட்ட கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அண்டை மாநில முதல்வர், இடதுசாரிகளோடு கூட்டணியில் இருப்பவர், தான் ஒரே ஒரு எம்.பியை நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பிய நிலையில், மனமுவந்து 4 எம்.பி க்களை கூட்டணி தர்மத்தில் நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பி வைத்தவர் என்கிற எவ்வித சிந்தனையின்றி, ஒரு முதல்வர் எழுதிய கடிதத்தை தூக்கிப் போட உத்தரவிட்ட தோழர் பினராயி தான், நேற்றைக்கு முதல்வருக்கு அருகாமையில் அமர வைக்கப்பட்ட ஒரு நபர்.

கடந்த 2021 அக்டோபர் 29ல் வரையறுக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டிய நிலையில், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின், மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் தலைமையில் அணைக்குள் வந்த ஒரு கும்பல், சட்டாம்பிள்ளை தனமாக நீரைத் திறந்து விடுவதில், அதிகாரம் செலுத்தியதோடு, அதற்கு மறுநாளும் அணைக்குள் அத்துமீறி நடைபயிற்சி மேற்கொண்டார் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின்.

PINARAYI VIJAYAN

மலையாளிகளின் இந்த அடாவடிகளை எல்லாம் கண்டும் காணாமல் பெருந்தன்மையோடு விட்ட தமிழக முதல்வருக்கு, தோழர் பினராயி ஏற்படுத்திய அவச்சொல் ஐந்து மாவட்ட விவசாயிகளின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 23 மரங்களை எவ்வித அனுமதியும் இன்றி வெட்டிச் சாய்ப்பதற்குரிய அத்தனை அதிகாரமும், தமிழக அரசுக்கு இருக்கிறது.

ஆனாலும் கூட அதை கேரளாவின் ஒத்துழைப்போடு வெட்ட வேண்டும் என்று காத்துக் கிடக்கிறது தமிழக அரசு 40 ஆண்டு காலங்களாக. நடந்த இத்தனை கொடூரங்களையும் எளிதாக மறந்து விட்டு அண்டை மாநிலத்தோடு, நட்புறவுடன் இருக்க வேண்டும் என்கிற மனிதாபிமான அடிப்படையில், பெருந்தன்மையோடு நம்முடைய முதல்வர் அவர்கள், தோழர் பினராயியை அழைத்திருக்கலாம்.

இந்த மனிதாபிமானமும், பெருந்தன்மையும் தோழர் பினராயிக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து வரும் அத்தனை வகையான பொருட்களையும் அனுபவிக்கும் ஒவ்வொரு மலையாள சகோதரர்களுக்கும் வரவேண்டும் என்பதுதான் நம்முடைய ஆவல். இத்தனை தூரம் உங்களை உச்சி முகர்ந்த பிறகாவது, உங்களுடைய நடவடிக்கைகளில் மாற்றம் வருகிறதா என்று காத்துக் கொண்டிருக்கிறோம்…! தோழர் பினராயி அவர்களே…!. இவ்வாறு அன்வர் பாலசிங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry